மறைந்த புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் நிழல் என்று வர்ணிக்கப்பட்டவர் ஆர் எம் வி என்று அழைக்கப்பட்ட இராம வீரப்பன். எம் ஜி ஆருக்குப் பின் ஜெயலலிதா அப்புறம் கலைஞர் என்று அரசியல் செய்த நீண்ட நெடிய அனுபவத்துக்குச் சொந்தக்காரர் . அருளாளர் என்று பெயர் பெற்றவர்.
அவருடைய வாழ்வின் சில துளிகளை ‘ஆர் எம் வி – தி கிங் மேக்கர்’ என்ற பெயரில் அவரது மகன் தங்கராஜ் தயாரிக்க, பினு சுப்பிரமணியம் என்பவர் இயக்கி இருக்கிறார்.
சுமார் இரண்டு மணி நேரம் ஓடும் இந்த ஆவணப்படம் ராம வீரப்பனின் இளமை காலம், அரசியல், சினிமா, ஆன்மிகம், மற்றும் பல்துறைப் பணிகளை கொஞ்சம் கூட போரடிக்காமல் விவரிக்கிறது.
முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், வைரமுத்து, இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், ஆராய்சசியாளர் கண்ணன், சத்யராஜ், சரத்குமார், எஸ் பி முத்துராமன், ஜெகத்ரட்சகன், கவிஞர் முத்துலிங்கம், சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் அவ்வளவு சுவாரஸ்யம்.
எஸ் பி முத்துராமனின் தந்தை காரைக்குடி ராம சுப்பையா. திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவர் . அவர் ஒரு முறை ஒரு மாளிகைக் கடையில் பெரியாரின் புகைப்படம் இருப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டு, அந்த பையனிடம் பேச, பெரியார் மீதான அவனது நேசம் புரிந்தது.
அவனிடம் பேசப் பேச அவன் ஆர்வம் புரிந்து பெரியாரிடம் அவனை அழைத்துப் போகிறார் ராம சுப்பு.அந்த பையன்தான் ராமா வீரப்பன்.
பெரியார் குடியரசுப் பத்திரிகையை விற்பனை செய்து கணக்கு வழக்கை ஒப்படைக்கும் பணியை வீரப்பனிடம் ஒப்படைக்க,அதை சரியாக செய்து ஒவ்வொரு பைசாவுக்கு கணக்கு வைத்து பெரியாரிடம் ஒப்படைக்கிறார். ‘ எவனுமே ஒழுங்கா கணக்கு தர மாட்டான். இவர் நேர்மையாக இருக்கானே ‘என்று வியந்த பெரியார் வீரப்பனை தனது குடியரசு அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார்.
திராவிடர் கழகத்தில் இருந்து விலகி அண்ணா கட்சி ஆரம்பித்த போது, அண்ணாவுடன் போகிறார் வீரப்பன்,
அங்கே வீரப்பனுக்கு எம் ஜி ஆர் அறிமுகம் ஆகிறார். எம் ஜி ஆரின் சினிமாவும் அரசியலும் கலந்த பாணி வீரப்பனுக்குப் பிடிக்கிறது . எம் ஜி ஆர் அண்ணாவிடம் ”வீரப்பனை எனக்கு கொடுத்துடுங்க” என்று வாங்கிப் போகிறார். அப்படி எம் ஜி ஆரின் தனி வட்டத்துக்குள் நுழைகிறார் வீரப்பன்.
இதை எல்லாம் எஸ் பி முத்துராமனும் வேறு சிலரும் சொல்வதைக் கேட்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.
சிவாஜியின் பராசக்தி வெற்றிக்குப் பிறகு, தமிழ் சினிமா புரண்டு எழுந்து புதுக் கோலம் காண்கிறது.
சமூகப்படங்களுக்கான காலம் வருகிறது .
அதற்கேற்ப எம் ஜி ஆரின் முதல் சமூக வெற்றிப் படமான திருடாதே படத்தை வடிவமைத்து வெற்றி பெற வைத்தது ஆர் எம் வி தான் .
