மெய்யழகன் @ விமர்சனம்

2D என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா – ஜோதிகா தயாரிக்க, கார்த்தி, அரவிந்த சாமி, ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண் , தேவதர்ஷினி நடிப்பில், இதற்கு முன்பு 96 படத்தை இயக்கிய சி பிரேம் குமார் எழுதி இயக்கி இருக்கும் படம். 

சொத்து விசயத்தில் ஏமாற்றப்பட்டதால் தனது சொந்த ஊரான தஞ்சாவூர் நீடாமங்கலத்தை விட்டு  சென்னை வந்து செட்டில் ஆகிவிட்ட ஒரு வாத்தியார் (ஜெயபிரகாஷ்) குடும்பம். அவரது மகனாக , டீன் ஏஜ் வயதில்  அந்த ஊரை விட்டு சென்னை வந்து கல்யாணம் (தேவதர்ஷினி)  செய்து கொண்டு ஒரு டீன் ஏஜ் மகளுக்கும் தந்தையாகி விட்ட ஒரு  நபர்  (அரவிந்தசாமி) 

சுமார் இருபது ஆண்டுகளுக்கு பிறகு , சிறு வயதில் தன் மீது பாசமாக இருந்த ஒண்ணு விட்ட தங்கையின் திருமணத்துக்கு ஊருக்குப் போக வேண்டிய கட்டாயம். 

போன இடத்தில் ஒரு கிராமத்து நபர் (கார்த்திக்) வந்து உரிமையோடு அத்தான் என்று உறவு கொண்டாடிப் பேசுகிறான். அவன் செய்யும் உதவிகள் கூட மெட்ராஸ் நபருக்கு உபத்திரவமாக தெரிகிறது.

ஆனால் அவன் கண்மண் தெரியாத அன்பு காட்டுகிறான் . 

தங்களை சொத்து விசயத்தில் ஏமாற்றியவர்கள் ஓஹோ என்று இருக்கும் ஊரில் தொடர்ந்து இருக்க முடியாமல் , காலையில் கல்யாணத்துக்குக் கூட இருக்கப் பிடிக்காமல் ரிசப்ஷன் முடிந்ததும் கிளம்ப முயல்கிறார் மெட்ராஸ்காரர்  . பாசமாக இருக்கும் மாமா (ராஜ்கிரண்) வற்புறுத்தியும் மீறிக் கிளம்ப ,  உடன் பஸ் ஏற்றி விட வருகிறான் கிராமத்து நபர் 

கடைசி பஸ் கிளம்பிப் போய்விட,அந்த கிராமத்து நபர் வீட்டில் தங்க வேண்டி இருக்கிறது . 

அப்புறம் நடந்தது என்ன என்பதே படம். 

எப்படி ஒரு அற்புதமான அபாரமான அட்டகாசமான கதை.

ஆனால் இதுவரை இதைப் படித்த போது உங்களுக்கு தானாகக் கிடைத்த உணர்வு கூட படம் பார்த்து முடித்த பிறகும் கிடைக்காது. அதுதான் அநியாயம். 

கார்த்தியும் அரவிந்த்சாமியும் அற்புதமாக நடித்துள்ளனர் . ஸ்ரீதிவ்யா கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கிறார் . தேவதர்ஷினியும் ஓகே. 

மெட்ராஸ்காரரைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் நிலையில் இருந்து தவறிப் போய் உள்ளூரில் குடிகாரனுக்கு வாழக்கைப்பட்ட பெண்ணின் உணர்வும் அவளுக்கும் மெட்ராஸ்காரருக்குமான  உரையாடலும் ஏக்கக் கவிதை. 

ஒன்றுவிட்ட தங்கைக்கு மெட்ராஸ்காரர் வாங்கிப் போகும் பரிசுப் பொருட்கள் , அதை அவர் ரிசப்ஷனில் அணிவிக்கும் பாசக்  கவிதை . 

சோழர் வரலாறு , குறிப்பாக வெண்ணிப் பறந்தலை போர் , நீ(ட்)டா மங்கலம் பெயர்க்காரணம்,  ஈழம் வீழ்ந்ததற்கான வருத்தம் , தூத்துக்குடி  ஸ்டெரிலைட் ஆலை விவகாரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட வினோலியா உள்ளிட்ட நபர்களுக்காக வருடா வரும் திதி கொடுப்பதாக தஞ்சை மாவட்டத்தில் வாழும் நாயகன்  சொல்வது இது போன்ற விஷயங்கள் எல்லாம் அட்டகாசம் .. அபாரம் . பிரேம்குமாரின் கருத்தியல் போற்றத்தகுந்தது. தலையில் தூக்கி வைத்துக்   கொண்டாடத்தக்கது . 

ஆனால் பேரு வச்சா போதுமா? சோறு வைக்க வேணாமா? 

