சண்முகம் கிரியேஷன்ஸ் சார்பில் பரத்வாஜ் முரளி கிருஷ்ணன், ஆனந்த கிருஷ்ணன் சண்முகம், ஸ்ரீராம் சத்ய நாராயணன் ஆகியோர் தயாரிக்க , சதீஷ், அஜய் ராஜ், பாவல் நவகீதன், மைம் கோபி , வித்யா பிரதீப், பவா செல்லத்துரை, ரித்திகா நடிப்பில் சாச்சி எழுதி இயக்கி இருக்கும் படம்.
ஏற்காடு மலையில் மது போதையில் டென்ஷனோடு கார் ஓட்டி வரும் நபர் (சதீஷ்) குறுக்கே பைக்கில் ஹெல்மெட் போட்டு வந்த ஒரு நபரை அடித்துத் தூக்குகிறார் .
பிறகு அடிபட்ட நபரை கார் டிக்கியில் போட்டுக் கொண்டு வரும்போது, ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் வில்லங்கம் பிடித்த போலீஸ்காரரிடம் வாகன சோதனையில் சிக்குகிறார்.
இதற்கிடையில் பெண் ஒருத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடக்க, அது பற்றி விசாரிக்கின்றனர் . கொலைகாரன்தான் காரின் டிக்கியில் இருப்பவன் என்பது படம் பார்ப்போருக்குத் தெரிய வர , நடந்தது என்ன என்பதே படம்.
இரவு நேரக் கொடைக்கானல் லொக்கேஷனும் அதை படமாக்கி இருக்கும் பிஜி முத்தையாவின் ஒளிப்பதிவும் கவர்கிறது.
பின்னணி இசையில் கவனிக்க வைக்கிறார் இசையமைப்பாளர் எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட்.
சதீஷ் வழக்கம் போல.
பாவல் நவகீதன் வில்லன் நடிப்பில் அசத்தி இருக்கிறார் .
சாதரணமாக அடாவடித்தனமாக நடந்து கொள்ளும் போலீஸ்காரர்களை மட்டும் நாம் கெட்டவர்களாகப் பார்க்கிறோம் . ஆனால் வெளிப்பார்வைக்கு நல்லவர்களாகத் தெரியும் போலீஸ்காரர்களின் உண்மை முகம் கோரமானது என்பதை சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குனர் . நினைத்ததோடு சரி . ஸ்டேஷனில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சதீஷ் கதாபாத்திரம் செய்யும் சில செயல்கள் மட்டும் பரவாயில்லை ரகம்.
சற்றும் ஈர்க்காத கதை திரைக்கதைதான் படத்தின் பெரிய பலவீனம்.
மொத்தத்தில், சட்டம் என் கையில் ….. இருந்து உருண்டு ஓடி விட்டது