எம் ஜி ஆர் பிக்சர்ஸ் பட நிறுவனத்தை எம் ஜி ஆர் துவக்கிய போது, அந்த நிறுவனத்தின் சின்னமாக, ஓர் ஆணும் பெண்ணும் கையில் திமுக கொடியை ஏந்திக் கொண்டு கம்பீரமாக நிற்பதை வடிவமைத்தவர் ஆர் எம் வி .
அதன் பிறகுதான் திமுகவுக்கு எம் ஜி ஆரும் எம் ஜி ஆருக்கு திமுகவும் தவிர்க்க முடியாத சக்திகளாக மாறின .
எம் ஜி ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவின் முதன்மை கதாசிரியராக இருந்து நாடோடி மன்னன், அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற வெற்றி படங்களுக்கு தனது பங்காளிப்பைத் தந்ததோடு , சத்யா மூவீஸ் என்று எம் ஜி ஆரின் தாயார் பெயரில், ஒரு திரைப்பட நிறுவனம் ஆரம்பித்து எம் ஜி ஆரின் மார்க்கெட் சற்று தொய்வடையும்போது எல்லாம் பிரம்மாதமான வெற்றிப் படங்களைத் தந்தவர் ஆர் எம் வி ”அந்த படங்கள் எல்லாவற்றிலும் கலர், உடைகள் எம் ஜி ஆரின் கெட்டப் எம் ஜி ஆரின் இமேஜுக்கு ஏற்ற காட்சிகள் என்று பார்த்துப் பார்த்து செய்தவர் ஆர் எம் வி என்று சொல்கிற சத்யராஜ் அடுத்து சொல்லும் செய்தி ஆச்சரியமானது .
“காக்கி சட்டை படத்தில் ஆரம்பத்தில் எனக்கு காட்சிகள் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் என் நடிப்பு பிடித்துப் போய் , அந்த கேரக்டரை பெரிது படுத்த ஐடியா கொடுத்தது ஆர் எம் வி அய்யாதான். அதன் பிறகுதான் தகடு தகடு வசனம் எல்லாம் வந்தது . என் மார்க்கெட்டும் எகிறியது” என்கிறார் சத்யராஜ்.
ஆய்வாளர் கண்ணன் கூறும் ஒரு தகவல் ஆர் எம் வி யின் விசுவாசத்துக்கு உதாரணமாக இருக்கிறது.
“எம்ஜி ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு கழுத்தில் மாவுக்கட்டோடு இருக்கும் புகைப்படத்தை தமிழமெங்கும் சுவரொட்டிகளாக ஒட்டும் ஐடியா ஆர் எம் வி அய்யா கொடுத்தததுதான் . அந்த வகையில் திமுக முதன் முதலில் பெற்ற வெற்றியில் ஆர் வி அய்யாவுக்கும் பங்கு உண்டு
கலைஞருக்கும் எம் ஜி ஆருக்கும் பிரச்னை வருவதை ஆர் எம் வி அய்யா விரும்பியதே இல்லை. எனினும் பிரச்னை வளர்ந்தது. ‘நான் நடிக்கிறேன் என் சம்பாத்தியத்துக்கு கணக்கு இருக்கிறது.ஆனால் மற்றவர்களுக்கு என்ன வருமானம்? எனவே திமுகவில் உள்ள அனைவரும் கணக்குக் காட்ட வேண்டும்.’என்று எம் ஜி ஆர் பேச , கடசியில் இருந்து எம் ஜி ஆர் நீக்கப்பட்டார் .
துடிதுடித்துப் போன ஆர் எம் வி, கலைஞரை சந்தித்து, அதை எப்படியாவது திரும்பப் பெற வற்புறுத்தினார். ஆனால் நிலைமை கை மீறி விட்டது என்று கலைஞர் சொன்னார். ஆர் எம் வி நினைத்து இருந்தால் கலைஞர் தரப்பிலேயே நின்று பதவி பெற்று இருக்க முடியும். ஏனென்றால் ஒரு நடிகர் எல்லாம் முதல்வராக வர முடியும் என்பது அப்போது யாருடைய கற்பனையிலும் கூட இல்லை.
