செவன் ஹில்ஸ் சினி கிரியேசன்ஸ் சார்பில் ஷங்கர் மற்றும் சஹானா சங்கர் தயாரிக்க, அவர்களது மகன் சிவம் ஷங்கர் நாயகனாக நடிக்க, ஆல்ஃபியா , ஷரத், ஜிமிக்கிலி, அருள், காக்கா முட்டை ரமேஷ், சில்மிஷம் சிவா, சோப்ராஜ் ஆகியோர் நடிக்க, சேகர் கேஷவ் சிரின் எழுதி இயக்கி இருக்கும் படம் பிஸ்ஸா பாய்ஸ்.
”தமிழ்நாட்டில் இருந்து பிழைப்பு தேடி பெங்களூர் செல்லும் சிலர் அங்கே பிஸ்ஸா கடை வைக்கிறார்கள். இட்லி கடை வைத்து இருக்கும் பெண்ணின் நட்பு கிடைக்கிறது. இரண்டையும் ஒன்று சேர்த்து பிட்லி என்று ஒரு உணவை தயார் செய்கிறார்கள்.பீஸாவை இந்திய உணவுப் பொருட்களோடு சேர்த்து விதம் விதமான உணவுப் பொருட்களை தயாரிக்கிறார்கள். அவர்களுக்கு வியாபாரம் பிரமாதமாக நடக்கிறது .
இதனால் பெரிய பிஸ்ஸா கடை முதலாளி ஒருவரின் வியாபாரம் பாதிக்கப்பட, இந்தக் கடையை ஒழிக்க அவர் முயல, என்ன நடந்தது என்பதுதான் கதை” என்று, கதைச் சுருக்கம் சொல்கிறார் இயக்குனர்
ஷங்கர், தான் கர்நாடகவை சேர்ந்த தமிழர் என்கிறார். அங்கு பிசினஸ் செய்து வருகிறாராம்.”தமிழில்தான் படம் எடுக்க வேண்டும் என்று ஆசை .அதையே செய்து இருக்கிறோம்” என்கிறார்.
“மகனுக்கு சினிமாவில் நடிக்க ஆசை என்று தெரிந்த உடன் அவருக்காக படம் தயாரிக்க முன் வந்தோம்” என்கிறார் சஹானா சங்கர்
இசையும் அமைத்திருக்கும் இயக்குனர் “நானும் தமிழன்தான் . பூனாவில் பிறந்து வளர்ந்த தமிழன்” என்கிறார்.
என்னா புடுங்கப் போற என்று துவங்கும் பாடல் எல்லாம் காட்டினார்கள். படத்தில் வரும்போது அது “என்ன பண்ணப் போற ?” என்று மாறி விடும் என்றார் சங்கர் .
நாயகி ஆல்ஃபியா இதற்கு முன்பே ஒரு படத்தில் நடித்தவர் . ” ஆனால் அதில் பாடல்கள் எல்லாம் மான்டேஜஸ்களாக வரும் ஆனால் இந்தப் படத்தில் ஆடிப்பாடி நடிக்க வாய்ப்பு கிடைத்தது ” என்றார்
மென்மையாக ஆனால் அழுத்தமாக பேசும் நாயகன் சிவம் ஷங்கர் . ” இது கர்நாடகாவில் நடக்கும் தமிழ்ப் படம்.
இந்தப் படத்துக்காக இருபது கிலோ எடை அதிகரித்து , குறைந்து மீண்டும் அதிகரித்தேன்.
படத்தில் பாடல்கள் , சண்டைக்காட்சிகள் நன்றாக இருக்கும் . காமெடி நன்றாக வந்திருக்கிறது .
இளைஞர்களுக்கு முன்னேற வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும் படமாக இது இருக்கும் .
தமிழர்கள் என்பது உலகளாவிய ஓர் இனம். தமிழ்நாடு , கர்நாடகா, மலேசிய, சிங்கப்பூர் , இலங்கை என்று உலகம் எங்கும் உள்ள இனம். ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் இருவரும் எப்படி இவர்கள் எல்லோரையும் ஆண்டது போல, நான் சினிமா மூலம் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்க விரும்புகிறேன்” என்றார்.
அடடா ! ஒரு புது நாயகன் இவ்வளவு வரலாற்று அறிவோடு பேசுவது பெரிய ஆச்சரியம்தான் .
வாழ்க ! வளர்க!!