MPR Films மற்றும் Skyline Cinemas சார்பில் மதியழகன், வீரம்மாள் தயாரிக்க, துருவன் மனோ , மீனாட்சி கோவிந்தராஜன், ஆர் கே சுரேஷ், ஆடுகளம் நரேன் , வித்யா பிரதீப் நடிப்பில் பித்தக் புகழேந்தி இயக்கி இருக்கும் படம்
இந்தியாவில் இருக்கும் இரண்டு முக்கியமான இயற்கையான போதைப் பொருட்கள் கஞ்சா மற்றும் போதைக் காளான். இந்த போதைக்காளான் அதிகமாக சிறப்பாக விளையாடும் இடம் கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் (கானல் என்றால் காடு என்ற பொருள்) என்று சொல்லி ஆரம்பிக்கிறார். படம் .
பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் புழங்கும் இந்தத் தொழிலைக் கைக்குள் வைத்திருக்கும் தாதா ஒருவன் (ஆர் கே சுரேஷ்) அவர் எடுத்து வளர்த்த மகன்கள் . அவர்களில் மூத்த மகன் (துருவன் மனோ) முக்கியமானவன் .
அந்த போதைக் காளான் சிறப்பாக விளையும் நிலம் ஒன்று ஒரு பணக்காரக் குடும்பத்தின் ஒரே வாரிசான ஒரு பேச்சு மாற்று திறனாளிப் பெண்ணிடம் (மீனாட்சி கோவிந்தராஜன்) இருக்கிறது .
சிறுவயதில் அப்பாவோடு வாழ்ந்த காலத்தில் அவர்கள் பயன்படுத்திய கார் இப்போது தாதாவின் மூத்த மகனிடம் இருக்கிறது . இவளுக்கு ஐந்து வயதில் நடந்த விபத்து அந்த காரிலேயே அப்பா (மனோ) இறந்து விட , இப்போது அந்த கார் தாதா மகனிடம் இருக்க, அந்த காரை அவள் விலைக்குக் கேட்கிறாள் . தர மறுக்கிறான் தாதாவின் மகன் .அதற்குப் பதிலாக என்ன வேண்டுமானாலும் தருகிறேன் என்கிறாள் . ஆனால் அவன் காரைத் தர மறுக்கிறானாம்,
ஒரு நிலையில் பணக்காரப் பெண், தாதாவின் மூத்த மகனைக் காதலிக்கிறாள் . அவன் கொண்டு வந்து கொடுத்தான் ,இனி யாரிடம் இருந்தால் என்ன காரைத் திரும்பி அவனிடமே கொடுத்து விடுகிறாள் . அவ்வளவு லவ் !
இதற்குப் பிறகும் அந்தப் பெண்ணிடம் இருந்து அந்த நிலத்தை எப்படியாவது பெற பல ‘திட்டங்கள்’ போடுகிறார்கள் .
ஒரு நிலையில் அந்தப் பெண்ணின் நல்ல எண்ணம் அவளது எஸ்டேட்டில் வேலை செய்யும் பயனாளிகளே தப்பாகப் புரிந்து கொண்டு அந்தப் பெண்ணுக்கு கெடுதல் செய்ய, அதன் பின்னணியில் இருப்பவர் யார் என்று தாதாவின் மூத்த மகன் யோசிக்க, நடந்தது என்ன என்பதே இந்தப் படம் .
எம் எம் ஆனந்தின் ஒளிப்பதிவில் படம் முழுக்க கொடைக்கானலில் அழகழகான பின்புலத்துடன் விகசிக்கிறது. வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளில் கூட கொடைக்கானலை உணர வைக்கிறார்கள் .
மாரீஸ் இசையில் பாடல்கள் பரவாயில்லை ராகம் .
டான் அசோக் சண்டைக் காட்சிகள் அதிரடி
பாடகர் மனோவின் மகன்தான் துருவன் . படத்தில் துருவனின் காதலியின் அப்பாவாக நடித்துள்ளார் மனோ .
மனோவின் ஆஜானுபாகுவான தோற்றம் அவருக்கு பலம் . ஆனால் முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் அவர் முகம் என்னவோ யானைக்கு தாடி வைத்தது போலவே இருக்கிறது .
ஆர் கே சுரேஷ் தனது வழக்கமான பாணியில் அழுத்தமாக ‘நடித்து’ இருக்கிறார்
மீனாட்சி கோவிந்தராஜன் , வித்யா பிரதீப் , ஆடுகளம் நரேன் சிறப்பாக நடித்துள்ளனர் .
பேச்சு மாற்றுத் திறனாளிப் பெண் , ஐந்து வயதில் சிறுமியாக இருக்கும்போது அவள் அறையில் இருந்த வண்ணத்துப் பூச்சி படம் , அவள் இருபத்தைந்து வயதில் மீண்டும் வரும்போதும் அப்படியே இருக்கிறது .
சரி அது கூட மெயின்டனன்ஸ் என்று எடுத்துக்கொள்வோம் . ஆனால அவள் ஐந்து வயதில் அந்தக் காரில் கீறி வைத்த ”ஐ லவ் யூ மாம் அண்ட் டாட்” என்ற வாசகம் இருபது வருடம் ஆகி , அந்தக் கார் துருவநிடம் இருக்கும்போதும் கா ரில் அப்படியே இருக்கிறது. அதை வேறு ஏக்கத்தோடு அடிக்கடி தடவிப் பார்க்கிறாள் . அவன் அதை பார்க்காமல் டைரக்டர் சொன்னபடி வேறு பக்கம் பார்த்துக் கொண்டான் கொண்டே நிற்கிறான் . ஹலோ மிஸ்டர் துருவன் . காரை சர்வீஸ் விடறது , எஃப் சி வாங்கறது எல்லாம் செய்யாம இருக்கிறது ரொம்பக் கெட்ட பழக்கம்
கொடைக்கானல் வட்டக்கானல். உலகின் தரமான போதைக் காளான் என்ற படம் ஆரம்பித்தபோது , அதன் பின்னால் உள்ள நெட் ஓர்க் , மாபியா, அரசியல் , பணக்காரர்கள் , அதனால் பாதிக்கப்படும் சமுதாயம் , ஒரு வித்தியாசமான பரபரப்பான படம் பார்க்கப் போகிறோம் என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் வழக்கமான காதல் , அப்பாவிப் பெண் ,அனாதைகள் செண்டிமெண்ட் என்று நிமிர்ந்தார். நமது தலையை அவர்களே அழுத்திக் குனிய வைக்கிறார்கள் .
அது மட்டுமல்ல, ஒரு யதார்த்தமான பிரச்னை பற்றிய படத்தில் கொஞ்சமும் லாஜிக் இல்லாதது கொடுமை .
சிறு வயதில் அந்தப் பெண்ணும் அவள் அப்பாவும் இருந்த காரை திருப்பிக் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் தருகிறேன் என்று அவள் சொல்லும்போது, ”கார் இந்தா, அந்த நிலத்தை எழுதிக் கொடு…” என்று நிலம் வந்திருக்கும்.
அதுதான் இல்லை.. அவள் அவனைக் காதலிக்க ஆரம்பித்த பிறகு கல்யாணம் முடிந்தால் சொத்து எல்லாம் அவர்கள் வசம் வந்து விடும் அப்போது அந்த நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள் கொண்டு , அவள் அந்த நிலத்தை யாருக்கு கொடுக்க நினைக்கிறாளோ அவர்களுக்கு அதே கொடைக்கானலில் வேறு நிலம் கொடுத்து விட்டால் போச்சு . ஏனென்றால் அவள் அப்பாவின் நினைவாக வாங்க ஏங்கிய காரையே அவனிடமே விட்டு வைக்கும் அளவுக்கு அவன் மேல் அவள் காதல் கொண்டிருக்கிறாள்.
அதையும் மீறி வித்தியாசமாகக் கதை சொல்கிறேன் என்று தொழிலாளர்களைத் தப்பாகக் காட்டுகிறார்கள் . (உண்மையில் நடந்த கதை என்று ஒரு சென்டிமென்ட் பிட்டைப் போடக் கூடாது)
கடைசியில் எல்லோரும் எல்லோரையும் வெட்டியோ குத்தியோ அடித்தோ கொலை செய்ய, அடுத்து நாம்தான் டோய் என்ற பயத்தோடு வெளியே வர வேண்டி இருக்கிறது
வட்டக் கானல் — கானல் நீர்