எனினும் விசுவாசம் காரணமாக எம் ஜி ஆர் பக்கம் வந்தார். வந்து துரிதமாக புதுக் கட்சி ஆரம்பிக்கும் வேலைகளை பார்த்தார், கட்சி ஆரம்பித்த உடன் எம் ஜி ஆர் பேசிய முதல் வாசகம்” தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் . மீண்டும் தர்மமே வெல்லும் ” என்பதுதான். அதை எழுதிக் கொடுத்தவர் ஆர் எம் வீரப்பன். “என்கிறார் கர்ணன். (பின்னாளில் ஆர் எம் வி பயன்படுத்திய காலத்தின் கட்டாயம் என்ற வரியை பேசாத எழுதாத அரசியல்வாதிகள் என்று — கலைஞர் உட்பட – யாரும் இல்லை)
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனும் இந்தப் படத்தில் ஆர் எம் வீரப்பனை பாராட்டுகிறார் . ” நான் ராக்கெட் தொழில்நுட்ப விஷயமாக அவரை சந்தித்து இருக்கிறேன் . நான் கேட்ட விஷயங்களின் அவசியம் புரிந்து உடனடியாக செய்து கொடுத்தார் . அவருடைய ஆர்வமும் அனுபவ அறிவும் பிரம்மாதமானது . ராக்கெட் தொழில் நுட்பம் போன்ற விசயங்கள் அவருக்கு தெரியாதுதான் . ஆனால் சொல்வதை கூர்ந்து கவனித்து விஷயங்களை கிரகித்துப் புரிந்து கொள்ளும் அவரது நாலேஜ் அபாரமானது “என்கிறார் நம்பி நாராயணன்.
”குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை அப்போதே கூர்ந்து கவனித்து ‘நம்ம ராமநாதபுரம் பையன்யா. அறிவாளியாவதும் நல்லவராவும் தெரியுது . நாம அங்கீகாரம் கொடுப்போம் ‘ என்று , அப்துல் கலாமுக்கு ராமானுஜர் விருது கொடுத்து அவரை வெளிச்சத்துக்கு முதலில் கொண்டு வந்தது ஆர் எம் வி அய்யாதான் என்று கூறும் ஜெகத்ரட்சகன், ” ஸ்டாலின் முதல்வராக வருவார் என்று முதன் முதலில் சொன்னதே ஆர் எம் வி தான் ” என்கிறார்.
தொடர்ந்து ” எம் ஜி ஆர் இறந்த உடன் ஆர் எம் விதான் முதல்வர் என்று முடிவாகி எல்லா வேலைகளும் நடந்து கொண்டிருந்தன. ஆனால் வி என் ஜானகி அம்மையார் , தான் முதல்வர் ஆக வேண்டும் சொல்லி விட்டார். வேறு யாராக இருந்தாலும் ஒத்து கொள்ள மாட்டார்கள். ஆனால் மறுவார்த்தை பேசாமல் விலகி நின்றார் அய்யா ஆர் எம் வி. ‘நீங்கதான் பொருத்தமானவர்’ என்று கவர்னர் (குரானா) சொன்னபோதும் மறுத்து விட்டு ஜானகி அம்மையாரை முதல்வராக்கிய பண்பாளர் ஆர் எம் வி அய்யா “என்கிறார் ஜெகத்ரட்சகன்.
ஆர் எம் வி பற்றிய ரஜினியின் பேச்சு அபாரமாக இருக்கிறது.
“இன்னொரு பாட்ஷா முடியுமான்னு தெரியல. அந்தப் படம் வெற்றிக்கு முக்கியக் காரணம் ஆர் எம் வி அய்யாதான். படத்தின் காட்சிகள் அமைப்பு மற்றும் உருவாக்கத்தில் அவருடைய பங்கு அபாரமானது. ”நீ நடந்தால் நடை அழகு..” பாடலில் நான் வெவ்வேறு கெட்டப்களில் வருவேனே.. அதைப் பாராட்டாத ஆட்கள் யாருமே இல்லை. அந்த ஐடியா அவர் கொடுத்தது.
