சத்யஜோதி பிலிம்ஸ் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் ,
விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன், கவின், ஆடுகளம் நரேன், ஐஸ்வர்யா தத்தா, அருள் தாஸ், விஜய் முருகன், சவுந்திரராஜன் ஆகியோர் நடிப்பில்
எஸ் ஆர் பிரபாகரன் இயக்கி இருக்கும் படம் சத்ரியன் . இவன் நிஜ வீரனா ? பார்க்கலாம் .
மகனுக்கும் (சவுந்திர ராஜா ) ,மகளுக்கும் (மஞ்சிமா மோகன்) கூட , தன் தாதாத்தனம் தெரியாமல் சமாளிக்கிற — திருச்சி வாழ் பெரிய ரவுடியான சமுத்திரம் என்பவனை (சரத் லோகித் அஷ்வா) ,
அமைச்சர் ஒருவரின் உதவியோடு எதிரி ரவுடி ஒருவன் (அருள்தாஸ்) கொல்கிறான் .
சமுத்திரத்தால் வளர்ந்த இன்னொரு ரவுடியான ரவியால் (விஜி முருகன்), வளர்க்கப்படும் ஓர் இளம் ரவுடி குணா (விக்ரம் பிரபு) , சமுத்திரத்தைக் கொன்ற ரவுடியின் ஆள் ஒருவனை பதிலுக்குக் கொல்கிறான் .
இதனால் சமுத்திரத்தைக் கொன்றவன் குணா மீது கொலை வெறியோடு இருக்கிறான் . ரவி , சமுத்திரம் குடும்பத்துக்கு பாதுகாப்பாக இருக்கிறான் .
சமுத்திரத்தின் மகள் நிரஞ்சனா கல்லூரிக்குப் போய் வரும்போது, சமுத்திரத்தைக் கொன்ற குழு தொந்தரவு செய்கிறது .
எனவே அவளுக்குப் பாதுகாப்பாக குணாவை (விக்ரம் பிரபு) அனுப்புகிறான் ரவி .
குணா மீது நிரஞ்சனாவுக்கு காதல் வருகிறது . ஆரம்பத்தில் அதை குணா ஏற்க மறுக்க, ரவுடி வாழ்வில் கிடைக்கும் போலி மரியாதையையும்
அதன் பின்னால் உள்ள ஆபத்தையும் சொல்லி குணாவை உணர வைத்து அவன் காதலைப் பெறுகிறாள் நிரஞ்சனா .
நிரஞ்சனாவின் அம்மாவுக்கும் அண்ணனுக்கும் (இங்கேயும் ஒரு கங்கை தாரா ) அந்தக் காதலில் விருப்பமில்லை ..
ரவியிடம் அவர்கள் சொல்ல, சமுத்திரம் குடும்பம் மீது அதிக விசுவாசம் கொண்ட ரவி குணாவை எச்சரிக்கிறான்
அதையும் மீறி குணா — நிரஞ்சனா காதல் தொடர, சமுத்திரத்தைக் கொன்ற ரவுடி , போலீஸ், ரவி, என மும்முனைத் தாக்குதலுக்கு ஆளாகிறான் குணா .
காதலியின் விருப்பப்படி எங்காவது ஓடிப் போய் நல்லவனாக வாழ குணா திட்டமிட, அப்புறம் நடந்தது என்ன என்பதே சத்ரியன் .
காதலிக்கும் பெண் ரவுடியை திருத்தும் காட்சிகளும் வசனமும் தமிழ் சினிமாவுக்கு புதுசு இல்லைதான் . ஆனால் இந்தப் படத்தில் ரவுடி வாழ்வின் சிக்கலை உணரவைக்க,
நாயகனுக்கு நாயகி வைக்கும் சோதனையும் அதை அடுத்து அவனிடம் பேசும் காட்சியும் அருமை
வசனம் , நடிப்பு , எடுக்கப்பட்ட விதம் என்று எல்லா வகையிலும் ஜொலிக்கிற காட்ச்ஜோ அது . . அந்தக் காட்சியை அச்சாணியாகக் கொண்டுதான்,
மொத்தப் படமும் சுழல்கிறது என்பதை உணர்ந்து சிறப்பாக எடுத்துள்ளார் எஸ் ஆர் பிரபாகரன் அப்போது குணாவிடம் நிரஞ்சனா பேசும் அதே வசனங்களை கடைசியில் நண்பனிடம் குணா பேசுவது சிறப்பு
சாவதற்கு முன் சமுத்திரம் தன் மக்களிடம் பேசும் அதே வார்த்தைகளை கிளைமாக்ஸ் துவக்கத்தில் நாயகன் நண்பனிடம் பேசி வீட்டுக் கிளம்புவது ஓல்டு என்றாலும் கோல்டு ரக காட்சி
ரவுடிக்களுக்குள்ளும் துரோகம் இருப்பது போல விசுவாசமும் உண்டு என்பதை ரவி கதாபாத்திரம் மூலம் சொல்ல வருகிறார்கள்
கேரக்டருக்கு ஏற்ற கெட்டப்பில் அமைதியும் இறுக்கமும் கலந்த முகத்தோடு நடித்துள்ளார் விக்ரம் பிரபு மஞ்சிமா மோகன் மிக இயல்பாக நடித்து விட்டுப் போகிறார் .
இன்னும் கதாநாயகிக்கு உடம்பு முழுக்க உடை போட்டு கண்ணியமான அழகோடு காட்டும் ஒரு சில இயக்குனர்களில் எஸ் ஆர் பிரபாகரனும் ஒருவர் என்பது பாராட்டுக்குரிய விஷயம் . நீடூழி வாழ்க !
வித்தியாசமான ரவுடி கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார் விஜி . டாக்டர் நண்பனாக வரும் கவின் அலட்டிக்காமல் நடித்துக் கவர்கிறார்
சரத் லோகித் அஷ்வா , தாரா இருவரின் பேச்சிலும் நாறும் கன்னட நெடி மகா எரிச்சல் . பேசாமல் நல்ல டப்பிங் குரல் போட்டு இருக்கலாமே .
அருள்தாஸ் ரவுடியாக மிரட்டுகிறார் . சவுந்திரராஜாவும் சிறப்பாக நடித்துள்ளார் .
ஆனாலும் பார்த்து சலித்த கதை , வழக்கமான காட்சிகள் , ரவுடி அப்பா கோரமாக செத்த பின்னும் ஒரு ரவுடியை கண்ட உடன் தொபுக்கடீர் என்று காதலில் குதித்து,
அவனோடு மல்லுக்கட்டும் அரை வேக்காட்டுக் கதாநாயகி என்று படம் போவதுதான் பெரும் சிக்கல் .
வேறு மாதிரியான கதை , அல்லது ரவுடி தொடர்பான கதை என்றாலும் புதுமையான இன்னும் ஆழமான திரைக்கதை என்று பயணப்பட்டிருக்காலம் . எஸ் ஆர் பிரபாகரனால் அது முடியாத விஷயம் அல்ல
ஒரு பெண் நினைத்தால் எப்பேர்ப்பட்ட ரவுடியையும் திருத்தலாம் என்ற நல்ல விஷயத்தை ஆயிரத்து ஒண்ணாவது முறையாக இந்தப் படத்திலும் சொல்லி இருக்கிறார்கள் .
நிஜ ரவுடிகள் பார்த்தால் ஒரு முறை தங்கள் வாழ்க்கை முறையை மறுபரிசீலனை செய்யும் அளவுக்கு அழுத்தமான படமாக்கல் பாராட்டுக்குரியது.