திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சி வி குமார் , ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் சுரேந்திரன் ரவி தயாரிக்க, சதீஷ் குமார், மிருனாளினி ரவி, வேலு பிரபாகரன், தீபா, ஹரீஷ் பேராடி நடிப்பில் மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கி இருக்கும் படம் ஜாங்கோ.
வேலைக்காரியால் (தீபா)காலிங் பெல் அடித்து எழுப்பப்பட்டு – மருத்துவமனைக்குப் போவதற்கு முன்பு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்து விட்டு, அங்கே தன்னை பேட்டி எடுக்கும் கேள்வியாளராக இருக்கிற , பிரிந்து வாழ்கிற மனைவியை (மிருணாளினி ரவி), பேட்டி முடிந்ததும் சமாதானப் படுத்த முயன்று தோற்று , மருத்துவமனைக்கு வந்து , சிக்கலான ஒரு அறுவை சிகிச்சையை ஒரு சிறுமிக்கு சக டாக்டரின் பொறாமையையும் மீறி செய்து விட்டு இரவில் காரில் வீடு திரும்பும் வழியில்…
மற்றொரு கேலக்சியில் இருந்து பறக்கும் தட்டு போன்ற ஒரு கருவி பூமியைத் தொடுவதைப் பார்க்கும் ஒரு டாக்டர் (நாயகன் சதீஷ்குமார்) , அதில் இருந்து வரும் கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு அந்த ஒற்றை நாளுக்குள் சிக்கிக் கொள்கிறார் .
அதாவது இரவு பனிரெண்டு மணிக்கு மேல் மீண்டும் முடிந்த நாளே துவங்கும் . அதே நபர்கள் வருவார்கள் அதே போல பேசுவார்கள்.
சில நாட்களில் வெறுத்துப் போன டாக்டருக்கு ஒரு புதிய யுத்தி கிடைக்கிறது . வரும் நபர்கள்தான் பேசிய விசயத்தையே பேசுவார்கள் . நாம் வேறு பதில்கள் சொன்னால் ?
அப்படி முயல , அதன் பொருட்டு சம்பவங்கள் மாற , விளைவாக….
அந்த நாள் இப்படி மீண்டும் மீண்டும் தொடராமல் இயல்பு நிலைக்கு வந்தால் தனது மனைவி கொல்லப்படும் அபாயம் உள்ளது டாக்டருக்குத் தெரிகிறது . ஆனால் யாரால் எவரால் என்று புரியாத நிலை .
இந்த நிலையில் விஞ்ஞானி ஒருவர் ( வேலு பிரபாகரன்) அந்த பறக்கும் தட்டை வீழ்த்த ஜாங்கோ என்ற கருவியை உருவாக்குகிறார் . ஜாங்கோவால் பறக்கும் தட்டின் கதிர் வீச்சு ஆதிக்கத்தை தடுக்க முடிந்ததா ? டாக்டரால் மனைவியை காப்பாற்ற முடிந்ததா என்பதே ஜாங்கோ
தமிழின் முதல் டைம் லூப் (ஒரு குறிப்பிட்ட காலநேரம் மீண்டும் மீண்டும் அப்படியே வருவது ) படம் .
இந்த கதை படத்தின் முதல் பலம் .
டைம் லூப் படங்களில் கேமரா கோணங்கள், படத் தொகுப்பு இரண்டும் முக்கியம் . அப்புறம் இசை .
ஒரே காட்சி திரும்ப திரும்ப வரும்போது கட்டாயம் இருந்தால் அன்றி காட்டிய கோணங்களிலேயே மீண்டும் மீண்டும் காட்டக் கூடாது . ஒவ்வொரு சம்பவமும் எந்த நீளத்தில் கால அளவில் முதன் முதலில் காட்டப்படுகிறதோ அதே அளவில் மீண்டும் மீண்டும் காட்டப் படக் கூடாது .
கதைப் போக்குக்கு ஏற்றவாறு எத்தனையாவது லூப்பில் எந்த காட்சி நீளமாக இருக்க வேண்டும், எந்த காட்சி குறைவாக இருக்க வேண்டும், மீண்டும் எங்கே நீளம் அதிகரிக்க வேண்டும் என்ற தெளிவு முக்கியம் .
அப்புறம் வளரும் கதைப்போக்குக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் வரும் காட்சிகளுக்குக் கூட பொருத்தமான மாறுபட்ட இசை வேண்டும் .
இது சரியாக அமையாமல் பல ஆங்கில அயல்நாட்டு டைம் லூப் படங்களில் பார்ப்பவரை சாகடித்து இருக்கிறார்கள் .
ஆனால் இந்தப் படத்தில் அப்படி இல்லாமல் இயக்குனர் மனோ கார்த்திகேயன், எடிட்டர் சான் லோகேஷ், ஒளிப்பதிவாளர் கார்த்திக் தில்லை , இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் சிறப்பாக செய்து இருக்கிறார்கள். வாழ்த்துகள் டீம்.
தமிழின் முதல் டைம் லூப் படத்தின் தூண்கள் நீங்கள்.
சயின்ஸ்பிக்ஷன் டைம் லூப் என்பது கூட சிறப்புதான் . ஆனால் டைம் லூப்புக்குள் நடக்கும் சம்பவங்கள் என்ன என்பதில் இன்னும் சிறப்பாக யோசித்து இருக்கலாம்.
அதே போல சில இடங்களில் அதீத வேகம் வெகுஜன பார்வையாளருக்கு குழப்பம் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு .
நடிக நடிகையரை இன்னும் சிறப்பாக தேர்ந்தெடுத்து இருக்கலாம் .
பல காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள் . ஆனால் காமடிதான் இல்லை .
நம்ம ஊர் சினிமா என்ற வகையில் டைம் லூப் படங்களில் வசனத்தின் மூலமும் விளையாட முடியும் . அதை செய்யத் தவறி இருக்கிறார்கள்.
எனினும் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க பரபரப்பு படபடப்பை அட்டகாசமாக ஏற்றி இருக்கிறார்கள் .
ஜாங்கோ…… ஒரு தடவை போங்கோ .