படத்தின் வெற்றி விழாவில் நான் கொஞ்சம் அவசரப்பட்டு வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசிட்டேன். அப்போ ஜெயலலிதா முதல்வர். அய்யா அவங்க அமைச்சரவையில் அமைச்சர். நான் பேசிய பேச்சுக்கு ஆர் எம் வி மறுப்பு தெரிவிக்கலைன்னு அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிட்டாங்க.
எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு. ஆனா அதுக்காக என் கிட்ட சிறு அதிருப்தியைக் கூட காட்டாத பண்பாளர் ஆர் எம் வி .
பாட்ஷா படம் எப்படி ஓடியதுன்னு சொல்ல வேண்டியது இல்லை.
ஒரு நிலையில நானே அவர் கிட்ட போய் பாட்ஷா செகண்ட் பார்ட் எடுக்கலாம்ன்னு சொன்னேன். வேற யாரா இருந்தாலும் சரின்னு சொல்லி இருப்பாங்க. ஏன்னா அதுக்கு அவ்வளவு வரவேற்பு இருக்கும் .
ஆனா சிரித்துக் கொண்டே ‘எதுக்கு ரஜினி? பாட்ஷா பாட்ஷாதான். ஆனா அது முடிஞ்சு போச்சு. இனிமே அது எதுக்கு? அதைவிட ரெண்டு மடங்கு பெஸ்ட்டா ஒரு படம் எடுத்துட்டா போச்சுன்னு சொன்னார். என்ன ஒரு கட்ஸ் பாருங்க.ஆனா அது நடக்கல என்பது எனக்கு வருத்தம்தான் ” என்கிறார்.
அதே பாட்ஷா படம் பற்றி சொல்லும் சுரேஷ் கிருஷ்ணா , ” பாலகுமாரன் ‘ஒரு வாட்டி சொன்னா நூறு வாட்டி சொன்ன மாதிரி’ன்னு தான் வசனத்தை எழுதி இருந்தார். ஆனா ஆர் எம் வி சார்தான் ‘ஒருவாட்டின்னு வேணாம். ரொம்ப சாஃப்டா இருக்கு ஒரு தடவை ன்னு வச்சுக்குங்க. வைப்ரேஷன் நல்லா இருக்கும்’ன்னு சொன்னார் ” என்கிறார்
சமஸ்கிருதத்தை அவர் வெறுக்கவில்லை. அதே நேரம் சமஸ்கிருதத்தை விட தமிழே சிறந்த மொழி என்று அவர் பேசியதை, அவர் கம்பன் கழகம் உருவாக்கிய கதையை எல்லாம் பலரும் பகிர்ந்து கொள்கிறார்கள் .
அறநிலையத்துறை அமைச்சராக அவர் ஆற்றிய பணிகள், ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தை அவர் கட்டி முடித்த விதம், காஞ்சிப் பெரியவர் ஆர் எம்வியை தன்னோடு நீராட வைத்தது என்று எத்தனையோ விஷயங்களை படம் பேசுகிறது .
பெரியாரின் தொண்டராக பொது வாழ்வுக்கு அறிமுகமான ஆர் எம் வியின் மரணத்துக்கு ஆர் எஸ் எஸ் இயக்கம் அஞ்சலி செலுத்திய செய்தியோடு படம் நிறைகிறது.
அது ஆர் எம் வீரப்பனுக்கு பெருமையா என்ற கேள்வி மட்டும் தொக்கி நிற்கிறது.
மற்றபடி விரைவில் திரைக்கு வர இருக்கும் ஆர் எம் வி – தி கிங் மேக்கர் படம் , அரசியல் வரலாறு ஆய்வர்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கு அல்வாத்துண்டு என்றால் மிகையாகாது.