ரிவால்வர் ரீட்டா @ விமர்சனம்

Passion Studios  மற்றும் The Route நிறுவனங்கள் சார்பில் சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிச்சாமி தயாரிக்க,  கீர்த்தி சுரேஷ், ராதிகா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, சென்றாயன், சூப்பர் சுப்பாராயன், அஜய் கோஷ், ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர்,சுரேஷ் சக்ரவர்த்தி, அக்ஷதா அஜித்,  குகாஸினி , காயத்ரி ஷான் நடிப்பில் ஜே  கே சந்துரு என்பவர் இயக்கி இருக்கும் படம் . 

பாண்டிச்சேரியின் தாதாவான டிராகுலா பாண்டியன் ( சூப்பர் சுப்பாராயன்) ஜெயபால் ரெட்டி (அஜய் கோஷ்) என்ற ஆந்திர தாதாவின் உறவினரை சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு கொன்று விட , பதிலுக்கு டிராகுலா பாண்டியனை கொலை செய்ய  திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறான் ரெட்டி. 

பாண்டிச்சேரியில்  மனைவி மகள்கள் என்று கண்ணியமாக வாழும் ஒரு நபர் , நிலம் வாங்கிய விஷயத்தில் ஏமாந்து பல கோடி இழந்து தற்கொலை செய்து கொள்கிறார். 

டிராகுலா பாண்டியனின் தலையைக் கொண்டு வருவோர்க்கு பல கோடி ரூபாய் பரிசு என்று அறிவிக்கிறான் ரெட்டி.  அதை ஏற்று பாண்டிச்சேரி லோக்கல் தாதா ஒருவன் (கல்யாண்) லல்லு (சுரேஷ் சக்கரவர்த்தி) என்ற பெண் புரோக்கரை வைத்து , டிராகுலா பாண்டியனை மயக்கி  அங்கே வைத்துக் கொன்று தலையை எடுக்க முயல்கிறான் . 

போதையில் டிராகுலா பாண்டியன் வீடு மாறிப் போய்விடுகிறார். அந்த வீடுதான் தற்கொலை செய்து கொண்டவரின் மனைவி (ராதிகா) மூத்த மகள் ரீட்டா  (கீர்த்தி சுரேஷ்) குடிகார கணவனுக்கு வாழ்க்கைப் பட்ட  மூத்த பெண் (காயத்ரி ஷான்) , இளைய மகள் (அக்ஷதா அஜித்) ஆகியோர் இருக்கிறார்கள். 

போதையில் டிராகுலா பாண்டியன் உள்ளே போய் தள்ளாட,  அம்மா அடித்த அடியில் பாண்டியன் உயிர் போகிறது  

லோக்கல் தாதா இதை தெரிந்து கொண்டு அந்த வீட்டுக்குள் போய் , பிணத்தை தூக்கி தலையை வெட்டி ரெட்டியிடம் கொடுத்து பணம் வாங்க திட்டமிடுகிறான் .  

ஆனால்  அதற்குள் பெண்கள் பயந்து பாடியை எங்காவது கொண்டு போய் வீச,ஒரு கார் வாங்குகிறார்கள் . பாண்டியனின் துப்பாக்கியை ரீட்டா எடுத்துக் கொள்கிறாள்   

லோக்கல் தாதவைக் கொன்று அந்த இடத்துக்கு வருகிறான் துணை தாதா ஒருவன்  
 போலீஸ்காரர் ஒருவரின் (ஜான் விஜய்)  அடாவடியை யூ டியூபில் போட்டாள்  என்பதற்காக ரீட்டா மீது அவர் கோபமாக இருக்கிறார். 

காரில் பிணத்தை மறைக்க ரீட்டா மற்றும் குடும்பம் காரில் பயணிக்க, ம் துணை தாதா, போலீஸ் , பாண்டியன் மகன் ஆகியோர் அந்தக் காரை துரத்துகிறார்கள் . காரணம் அந்தக் கார் டிராகுலா பாண்டியனிடம் இருந்து திருடப்பட்ட கார்.  அது ரீட்டா குடும்பத்துக்கு தெரியாது 
ரீட்டா அண்ட்  ஃ பேமிலிக்கு என்ன ஆனது? பாண்டியன் தலை யாருக்குப் போனது.? ரெட்டியால் தலையை வாங்க முடிந்ததா? என்பதே ரிவால்வர் ரீட்டா. 

