வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன் மற்றும் விஜய் மூலன், ட்ரை கலர் பிக்சர்ஸ் சார்பில் சரிதா மாதவன், மற்றும் ஆர். மாதவன் தயாரிக்க,
மாதவன், சத்யராஜ், ஜெயராம், துஷாரா விஜயன், பிரியாமணி, கருணாகரன் நடிப்பில் கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கி இருக்கும் படம் ஜி டி என் .
இந்தியாவின் எடிசன் என்றும் , வாழை மரத்தில் பலாப்பழம் பழுக்க வைத்த விஞ்ஞானி என்றும் , ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி அக்கு அக்காக பிரித்துப் போட்டு மீண்டும் பூட்டுவார் என்றும் வியந்து பாராட்டப்படுவதோடு…
தேசத் துரோகி, கள்ள நோட்டு அடித்தவர், கடைசியில் பைத்தியம் பிடித்து அலைந்தவர் என்றும் விமர்சிக்கப்பட்ட …
முக்கியமாக பிள்ளை , தேவர் போன்ற சாதி பெயர்களை பிரபலங்களின் பெயரில் இருந்து தூக்கிய திராவிட இயக்கத்தாலேயே தூக்கப்படாத அளவுக்கு நாயுடு என்ற சாதிப் பெயரோடு இன்றும் அந்த திராவிட இயக்கத்தாலே அறிமுகப்படுத்தப்படுகிற….
வியப்புக்குரிய மனிதர். கோபாலசாமி துரைசாமி நாயுடு என்ற ஜி டி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்தான் இந்த ஜி டி என்.
தமிழ் நாட்டு பள்ளிப் புத்தகங்களில் ஜி டி என் பற்றி இனியும் பாடம் வைக்கக் கூடாது என்று சில கல்வி அதிகாரிகள் சொல்ல , அது எவ்வளவு பெரிய தவறு என்று ஒரு பெண் அதிகாரி (அதிதி பாலன்) சொல்லும் பதிலாக படம் துவங்குகிறது
ஒரு குடிசை வீட்டில் வயதான காலத்தில் தனது நண்பர் ராமையா பிள்ளையோடு (சத்யராஜ்) வாழ்ந்து வருகிற ஜிடி நாயுடுவிடம் (ஆர். மாதவன்) , சுதந்திர இந்தியாவின் வருமான வரித்துறை அதிகாரிகள் (கருணாகரன் மற்றும் இருவர்) ஜப்தி நோட்டிஸ் கொடுத்து, ” ஐம்பத்தி இரண்டு டாகுமெண்ட்களை தரவேண்டும்” என்று சொல்லும் காட்சியில் துவங்கி , அதைத் தொடர்ந்து பிளாஷ்பேக்காக துவங்கும் படம் , அந்த முதல் காட்சிக்குப் பிறகு என்ன ஆனது என்று சொல்லி முடிகிறது.
ஜி டி என்னின் விவசாய வாழ்க்கை, வெள்ளைக்காரர் ஒருவரின் மோட்டார் வண்டி பார்த்து அதன் மேல் வந்த ஆர்வம் வந்து, அந்த மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்கியது , அதை பிரித்துப் போட்டுப் பார்த்து மெக்கானிசம் அறிந்தது…
பஞ்சாலையில் வேலை பார்த்துக் கொண்டே தலையில் பேன் ஈறு எடுப்பதை பார்த்து, பஞ்சில் இருந்து பருத்தி விதைகளை கண்டுபிடிக்கும் மிஷின் கண்டுபிடித்தது..
பஞ்சாலை வைத்தது , united motor service பஸ் கம்பெனி ஆரம்பித்தது, கூட்டுறவு பஸ் கம்பெனியாக மாற்றியது, அவரது மக்களுக்கு உதவியது , மோசமான சாலைகளால் வாகனம் பழுதாவதால் வெள்ளைக்கார அரசுக்கு வரி கொடுக்க மறுத்தது, பிரிட்டிஷ் அரசு அதை வரி ஏய்ப்பு என்று வஞ்சகமாக மாற்றியது…
ஜி டி என்னின் வளர்ச்சி பிடிக்காமல், வடநாட்டு தொழில் அதிபர் ஒருவர் , அம்பலப்பாறா கிருஷ்ணன் (ஜெயராம்) என்ற வருமானவரி அதிகாரி மூலம் ஜி டி என்னுக்கு குடைச்சல் கொடுத்தது…
ஹிட்லர் காலத்தில் ஜி டி என் ஜெர்மன் சென்றது.. காயம் ஏற்படாமல் ஷேவிங் செய்யும் ரேசரை கண்டுபிடித்ததோடு அதற்கு ரேசர் என பெயரையும் வைத்தது.. (ஜெர்மன் மொழியில் வேகம் என்று பொருள்) …
வெள்ளைக்காரர்கள் போன பிறகு வந்த சுதந்திர இந்தியாவில் வடக்கத்திய அரசியல்வாதிகளும் அவர்கள் ஏவிய மேற்படி அதிகாரிகளும் வெள்ளைக்காரர்களை விடவும் ஜி டி என்னை கொடுமைப்படுத்தியது,
தனது கண்டு பிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்காத விரக்தியில் அவர் நடந்து கொண்ட விதம்… தனது கண்டுபிடிப்புகளை தானே கொளுத்தியது ..
கடைசியில் அவரது எண்பது சதவீத சொத்துக்களை சுதந்திர இந்திய அரசாங்கம் முடக்க முயன்றபோது நடந்தது என்ன? என்பதே இந்த ஜி டி என் .
இப்படி ஒரு கதையை போரடிக்காமல் திரைக்கதை எழுதி கடும் உழைப்பைப் போட்டு படமாக்கி இருக்கும் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமாருக்கு பாராட்டுக்கள். சிறப்பான இயக்கம், படமாக்கல், நடிக நடிகையர் தேர்வு, என்று அசத்தி இருக்கிறார் . ஜி டி என்னின் ஒரு பஸ் பல பஸ்களாக பிரியும் அந்த சிஜி ஷாட்டும் அபாரம்.
ஆரம்பக்காட்சிகளில் ஜி டி என் எந்திரங்கள் மீது காட்டும் ஆர்வமும் அவரது அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளை சொல்லும் விதமும் இதுவரை வணிக சினிமாவில் கிடைக்காத அற்புத அனுபவம். அந்த பரவசம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. அந்த சுவாரஸ்யம் கடைசி வரை குறையவில்லை..
பிரிட்டிஷார் ஆண்டபோதும் பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்தபோதும் வட இந்திய தொழில் அதிபர்கள் தென்னிந்திய தொழிலதிபர்களை வளர விடுவதே இல்லை என்பதை தைரியமாக சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது.
பல்வேறு வயது தோற்றங்கள் , புகைப்படங்களில் பார்த்த ஜி டி என்னின் முகபாவனைகளுக்கு பொருத்தமான நடிப்பு மற்றும் தோற்றப் பொருத்தம் என்று பிரம்மாதப்படுத்தி இருக்கிறார் மாதவன். கிரேட் ஒர்க்.
ஜி டி என்னின் நண்பராக ராமையா பிள்ளை என்ற கேரக்டரில் பட்டாசு வெடிக்கிறார் சத்யராஜ் . செண்டிமெண்ட் , காமெடி , ரகளை என்று படத்தை இலகுவாக்குவதில் இவருக்கும் பங்கு உண்டு.
ஜி டி நாயுடுவை வீழ்த்துவதற்காக வட இந்திய தொழில் அதிபரால் (வினய்)ஏவப்பட்டு , அவருக்கு பல குடைச்சல்களை உண்மையாகக் கொடுத்து பின்னர் மனம் மாறியதாக காட்டப்படும் உண்மைக்கு மாறாக காட்டப்படும் அம்பலப்பாறா கிருஷ்ணன் பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் ஜெயராம்.
ஜி டி என் னின் இரண்டாவது மனைவி ரங்கநாயகியாக அசத்தலாக ஈடு கொடுக்கிறார் துஷாரா விஜயன்.
