அப்துல் பாசித் சையத் தயாரிப்பில் அஷ்ரப் என்பவர் எழுதி இயக்கி நாயகனாக நடிக்க, ஜனனி சாமிநாதன் , கருணாகரன், உறியடி சிவா, ஆடுகளம் நரேன் , தேவி மகேஷ் உடன் நடிப்பில் வந்திருக்கும் படம்.
பெரும் தொழிலதிபரின் ( ஆடுகளம் நரேன்) மகன் வீராவுக்கு ( அஷ்ரப்) அப்பா சொல்கிறபடி அவரது பிசினைஸ் கவனித்துக் கொள்ள விருப்பம் இல்லை. அவனது காதலி (ஜனனி) , அவளது அப்பா, ஆகியோர் சொல்லியும் அவனால் மாறமுடியவில்லை. அவன் மனதுக்குள் ஒரு முள் இருக்கிறது.
அந்த முள்ளின் கிழிசலில் இருந்து தப்பிக்க , வாழ்வில் வித்தியாசமாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணும் வீராவுக்கு, கொடைக்கானலில் உள்ள மதிகெட்டான் சோலையில் இருப்பதாக சொல்லப்படும் தங்க மரத்தை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசை. நண்பன் கபிலன் (கருணாகரன்) மட்டும் அவனுக்கு உதவுகிறான்.
மதிகெட்டான் சோலைக்குள் போன யாரும் உயிரோடு வந்தது இல்லை என்பது வரலாறு. ‘அங்கே பேய்கள் இருக்கிறது . வேறு பல கொடிய சக்திகள் இருக்கின்றன’ என்று எல்லாம் சொல்லப்படுகிறது.
நண்பனால் வர முடியாத நிலையில் தான் மட்டும் கொடைக்கானல் போகிறான் வீரா. நண்பன் ஏற்பாடு செய்து தந்த கைடும் (உறியடி சிவா)கடைசி நேரத்தில் குழப்ப,
தனி ஒருவனாக மதிகெட்டான் சோலைக்குள் நுழைகிறான் வீரா. அங்கே அவனுக்கு என்ன நடந்தது? தங்க மரம் இருந்ததா? அதை அவன் பார்த்தானா? அவனுக்கு என்ன ஆனது ? என்பதே போட்டோகிராபர்.
படத்தின் முக்கியமான பலம் கொடைக்கானல் லொக்கேஷன். மதிகெட்டான் சோலை என்ற பிரமாதமான விஷயம். எனவே படம் ஆரம்பத்தில் மிக ஈஸியாகவே ஆர்வத்தை தூண்டுகிறது.
வீராவின் அம்மாவுக்கு வரும் நோய் , அது தொடர்பான காட்சிகள் , முதுமையான விரல்கள், அம்மா பற்றிய காட்சிகளை ஆரம்பித்த இடம், விதம்..
எது அல்லது எவர், எவர் அல்லது எவைக்கு தங்கம் என்று சொல்லும் அந்த ஏரியா அபாரம். சபாஷ்.
அரிதான மூலிகைச் செடிகள் போல ஒரு சில இடங்களில் வசனமும் அருமை.
ரயீஸ் அஹமத் ஒளிப்பதிவு அவ்வப்போது கவனம் பெறுகிறது.
எழுதி இயக்கிய வேகத்தில் உற்சாகமாக நடிக்கிறார் அஷ்ரப். அப்படியே மற்ற எல்லாரையும் தாண்டி ஜம்ப் செய்தால் தேவி மகேஷ் நடிப்பில் அசத்தி இருக்கிறார்.
நாயகி ஜனனி சாமிநாதன் வலுக்கட்டாயமாக நடிப்பது போல நடிக்கிறார்.
உறியடி சிவா பரவாயில்லை
ஆடுகளம் நரேன், கருணாகரன் எல்லாம் கொசு அடிப்பது போல நடித்து விட்டுப் போகிறார்கள்.
படத்தின் ஆரம்பத்தில் கிடைத்த சுவாரசியம் இரண்டாம் பகுதியில் நீடிக்கவில்லை. வந்ததே மீண்டும் மீண்டும் வருகிறது. சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.
உண்மையில் மதிகெட்டான் சோலை மர்மப் புதைகுழியாக இருப்பது ஏன்?
மதிகெட்டான் சோலையில் எல்லா பாதைகளும் ஒரே மாதிரி இருக்கும் . உள்ளே போய் விட்டால் வெளியே வர வழி தெரியாது. உள்ளே போதைக் காளன்உட்பட போதை ஏற்றும் பல தாவரங்கல் உண்டு. ஒரு நிலையில் பசி பயம் மற்றும் போதையில் உயிர் போய்விடும். உள்ளே போன எல்லாரும் செத்து விடுவது இல்லை. பிழைத்து வந்தவர்களும் உண்டு. இதுதான் கொடைக்கானலில் உள்ள நிஜ மதிகெட்டான் சோலையின் சூழல்.
படத்தில் அதை சொல்லாமல் எல்லாம் இல்லை . ஆனால் சரியாக , பரபரப்பு ஏற்படும் வகையில் சொல்லவில்லை.
கதாநாயகி கேரக்டர் தேவையே இல்லை இந்தப் படத்துக்கு. சொல்லப்போனால் நண்பன் கேரக்டர் கூட, கதையில் எதுவுமே செய்யாம ஒரு கேரக்டர் எதுக்கு.?
மற்ற விஷயங்களை எல்லாம் வார்த்தையால் சொல்லி விட்டு வீரா சீக்கிரமே காட்டுக்குள் போனதுதான் படம் தொய்வடைய முக்கியக் காரணம் .
மதிகெட்டான் சோலைக்குள் வேறு சிலருக்கு நடந்த அனுபவங்களை விஷுவலாக சொல்லி விட்டு,(இங்கே என்ன வேண்டுமானாலும் கதை விடலாம்) வீரா காட்டுக்குள் நுழைய முடிவு செய்தபோது இடைவேளை வந்து விட, அப்புறம் வீரா காட்டுக்குள் இறங்கி இருந்தால் ரகளையான இருந்திருக்கும். திரைக்கதையில் வீடு கட்டி விளையாடி இருக்கலாம்.
அதே நேரம் இன்னும் சிறப்பான திரைக்கதையும் அமைத்திருக்க வேண்டும்.
எல்லாம் தெரிந்த பிறகும் வீரா காட்டுக்குள் போவதற்கு இன்னொரு காரணமும் வேண்டும்.
இதெல்லாம் இருந்திருந்தால், இந்த ‘போட்டோகிராபர்’ ஒரு ஹிட் படத்தை எடுத்திருப்பார்