டிராகுலா பாண்டியன் கொலை, ரீட்டா அப்பாவின் தற்கொலை இவற்றை சொல்லி விட்டு டிராகுலா பாண்டியனை பின் தொடர்கிறது திரைக்கதை . டிராகுலா பாண்டியன் இடம்  மாறிப் போவது , சாவது என்ற டுவிஸ்ட்டுகள் ஓகே தான் . ஆனால்  டீடெய்ல் செய்வதில் எதைக்  காமெடியாக சொல்வது எதை சீரியசாக சொல்வது என்பதில் பலத்த குழப்பம். 
இடைவேளை வரை இப்படியே போவதும் சீரியசாக ஒரு காமெடி படம் பார்க்கும் அனுபவம் கிடைக்கிறது. 

அதுவும் டிராகுலா பாண்டியன் செத்த பிறகு ரீட்டா வீட்டில் எல்லோரும் அந்தக் கால தூர்தர்ஷன் டிராமா போல பேசிக் கொண்டே  இருக்கிறார்கள்,  

அதே நேரம் காமெடிக்கு அப்பாற்பட்டு சில  திருப்பங்கள் அருமை. 

ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட சிலர் அவ்வப்போது லைட்டாக சிரிக்கவும் வைக்கிறார்கள் . 
எனினும் எவன் தலையைக் கொண்டு வருவான் எவன் சொல்வது உண்மை என்று மாறி மாறி வரும் போன்களால்   ரெட்டி சீரியசாக டென்சன் ஆவதுதான் நல்ல காமெடி. 

பாண்டியனின் உடல் அடிக்கடி இடம் மாறுதலில்  நடப்பது எல்லாம் தமிழ் சினிமாவில் ஐம்பது வருடங்களாக வந்து கொண்டிருக்கும் அதே காட்சிகள் . அதே நேரம் துப்பாக்கி முனையில் அடுத்தடுத்து பேசியே கீர்த்தி சுரேஷ் கொண்டு வரும் திருப்பங்களும் திடீர் காதலன் மாப்பிள்ளை  காமெடியும் சிறப்பு. 

ஆரம்ப காட்சியை கடைசியில் கொண்டு வந்து கோர்க்கும் விதமும் ஓகே . 

ஒரு காப்பி விளம்பரத்தில் ”கிச்சன் வரைக்கும் போயிட்டீங்க… அப்படியே காபியும்  [போட்டுட்டு வாங்களேன்…” என்று கீர்த்தி சுரேஷ் சொல்வாரே.. அதே போலத்தான் படத்திலும் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ் 

சீரியல்களில்  எல்லாம் இதை விட சிறப்பாக நடித்துள்ளார் ராதிகா .

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு ஓகே. ஷான் ரோல்டன் இசை, பிரவீன் படத்தொகுப்பில்   எல்லாம் கொண்டாட இந்தப் படத்தில் ஒன்றும் இல்லை. 

பொதுவில் இது ஒன்றும் தப்பான கதை இல்லைதான் . 

ஆனால்  ஒன்று இதை முழு சீரியசாக ஹீரோயினை  மையப்படுத்தும் படமாக செய்து இருக்க வேண்டும். 

அல்லது முழு காமெடியாக  எடுத்திருக்க வேண்டும். அதற்கு  ஒழுங்காக எழுதணும்.

சாதாரண டயலாக்கையே பிரபல நடிக நடிகையர் சும்மா ராகம் போட்டு சொன்னால் அது காமெடி ஆகாது.  ரெடின் கிங்ஸ்லி  தாடையை தொங்க விட்டபடி எதை சொன்னாலும் அது காமெடி ஆகிவிடாது.

எழுத்திலே காமெடி வர வேண்டும். அதை ஒரு பிரபல காமெடி நடிகர் நடிக்கும் போது அது பெரிதாக ஒர்க் அவுட் ஆகும்  

எழுத்தில் காமெடி இருந்தால் சின்ன நடிகர் நடித்தாலும்  ரசிக்கப்படும்  . ஆனால்  பிரபல நடிகர்கள் காமெடி என்று மொக்கைப் போட்டால் அதையும் ரசிகர்கள் ரசித்த காலம் ஒன்று இருந்தது . அது சினிமா தவிர வேறு இந்தப் பொழுது போக்கும் இல்லாத காலம் . இப்போ அது செல்லுபடியாகாது . 

தயாரிப்புத் தரத்தில் குறை சொல்ல ஒன்றும் இல்லை. 

மொத்தத்தில் ரிவால்வர் ரீட்டா….. ரீட்டா இருக்கிறார் . ரிவால்வரும் இருக்கிறது . ஆனால்  தோட்டாக்கள் எல்லாம் டம்மி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *