கிளியர் வாட்டர் பிலிம்ஸ் ஐ என் சி, ஐ சினிமா , கேப்டன் மெகா என்டர்டைன்மென்ட் சார்பில்அரவிந்த் ஜெயபாலன், ஐயப்பன் ஞானவேல், கேப்டன் மேகவாணன் இசைவாணன் தயாரிப்பில்
அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ், அருண் , ஜெயசீலன், ஸ்ரீராம், விவியா சந்த், ஷெர்லின் சேத் நடிப்பில்
சி எஸ் கார்த்திகேயன் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம்.
யதார்த்தமான – வெள்ளந்தியான- நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிற – தனது இழப்புகளை விட மற்றவர்கள் கண்ணீருக்கு முக்கியத்துவம் தருகிற – காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிற ஒரு மேற்கு மண்டல இளைஞன் (அசோக் செல்வன்) வாழ்வில் வந்த பள்ளிக் கூட, கல்லூரிக் கால , கற்பனைக் காதல்களும் அவற்றின் செகண்ட் இன்னிங்க்ஸ்களும் ரிப்பீட்டேஷன்களும் அவற்றின் விளைவுகளும்….
ஒரு பெண்ணின் அன்பை காதலா அல்லது சட்டென்று கைவிட முடியாத நட்பா என்று புரிந்து கொள்ள முடியாத- அதிகாரம் உள்ள- ஒரு நபருக்கு ( மைக்கேல் தங்கதுரை) புரிய வைத்தலும் அப்புறம் ஒரு முடிவுமே இந்தப் படம் .
ஒரு படத்தைப் பற்றிப் பேச எழுத்து, நடிப்பு , கலை நுட்பம் , தொழில் நுட்பம் என்று பல விஷயங்கள் இருக்க,அவற்றை எல்லாம் மீறி எடுத்தவுடன் தயாரிப்பாளரை பாராட்டும் வாய்ப்பு அமைவது அதிசயம் . இந்தப் படத்தில் அது அமைந்து இருக்கிறது.
அப்படி ஓர் அருமையான அட்டகாசமான தயாரிப்புத் தரத்தைக் கொடுத்து இருக்கிறார்கள் அரவிந்த் ஜெயபாலன், ஐயப்பன் ஞானவேல், கேப்டன் மேகவாணன் இசைவாணன் மூவரும் . தயாரிப்புத் தரப்பில் இருந்து குறை என்று எதுவுமே சொல்ல முடியாத தரம் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது . வாழ்த்துகள் . பாராட்டுகள்.
படமாக்கலில் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதில் அசத்தி இருக்கிறார் அறிமுக இயக்குனர் சி எஸ் கார்த்திகேயன். எழுத்தும் சிறப்பு நகைச்சுவைப் பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருக்கின்றன.
அதிகம் பேசுகிற, அசட்டு , அப்பாவி இளைஞனாக உற்சாகமாக நடித்து இருக்கிறார் அசோக் செல்வன் .
பள்ளிக் கூடத்தில் துவங்கும் காதலின் நாயகியாக கார்த்திகா முரளிதரன் கவனம் கவரும் அறிமுகக் கதாநாயகி. டாம் பாய் மாதிரியான கல்லூரிக் காதலியாக சாந்தினி உற்சாகமாக நடிக்கிறார் . சஸ்பென்ஸ் காதலியாக வரும் மேகா ஆகாஷ் மெச்சூரிட்டியாகத் தெரியும் நடிப்பைத் தந்துள்ளார். லவ்லி.
அழகான கசின் சிஸ்டராக வரும் விவியா சந்த் .. அவரும் ஒரு கதாநாயகிக்கு சமம் .
பால சுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் என்று மூன்று ஒளிப்பதிவாளர்கள் . அதனால் அழகியல், யதார்த்தம், வறட்சி எது எது எல்லாம் எப்போது எப்போது தேவைப்படுகிறதோ, அது அது எல்லாம் அவ்வப்போது கிடைக்கிறது ஃபிரேம்கள். அருமை
லியோன் ஜேம்ஸின் இசையில் பாடல்கள் பின்னணி இசை எல்லாம் சிறப்பு . அதுவும் அந்தக் கல்லூரிக் காதல் பாட்டில் சும்மா பின்னிப் பெடல் எடுத்து இருக்கிறார்.
இயக்குனர், ஒளிப்பதிவாளர்கள் , கலை இயக்குனர் ஜி சி ஆனந்தன், காஸ்டியூம் டிசைனர் நிகிதா ராஜன், மேக்கப் மாரியப்பன்,கலரிஸ்ட் ஷண்முக பாண்டியன், இவர்களுக்கு இடையிலான தொழில்நுட்ப ஒத்திசைவு அபாரமாக இருப்பதால் ஒவ்வொரு காட்சியும் கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல ஜொலிக்கின்றன .
கல்லூரிக் காதலில் சச்சின் டெண்டுல்கர் சம்மந்தப்பட்ட காட்சியும் அடுத்து வரும் பாடலும் என்று அந்த ஏரியா , சும்மா ஜிவ்வென்று படத்தைத் தூக்கிக் கொண்டு போகிறது .அண்மைக் காலத்தில் மிகக் குறைந்த நேரத்தில் அப்படி ஒரு உற்சாகமாக வேகமும் உயரம் தொட்ட படத்தின் கதைப் போக்கு வேறு எந்தப் படத்திலும் அமையவில்லை. அட்டகாசம் .
ஆனால் கால் முதல் கழுத்துவரை கண்ணுங்கருத்துமாக சிலை வடிக்கும் ஒரு சிற்பி, தலைப் பக்கம் வரும்போது உளியை வைத்து விட்டு அம்மிக் குழவியால் அடித்து சிலையின் தலையை உடைத்தால் எப்படி இருக்கும் ? அப்படி..
தொடரப் போகிற ஒரு பாசிட்டிவான காதலுக்கு வைக்க வேண்டிய விஷயத்தை அந்தக் காதலுக்கு வைத்தது அதிர்ச்சி.
சில சமயம் படத்தின் ஒரு பகுதி மட்டும் ரொம்ப நன்றாக வருவது படத்துக்கே சிக்கல் ஆகும் என்பதற்கு அந்தக் காட்சி உதாரணம் . இடைவேளை சமயத்தில் வரும் காட்சிகளும் பாடலும் காமா சோமாவாக இருக்கக் கூடாது என்பதால் இயக்குனர் காட்டிய அதீத அக்கறை இன்னொரு வகையில் பின்னடைவாகப் போய்விட்டது .அதே போல தம் கட்டிக் கொண்டு எழுதிக் குவித்து, அப்படிக் குவித்ததை எல்லாம் எடுத்துக் குவித்து , எடுத்ததை எல்லாம் தொகுத்துக் குவித்து, அப்படி அவர்கள் தொகுத்துக் குவித்துப் போட்டதை எல்லாம் நம்மைப் பார்த்துக் குவிக்க வைக்கிறார்கள். (எடிட்டர் கணேஷ் சிவாவின் கைகளை இனிமேலாவது அவிழ்த்து விடுங்கள் பிளீஸ் ). அதனால் நல்ல நகைச்சுவையும் வறட்சியும் மாறி மாறி வருகிறது .
தேவைக்கு மேல் நீளும் காட்சிகள், வசனங்கள், ஷாட்கள், எக்ஸ்பிரஷன்கள்… அதனால் நீண்டு கொண்டே போகிறது படம். A good film is made between tables ( writing table to editing table ) என்பார்கள். ரெண்டு டேபிளிலும் பிரச்னை .
கடைசியில் வரும் அந்த தலைகீழ் திருப்பம் அருமை . நல்ல உத்தி . ஆனால் அப்படி ஒரு உத்தியைப் பயன்படுத்த இருக்கும் படம் அதற்கு முந்தைய நீளத்தில் ரொம்ப கவனமாக இருந்திருக்க வேண்டும். அது இல்லாத காரணத்தால் அழுத்தமாக சொல்லப்பட வேண்டிய அந்த இறுதிப் பகுதியை அவசரவசரமாகச் சொல்கிறார்கள் . அதனாலும் படத்துக்கு சேதாரம்.
கதை என்று எதுவும் இல்லாத – திரைக்கதை என்று ஒன்று இருப்பதாகக் கடைசி நேரத்தில் காட்டிக் கொள்கிற ஜஸ்ட் ஒரு sweet nothings படம் இது. அது ஒன்றும் தப்பில்லை . ஆனால் இன்றைக்கு அது போன்ற படங்கள் நீளத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும் .
படத்துக்கு வித்தியாசமாக பெயர் வைப்பது தப்பில்லை . ஆனால் பொருத்தமாகவும் இருக்க வேண்டும். இங்கே பொருத்தம் இல்லை.
என்னதான் அசோக் செல்வனின் மாணவ அவதாரம் பாராட்டுக்குரியது என்றாலும் கல்லூரிப் பசங்களுக்கு ஸ்கூல் யூனிபார்ம் போட்டு யுனிவர்சிட்டியில் உட்கார வைத்தது மாதிரி இருக்கிறது பள்ளிக் கட்சிகள்
நோக்கம் காமெடி என்றாலும் இந்தப் படத்தின் அடிப்படை காதல் .
ஆனால் படத்தில் காதல் வருவதற்கும் போவதற்கும் மீண்டும் வருவதற்குமான காரணங்கள் அபத்தம் அதுவும் சில பிரிவுகளை வசனத்தில் தூக்கி எறிந்து சொல்லி விட்டுப் போகிறார்கள் .
இப்படி சில குறைகள் இருந்தாலும்
படத்தின் துள்ளும் இளமை… கொப்பளிக்கும் உற்சாகம் .. அழகழகான பெண்கள்… ஆங்காங்கே அடித்து நொறுக்கும் நகைச்சுவை , வைத்த கண்ணை திரையில் இருந்து எடுக்க விடாமல் தடுக்கும் தொழில் நுட்ப மேன்மை.. தயாரிப்புத் தரம் ஆகியவை படத்தின் பெரும்பலம் .
” அய்யா.. நான் எந்த ரயிலைப் பிடிக்கவும் ஓடல. எனக்காக எந்த விமானமும் குளிர்ச்சியான பரபரப்போடு காத்திருக்கல. அரைமணி நேரம் அதிகமா படம் ஓடினா ஒரு குத்தமும் இல்ல… வன்முறை, ரத்தக் கறி, ஆளை அடித்துக் கொலை செய்வதற்கான விதம விதமான செமினார்கள், ஆபாசம், வக்கிரம் இவை யாவும் இல்லாத கலகலப்பான ஒரு படம் இருக்குன்னா .. அதுக்காக அரை மணி நேரம் என்ன … ஒரு மணி நேரம் கூட எக்ஸ்ட்ரா வச்சு அடிச்சுக்குங்க . சந்தோஷமா வாங்கிட்டு வாரோம். ” என்பவரா நீங்கள் ?
உடனே சபாநாயகன் படத்துக்கு கிளம்புங்கள் .
மொத்தத்தில் சபாநாயகன் ….. ஆளுமை பாதி .. அமளி துமளி மீதி