ஆர் கே என்டர்டைன்மென்ட் சார்பில் ரமேஷ் குமார் தயாரிக்க, சந்தானம், பிரீத்தி வர்மா, எம் எஸ் பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, வம்சி, குக் வித் கோமாளி புகழ், உமா, ரமா, வைஷ்ணவி மதுரை முத்து நடிப்பில் சீனிவாசராவ் இயக்கி இருக்கும் படம் சபாபதி.
யாருடைய வாழ்க்கையில் வேண்டுமானாலும் விளையாடும் திறம் கொண்ட இறைவன், சபாபதி (சந்தானம்)என்கிற திக்குவாய் உள்ள -நேர்மையான நபர் மீது விளையாடும் நவீன திருவிளையாடலே இந்த படம்.
கண்டிப்பான தமிழ் வாத்தியார் (எம் பாஸ்கர்) பாசமுள்ள அம்மா (உமா) மற்றும் தங்கை ( வைஷ்ணவி) என்ற குடும்பம் கொண்ட சபாபதிக்கு திக்குவாய் காரணமாக வேலை கிடைக்கவில்லை. ஆனால் அவனது அப்பா அதை அவனது திறமைக்குறைவாக எண்ணுகிறார் .
ரிட்டயர்டு ஆன பிறகு வீட்டில் மரியாதை இழந்த நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி வீட்டில் ரொம்ப கடுமையாக நடந்து கொள்கிறார் . அதுவும் பிரச்னைக்கு காரணம்.
சிறுவயது முதல் எதிர் வீட்டில் குடியிருக்கும் சாவித்திரி என்ற பெண்ணுக்கும் (பிரீத்தி வர்மா) சபாபதிக்கும் காதல். ஆனால் சாவித்திரி அம்மாவுக்கு (ரமா ) இதில் உடன்பாடு இல்லை. எனவே அங்கும் சிக்கல்.
இந்த நிலையில் லக்கி ராஜா என்ற அரசியல்வாதி ( ஷாயாஜி ஷிண்டே) தேர்தல் சமயத்தில் மக்களுக்கு கொடுப்பதற்காக வைத்து இருந்த பணம் இருபது கோடி ரூபாய் ஒரு விபத்தில் சபாபதி கையில் கிடைக்கிறது .
அப்புறம் என்ன ஆச்சு என்பதே சபாபதி .
திக்குவாயால் பாதிக்கப்படும் நபராக நெகிழ்வை உண்டாக்கிறார் சந்தானம் . தகப்பனை அவமானப்படுத்துவது என்ற விஷயம் உறுத்தினாலும் எம் எஸ் பாஸ்கர் , சந்தானம் காட்சிகளில் காமெடி ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகிறது.
வசனம் செறிந்த படம் என்றாலும் தனது சிறப்பான ஒளிப்பதிவால் கவனம் கவர்கிறார் பாஸ்கர் ஆறுமுகம்.
இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையும் சிறப்பு.
கதாநாயகி ஒகே ரகம் .புகழ் நடிப்பால் படத்துக்குப் பலன் இல்லை. ஒப்பிடுகையில் ஓரிரு காட்சியில் வரும் மதுரை முத்து கலகலக்க வைக்கிறார் .
குடும்பம் , பொறுப்பு, நேர்மை, நியாயமான கோபம் என்று நல்ல விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதி இயக்கி இருக்கிறார் சீனிவாச ராவ்.
‘அவன் ஏமாத்துனா நீயும் ஏமாத்து , நேர்மையாக இருந்தால் எல்லாம் பிழைக்க முடியாது ‘என்று நேரடியாக சொல்லும் படங்கள் வரும் காலத்தில் நல்லவன் வாழ்வான் என்று முடிகிற ஒரு படத்தை பாசம், காமெடி , கலர்புல்லான காட்சிகள் என்று உருவாக்கி இருபதற்கே அவரை பாராட்டலாம்.
இயக்குனரே நடித்து இருக்கும் அந்த கிளைமாக்ஸ் காட்சி நெகிழ்ச்சி ப்ளஸ் மகிழ்ச்சி .
தயாரிப்பாளர் ரமேஷ் குமாரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து கவனிக்க வைக்கிறார் .
சபாபதி .. மனசுக்கு இதமான பதி.