ஜி டி நாயுடுவை ஒழிக்கப் போராடியதாக கற்பனையாக உருவாக்கப்பட்டு காட்டப்படும் பெருங்கிள்ளி என்ற கேரக்டரில் மேலும் வெறுப்பு ஏற்படுத்தும்படி நடித்துள்ளார் கருணாகரன்.
முதல் மனைவி ரங்கநாயகியாக பிரியா மணி கவனிக்க வைக்கிறார்.
அரவிந்த் கமலநாதனின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம் .மாபெரும் உழைப்பு . பின்புல உருவாக்கத்தில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். கிடைக்க வேண்டிய லேசான 3D எபெக்ட் கிடைக்காத காரணத்தால் யதார்த்தமாக இல்லை .மற்றபடி பிரமாதம்.
கோவிந்த் வசந்தாவின் பாடல்களில் சத்து இல்லை என்றாலும் பின்னணி இசை கெத்துதான். பிஜித் பாலாவின் படத் தொகுப்பு படத்தை வேகமாக நகர்த்திக் கொண்டு போகிறது .ரஞ்சித் அம்பாடியின் மேக்கப் .. அம்மாடி! அசத்தலோ அசத்தல் !. சிரில் குருவில்லாவின் தயாரிப்பு வடிவமைப்பு இந்தப் படத்தின் பெரும்பலம்.
நிஜவாழ்வில் பெரியாருக்கும் ஜி டி என்னுக்குமான நட்பு ரகளையானது . ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெளியே கிளம்பும்போது மணியம்மை தயங்கி நிற்க, ஜி டி என் மணியம்மை கையைப் பிடித்து இழுத்து, பெரியாரை நோக்கித் தள்ளும் ரகளையான காணொளி ஒன்று சோஷியல் மீடியாவில் பிரபலம், அதை எல்லாம் படத்துக்குள் சொன்னால் இன்னும் கனமாக இருந்திருக்கும்.இப்போது படத்தின் நீளம் 2 மணி 27 நிமிடம்தான். ஒரு சுவாரஸ்யமான பயோபிக் படம் இன்னும் கொஞ்சம் நீளமாக இருக்கலாம்
இப்படி எல்லாம் யோசிக்கும் அளவுக்கு இந்தப் படத்தில் பாராட்ட பல விஷயங்கள் இருப்பது போலவே, இந்தப் படம் பல குறைபாடுகளையும் கொண்டே இருக்கிறது.
ஜி டி நாயுடுவின் நிஜ வாழ்வைப் பொறுத்தவரை அம்பலப்பாரா கிருஷ்ணன் கடைசி வரை ஜி டி நாயுடுவுக்கு வில்லனாகத்தான் இருந்திருக்கிறார். ஜி டி நாயுடுவை முடக்கியத்தில் பெரும்பங்கு அவருக்குத்தான்.
“…..அம்பலப்பாரா கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், ஜி.டி. நாயுடுவின் நிறுவனங்கள் மீது கடுமையான வரிகளை விதித்தும், சோதனைகள் நடத்தியும் அவருக்கு நெருக்கடி கொடுத்தனர்.பிரிட்டிஷ் இந்தியாவின் சட்ட திட்டங்களை மிகக் கடுமையாகப் பின்பற்றி, சுதந்திரப் போராட்ட எண்ணம் கொண்டவர்களுக்கும் உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கும் முட்டுக்கட்டை போடுவதே இத்தகைய அதிகாரிகளின் வேலையாக இருந்தது…” என்றுதான் நிஜ வரலாறு சொல்கிறது.
ஆனால் படத்தின் கடைசியில் அவர் , ஜி டி நாயுடுவை நல்லவர் என்று புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்டார் நெகிழ்ந்தார் என்று எல்லாம் படம் கற்பனையாக மாற்றி சொல்கிறது..
தவிர, நிஜத்தில் அம்பலப்பாரா கிருஷ்ணன் கேரளாவை சேர்ந்த மலையாளி கேரளா அந்த சமயத்தில் சேலம் வருவாய் கோட்டத்தில்தான் இருந்தது.(அப்போ கோயம்புத்தூரே சேலம் கோட்டத்துக்குள்தான்). எனவே ‘அம்பலப்பாரா கிருஷ்ணனுக்கு சேலத்து சிங்கம் என்று பெயர் இருந்தது’ என்று சொல்லி மடை மாற்றுகிறார்கள்.
