விஜயசேதுபதி புரடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்க, ஆண்டனி , காயத்ரி கிருஷ்ணா, ஆறு பாலா ஆகியோர் தயாரிக்க,
சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்த லெனின் பாரதி எழுதி இயக்கி இருக்கும் படம் மேற்குத் தொடர்ச்சி மலை
ஒளிப்பதிவு தேனி ஈஸ்வர், படத் தொகுப்பு மு.காசி விஸ்வநாதன் , இசை இசைஞானி இளையராஜா
நியூ யார்க் பிலிம் பெஸ்டிவல் , கேரளத் திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் சிறந்த ஒளிப்பதிவு , சிறந்த படம் என,
பல்வேறு விருதுகளைப் பெற்று இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் இரண்டு பாடல்களை, படத்தில் வரும் காட்சிகளுக்கான புகைப்படங்களின் தொகுப்போடு ஒலியிட்டார்கள்
மேற்குத் தொடர்சசி மலையின் சூழ்நிலை வாழ்நிலை இவற்றை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் திரையில் பாவின. மண் மண வரிகளோடு ஆற்றொழுக்கான இசையில் இருந்தன பாடல்கள் .

நிகழ்சசியில் பேசிய கவிஞர் விவேக் ” எத்தனையோ வருடங்களுக்கு முன்பு இசையில் இசைஞானி இளையராஜா செய்த அற்புதங்களை இப்போது அவர் சொன்னாலும் கேட்க அதிசயமாக உள்ளது .
இத்தனை வருடமாக சொல்லாத பல உண்மைகளை கூட நேற்று நடந்தது போல அவர் சொல்லக் கேட்பது பரவசமான விஷயம் . இந்தப் படத்தின் மூலம் அவர் இசைக்கு எழுதியது என் வாழ்நாள் பெருமை ” என்றார் .
நாயகி காயத்ரி கிருஷ்ணா பேசும்போது
” நான் நடிக்க ஆரம்பித்த முதல் படம் இது . இந்தப் படத்தில் என் நடிப்பைப் பார்த்துதான் ஜோக்கர் படத்துக்கு ஒப்பந்தம் செய்தார்கள் . அது முதலில் ரிலீஸ் ஆகி விட்டது .
இது மிகச் சிறந்த படம். இந்தபப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்த விஜய் சேதுபதி சார், இயக்குனர் லெனின் பாரதி சார், ஒத்துழைத்த ஆண்டனி ஆகியோருக்கும் நன்றி ” என்கிறார்
நாயகன் ஆண்டனி தன் பேச்சில் “வெண்ணிலா கபடிக் குழு படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தேன் . அப்போது முதலே லெனின் பாரதி பழக்கம் .
இந்தப் படத்தில் நடிக்க அழைத்துப் பேசினார் பாரதி . ”படத்தில் நீ இருக்க’ என்கிறார் . எதோ கேரக்டர் என நினைத்தேன் . ஹீரோ என்றபோது ஆனந்தத்துக்கு அளவே இல்லை .

மேற்குத் தொடர்சசி மலைக்கு அழைத்துப் போய் வீடு எடுத்து தங்க வைத்தார் . காய்கறி வாங்கி வந்து சமைக்கச் சொன்னார் . அரிசி கழுவிய நீரை ‘எங்கயாவது மாடு பார்த்து குடிக்க வைத்து விட்டு வா’ என்றார் .
சுமை தூக்கும் வேலைக்கு அனுப்பினார் . நான் ரொம்பவே பயந்துட்டேன் . அப்புறம் ஷூட்டிங்கை ஆரம்பித்த பிறகுதான் அவற்றின் பலன் புரிந்தது . ” என்றார்
விஜய் சேதுபதி தன பேச்சில் ” இளையராஜா அய்யா இசையில் ஒரு படத்தை தயாரித்து விட்டேன் . இன்று அவர் அருகில் மேடையில் உட்கார்ந்து விட்டேன் . இனி எனக்கும் ஒரு வரலாறு இருக்கும் என்ற சந்தோசம் வருகிறது .

இதை ஏற்படுத்திக் லெனின் பாரதிக்கு நன்றி . லெனின் பாரதியின் அப்பாவும் இளையராஜா சாரும் பால்யகால நண்பர்கள் .
லெனின் பாரதியை எனக்கு வெண்ணிலா கபடி குழு படத்தில் இருந்தே பழக்கம் . அவர் நினைத்து இருந்தால் கமர்ஷியலாக ஒரு படத்தைக் கொடுத்து இருக்க முடியும் . அந்த திறமை உள்ளவர்
ஆனால் எளிய மக்களின் வாழ்வை சொல்லும் சிறந்த கதையோடு வந்தார் . படத்தை எடுத்து முடித்தோம் . பல விருதுகளை பெற்று படம் பெருமை சேர்த்துள்ளது . விரைவில் திரைக்கு வரும் ” என்றார் .
லெனின் பாரதி பேசும்போது
” கேரள தமிழ்நாடு எல்லைப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைக் கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்வைச் சொல்லும் படம் இது .
ஆண்டனிக்கு மட்டும் அல்ல . நாயகி காயத்ரி கிருஷ்ணாவை ‘ நண்பனின் தங்கச்சி . வேலை இல்லாம கஷ்டப்படுது’ன்னு சொல்லி தேயிலை பறிக்கும் வேலையில் சேர்த்து விட்டோம் .
எந்த சலுகையும் இல்லாம தொழிலாளியோடு தொழிலாளியாக அவரும் ஒரு மாசம் சீரியஸா வேலை செஞ்சார் . அது நடிக்க வந்திருக்குன்னு கூட வேலை செஞ்ச யாருக்குமே தெரியாது
ஏன்னா அந்த மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்க அவர்களின் நிலையை உண்மையாக உணர்வது முக்கியம். இந்தப் படத்தில் மக்களின் வாழ்க்கை
அவர்களை சூழும் அரசியல் , அதிகார வர்க்க செயல்பாடுகள் , கம்யூனிசத்தின் நிறை குறைகள் எல்லாம் சொல்லப்பட்டுள்ளது ” என்கிறார் .
இளையராஜா என்ன பேசினார் என்கிறீர்களா ? அவர் எங்கே பேசுகிறார் ?
நிகழ்ச்சிகளுக்கு வருகிறார் . இருக்கிறார் . தன்னைப் பற்றி மற்றவர்கள் பேசுவதை கேட்கிறார் . ஏதாவது உடன்பாடு இல்லாத கருத்து வந்தால் மட்டும் பதில் சொல்கிறார் .
இல்லை என்றால் பேசாமல் கிளம்பி விடுகிறார் . கேட்டால் ‘உங்களுக்கு என் இசை இருக்கே பேச்சு எதற்கு?’ என்கிறார் . போய் விடுகிறார் . இந்த நிகழ்ச்சியிலும் அப்படியே !