திருக்குமரன் என்டர்டைன்மெண்ட் சார்பில் சி வி குமார் தயாரிக்க,கலையரசன் . ஆனந்தி, ராகவ் விஜய், ஆஷ்னா சவேரி , காளி வெங்கட், மதுமிதா, காயத்ரி நடிப்பில் ஜானகி ராம் இயக்கி இருக்கும் படம்.
தனது கல்யாண ரிஷப்ஷனுக்காக பெங்களூர் போகும் சந்துரு ( ராகவ் விஜய்) , அருகருகே அமர்ந்து பயணிக்கும் பூமிநாதன், சூர்யா ஆகியோருடன் நட்பாகிறான். மூவரும் தங்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள்.
சந்துருவுக்கு ஒரு பெண்ணோடு காதல் இருந்து அது பிரேக்கப் ஆகி இருக்கிறது .
கிராமவாசி பூமிநாதன் ( காளி வெங்கட்) பள்ளிக் காலத்தில் காவேரி என்ற பெண்ணை (ஆனந்தி) அவன் ஒருதலையாகக் காதலிக்க… அவள், ” எனக்கு காதல் எல்லாம் இல்லை” என்று சொல்லி விட்டு, அவள் அப்பாவுக்கு டிரான்ஸ்பர் ஆன நிலையில் வேறு ஊருக்குப் போய்விடுகிறாள்
‘எத்தனை வருடம் ஆனாலும் உனக்காக காத்திருப்பேன்’ என்று சபதம் போட்ட பூமிநாதன், அடுத்த சில மாதங்களிலேயே அப்பா சொன்ன வேறு பெண்ணை ( ஜாங்கிரி மதுமிதா) கல்யாணம் செய்து கொள்கிறான். மனைவியிடம் பேச்சு வழக்கில் தன் முதல் காதலை சொல்ல, அதை வைத்து அவள் அடிக்கடி குத்திக் குத்திக் காட்ட, ஒரு நிலையில் கோபம் அதிகமாகி அவள் தனது அப்பா வீட்டுக்கு போய்விட, மனைவியை அழைத்து வரவே இப்போது பெங்களூருக்கு போய்க் கொண்டு இருக்கிறான் பூமி.
சூர்யாவுக்கு ( கலையரசன்) அவனது காதலிக்கும் (ஆனந்தி) எப்போதும் சண்டைகள். அவளுக்கு இயல்பாக இருக்கும் ஆண் நண்பர்களை இவன் வெறுப்பதோடு , ஆணாதிக்க சிந்தனைகளுடன் பேசுவது பிரச்னையாகிறது.
தவிர தனது தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று சூர்யா சொல்ல, திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்தபடி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று அவள் சொல்ல, வாக்குவாதத்தில் வார்த்தை தடித்து கன்னம் பழுத்து பிரேக்கப் ஆகி விடுகிறது.
மீண்டும் சந்தித்தால் மன்னிப்பு கேட்டு இணையலாம் என்பது சூர்யாவின் எண்ணம்
ரயில் பெங்களூரை அடைந்து விட , இருவரையும் ரிசப்ஷனுக்கு வரச் சொல்லி அழைப்பு வைக்கிறான் சந்துரு. அவர்களும் போக மேலே சொன்ன கதையில் உள்ள பல பெண்களும் ரிஷப்ஷனில் இருக்கிறார்கள். யார், என்னவாக ? என்ன நடந்தது என்பதே இந்த டைட்டானிக் காதலும் கவுந்து போகும் .
2016 ஆம் ஆண்டு இதே சி வி குமார் தயாரித்து பெரும் வெற்றி பெற்ற சிறப்பான படமான காதலும் கடந்து போகும் படத்தின் இன்ஸபிரேஷனில் துவங்கப்பட்ட படம் இது. நல்ல உத்திதான்.
இயல்பான நடுத்தர எளிய மனிதர்கள் , சில கதாநாயகிகள்,சில காதல்கள் , அதன் விளைவுகள் என்று கதையின் பிளாட் நன்றாக இருக்கிறது.