படக்குழுவுக்கு அம்பலப்பாரா கிருஷ்ணனை வரலாற்றுக்கு உண்மையாக சித்தரிப்பதில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அது போகட்டும் .
ஆனால் ”அந்த குழந்தையே நீங்கதான் சார் ..” பாணியில் , அந்த அம்பலப்பாரா கிருஷ்ணனின் மகள் பத்மாவதிதான் பின்னாளில் ஜி டி என் பற்றிய பாடத்தை தமிழக பள்ளிப்பாட நூலில் வைக்க, அன்னந்தண்ணி புழங்காமல் போராடினார் என்று சொல்லி இருப்பதெல்லாம் ஒரு பயோபிக்குக்கு நியாயம் இல்லையே.
இப்படி ஜி டி என் நிஜ வாழ்வில் அவர்க்கு மண்டையிடி கொடுத்து மண்டையை உடைத்து அவரை முடியைப் பிய்த்துக் கொண்டு திரிய வைத்த ஆட்களுக்கு எல்லாம் பூசி மெழுகி சீன் வைத்து விட்டு , ஜி டி என்னுக்கு முதன் முதலில் தனது பருத்தி மில்லில் வேலை கொடுத்து அவரது வாழ்வில் பெரும் மாற்றம் வரக் காரணமான பெண்ணை ஜஸ்ட் வெள்ளை சேலைக் கட்டிய ஒரு கவுண்டச்சி என்று மட்டும் முடித்து விடுகிறார்கள். படத்தில் ஒரு காட்சியில் வரும் பல பாத்திரங்கள் கூட சரியாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கும்போது, சில காட்சிகளில் வரும் அந்த முக்கிய அந்த கேரக்டரையும் அடையாளப்படுத்தி இருக்கலாம்.
சரி அது கூடப் போகட்டும்.
ஜி டி என் னை வீழ்த்துவதற்காக பிரிட்டிஷ் காலம் முதல் சுதந்திர இந்தியா காலம் வரை வெறி கொண்டு அலைந்து கடைசியில் போடா நாயே என்று பெயர் வாங்கி கொண்டு போகும் பாத்திரத்துக்கு பெருங்கிள்ளி என்று முழுமையான கலப்பில்லாத தமிழ்ப் பெயரை வைத்து இருக்கிறார்கள் .
இன்னும் சரியாகச் சொன்னால் வரலாற்றில் இருந்த அம்பலப்பரா கிருஷ்ணனுக்கு பெருங்கிள்ளி என்ற தமிழ் பெயரை வைத்து களங்கம் சுமத்தி விட்டு, அம்பலப்பாரா கிருஷ்ணனை உத்தமர் என்று சொல்லி விட்டார்கள். ( பெருங்கள்ளி என்ற பெயர் தான் பெருங்கிள்ளி ஆகி விட்டது என்கிறார் இயக்குனர், அதற்காக வரலாற்றைக் கிள்ளி விட்டு நிஜ கள்ளியை நல்லவள் என்று சொல்லலாமா?)
படத்தின் மூலம் தமிழ்தான்.
ஜி டி என் ஆந்திராவிலோ கேரளாவிலோ பிறந்து வாழவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு உதவியது எல்லாம் (ராமையா உட்பட) தமிழர்கள் தான். ஆனால் அவருக்கு குடைச்சல் கொடுத்த நபரை நல்லவர் என்று சொல்லி விட்டு அந்த கேரக்டருக்கு கிள்ளி என்று சங்ககால சோழ மன்னரின் பெயரை வைத்ததுதான் இதை பேசுபொருள் ஆக்குகிறது.
ஜி டி என் என்பவர் ஒரு விஞ்ஞானி . அவர் வள்ளலாராகவோ புத்தராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அப்படி இருக்க அவரை அப்படியே வெளிப்படுத்த வேண்டும். அதுதான் அவருக்கும் பெருமை.
முதல் மனைவி இருக்க இரண்டாம் மனைவியை திருமணம் செய்வது அன்றைய யதார்த்தம். முதல் மனைவி கண்ணீர் விட்டுத்தான் இருப்பார். அதுதான் உண்மை. அப்படியிருக்க , முதல் மனைவி தானே விரும்பி ‘தகுதியான’ பெண்ணை ஜி டி என்னுக்கு திருமணம் செய்து வைத்தார் என்று வாசனை திரவியம் அடிக்கவே தேவை இல்லை. முதல் மனைவியே அப்படி செய்து இருந்தால் அப்புறம் அந்த முதல் மனைவி ஏன் ஜி டி என்னுடன் இருக்கவில்லை?. சரி அந்த முதல் மனைவி அப்புறம் என்னதான் ஆனார்?
ஜி டி என் மனநிலை பாதிக்கப்பட்டார் என்றால் அதையும் அப்படியே அவர் பைத்தியம் பிடித்து திரிந்தார் என்று சொல்வதில் என்ன தப்பு? ‘அடப் பரதேசிகளா! ஒரு விஞ்ஞானியை என்னடா பண்ணி வச்சீங்க?’ என்பது அப்போதுதான் எல்லாருக்கும் உறைக்கும்.
அதே போல பிரிட்டிஷ் இந்தியாவில் அவர் கள்ள நோட்டே அடித்து இருந்தாலும் அது தப்பு இல்லை. அது பிரிட்டிஷ் இந்தியாவின் பொருளாதாரத்தை முடக்குகிற சுதேசி இந்தியாவுக்கு நல்லது செய்கிற செயல்தான்
பிரிட்டிஷ் அரசு இந்திய வளங்களைச் சுரண்டுவதைதான் முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தது. எனவே அவர்களின் பணத்தை போலியாக அச்சடிப்பது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிதி நிலையை நேரடியாகப் பாதிக்கும் செயல். அது ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு மறைமுகப் பொருளாதாரப் போராகவே இருந்திருக்கும்.
போலி நோட்டுகள் புழக்கத்தில் வரும்போது பிரிட்டிஷ் அரசு தன் நிர்வாகத்தை நடத்தத் திணறி இருக்கும்..இதனால் அவர்களின் ராணுவம், காவல்துறை மற்றும் வரி வசூல் போன்ற அடக்குமுறை அமைப்புகளுக்குப் பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கும் .பிரிட்டிஷ் இந்திய அரசை பலவீனப்படுத்தியதன் மூலம் இது சுதந்திரப் போராட்டத்திற்கு மறைமுகமாக உதவி இருக்கும்.
உலக வரலாற்றில் பல விடுதலைப் போராட்டங்களில் எதிரி நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்த கள்ள நோட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது கூட நாஜி ஜெர்மனி, பிரிட்டிஷ் பொருளாதாரத்தை அழிக்க போலி நோட்டுகளை (Operation Bernhard) அச்சடித்தது. ஆக ஜெர்மனிக்கு போய் வந்த ஜி டி என் ,ஆக அதே உத்தியை பிரிட்டிஷ் இந்தியாவிற்கு எதிராக கள்ள நோட்டே அடித்து இருந்தாலும் அதை அப்படியே சொல்வதுதான் ஒரு பயோபிக்கின் நேர்மை.
அதனால்தான் உலக அளவிலான பயோபிக் படங்கள் பெரும் வரவேற்பு பெருகினறன. இங்கே ராக்கெட்ரி படத்தில் பிராமணர் அல்லாத நம்பி நாராயணனை பிராமணர் என்று சொன்னது போல, உண்மைக்கு எதிராகவோ தங்கள் வசதிக்கு ஏதாவது சொல்லி உண்மையைத் திரிக்கும் தவறை செய்து கொண்டே இருக்கிறோம்.
இப்படியாக உலக அளவில் வரும் வரலாற்றுப் படங்களில் இருக்கும் தெளிவும் தீர்க்கமும் நடுநிலைத்தன்மையும் இந்தப் படத்தில் இல்லை என்றாலும்
ஜி டி என் மிகவும் வித்தியாசமான அவசியமான ஆர்வத்தோடு பார்க்க வைக்கிற – பாராட்டுக்குரிய படம்.