பல்லுவின் கலர்புல் ஒளிப்பதிவு நைஸ் . அதோடு கலை இயக்கம், உடைகள், வண்ணப் பயன்பாடு என்று இந்த காம்போ படத்துக்கு பெரிய பிளஸ். உதாரணம் , ங்கொக்கா மக்கா பாடல்
அடுத்த சிறப்பு நிவாஸ் கே பிரசன்னாவின் இசை. ”யாழினி…” பாடல் மெல்லிசை. ”ங்கொக்கா….” மக்கா துள்ளிசை .அதோடு படத்தில் எப்படியாவது காமெடியைக் கொண்டு வந்து விட வேண்டும் என்று பின்னணி இசை மூலம் போராடி இருக்கிறார்.
ராதாகிருஷ்ணன் தனபாலனின் படத்தொகுப்பு நேர்த்தி.
படம் முழுக்க ஆனந்தியின் கேரக்டர்தான் டிராவல் செய்து இருக்கிறது . நன்றாக நடிக்கிறார்.
நடிகர் சூர்யா போன்ற தோற்றத்தில் இருக்கும் ராகவ் விஜய் , இந்தப் படம் சரியான சமயத்தில் வந்து ஒரு வேளை ஓடவும் செய்து இருந்தால் பெரிய நடிகராக வந்திருப்பார்.
காளி வெங்கட்டை , பள்ளி மாணவனாகப் பார்க்கிற கொடுமையைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அவரும் , கலையரசனும் வழக்கம் போல நன்றாகவே நடித்திருக்கின்றனர்.
ஆஷ்னா சவேரி கவனிக்க வைக்கிறார். உற்சாகமாக நடித்திருக்கிறார் சுதா.
மிக எளிதாக யூகிக்க முடிந்த கிளைமாக்ஸ் .
காமெடி என்று எழுதப்பட்ட வசனங்கள் முக்கால் கிணறு கூட தாண்டாமல் பாதிக்கிணறு தாண்டிய நிலையிலேயே பள்ளத்துக்குள் பாய்ந்து விடுகின்றன.
காட்சிக்கும் கேரக்டருக்கும் சம்மந்தம் இல்லாமல் வம்படியாக வெளியே வந்து மேடை போட்டு மைக் வைத்து “அதாகப்பட்டது . நாங்க சொல்ல வருவது என்னன்னா..” என்று கருத்துச் சொல்லும் வசனங்கள் …
”ஆனா இந்தப் படம் சொல்ல வருவது என்னன்னா… ”என்று எந்த நோக்கமும் இல்லாததால் ,கடைசியில் ”சரி அப்புறம் …” என்று கேட்க வேண்டி இருக்கிறது.
பெங்களூரை ரயில் நெருங்கும்போது ரயில் மெதுவாக ஊர்கிறது. ஆனால் ரயில் வேகமாக செல்லும் சப்தத்தை அங்கே போட்டு இருக்கிறார்கள். மணமகள் யார் என்பதற்கு , நடிகை காயத்ரியை வைத்து டுவிஸ்ட் என்ற பெயரில் cheat செய்வது எல்லாம் நல்ல உத்தி இல்லை
ரத்தம் , வியர்வை, கண்ணீர், சளி , அழுக்கு, பிசுக்கு , புழுதி, அலறல், பிளிறல், முக்கல் , முனகல், இருமல், தும்மல்…… எதுவும் இல்லாத படம். என்பது எவ்வளவு நல்ல விஷயம் ?. எடுத்துக் கொண்ட கதைக்கு சரியான திரைக்கதை எழுதி நடிக நடிகையரை இன்னும் சரியாக பயன்படுத்தி நேர்த்தியான மேக்கிங்கோடு புரஃபஷனலாக எடுத்திருந்தால் இப்போதும் இந்தப் படம் கவனிக்க வைத்திருக்கும்
மொத்தத்தில், டைட்டானிக் : காதலும் கடந்து போகும் …… ரொம்ப லூசானிக்