எதைச் சொல்கிறோம் என்பது மட்டும் முக்கியம் அல்ல ; எப்படிச் சொல்கிறோம் என்பதும் முக்கியம் என்பார்கள் . இப்போது எதில் சொல்கிறோம் என்பதும் முக்கியமாகிறது . 

திரையில் திரைக்கதையில் மேற்கண்ட விசயங்களில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் ஆர்வம் ஏற்படும்படி காட்சிப்படுத்த வேண்டும். ஆனால் ஆர்வம் இருப்பவர்களுக்கும் கூட சரிங்க போதும் என்று சலித்துக் கொள்ளும் அளவுக்கு காட்சிகள் ஓடுகின்றன.  

கார்த்திக் கேரக்டர் அதிகம் பேசுபவராக இருக்கலாம். ஆனால் அவர் படம் முழுக்க பேசுவதை மட்டுமே செய்கிறார் .படத்தின் ஒரு பெரும்பகுதியில் கார்த்தி அரவிந்தசாமி தவிர ஒரு ஈ எறும்பு கூட காணோம் . அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு அல்லவா?

அந்த குடிகாரன் மனைவி கேரக்டரும் , அந்த தங்கை கேரக்டரும் அதன்பிறகு தேடினாலும் கிடைக்கவில்லை,

அவ்வளவு பாசமான அந்த தொங்காச்ச்ச்சி ரிசப்ஷன் முடிந்தும் வருங்கால கணவன் மார்பில் கை வைத்து ஆல்பத்துக்கு போஸ் கொடுத்து விட்டுக் காணமல் போய் விடுகிறார் . இப்பேர்ப்பட்ட மெட்ராஸ்கார அண்ணன் சாப்பிட்டானா தூங்கினானா என்று அவள் கவலையே படவில்லை,உண்மையா சொன்னா அப்படி ஒருத்தி   கல்யாணத்துக்கு ஊருக்கே போகத் தேவை இல்லை 

அதாவது  அரவிந்தசாமி , கார்த்தி கதாபாத்திரங்கள் தவிர எல்லா கதாபாத்திரங்களும் சம்மந்தப்பட்ட காட்சிக்காக மட்டும் எழுதப்பட்டு இருக்கிறதே ஒழிய , ஒட்டுமொத்த திரைக்கதைக்காக,  படத்துக்காக,  உணர்வுக் கூட்டலுக்காக எழுதப்படவில்லை . அதுதான் பரிதாபம். 

ஒரு பெரிய ஆக்ஷன் படத்தில் வேண்டுமானால் காசு இருக்கிறது என்பதற்காக  ”அம்மா தாயே…  பிச்சை போடுங்க” என்ற ஒரு வசனத்துக்குக் கூட  அமிதாப்பச்சனையே  கொண்டு வந்து நிறுத்தலாம். 

ஆனால் உணர்வு ரீதியான படங்களுக்கு அது தப்பாகி விடும் . ஒரு இமேஜ் உள்ள ஆர்ட்டிஸ்ட் இது போன்ற படங்களில் வந்தால் அவருக்கு வேலை இருக்க வேண்டும் . காட்சியும் கதையில் முக்கியப் பங்கு இருக்க வேண்டும். இல்லை என்றால் குடல் அந்து போனவனுக்கு கும்பா நிறைய பிரியாணியை வைத்த கதையாகிவிடும் 

இந்தப் படத்தில் ராஜ்கிரண் எதற்கு ? ஒரு படத்தில் மிஷ்கின்  பாக்யராஜை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல நிற்க வைப்பாரே .. அந்த அளவுக்கு மோசம் இல்லை என்றாலும் அந்த வகைதான் இதுவும் . அதுவும் ராஜ்கிரண் இந்தப் படத்திலும் என் ராசாவின் மனசிலே , அரண்மனைக் கிளி அழுகையையே அழுகிறார் . 

படத்தில் இளவரசு போல ஒருவர் வருகிறார் . அவர்தானா என்று அறிய ஒரு விசாரணை கமிஷன் வைக்க வேண்டும். 

கார்த்திக்கும் அரவிந்தசாமியும் இரவில் பேசிக் கொண்டிருக்கும் காட்சியில்  அப்படியே கட் செய்து பிளாஷ் கட் ஆக ஜல்லிக்கட்டு மேட்டருக்குப் போவது சரி என்றால் … 

வெண்ணிப் பறந்தலைப் போர்க்களத்தில் கார்த்தி கரிகால்சோழனாக  நிற்பது போல ஒரு காட்சி,  விஷுவல் வேண்டாமா? அதுவும் கார்த்தி வேல் வில் அம்பு சத்தம் எல்லாம் கேட்கும் என்று சொல்லும்போது? அதை காட்சியாகக் காட்டி இருந்தால் இந்தப் படத்துக்கு இன்னொரு அபாரமான உயரம் கிடைத்து இருக்குமே . 

ஒன்றையணா கேரக்டருக்கு ராஜ்கிரணைக் கொண்டு வருவதை விட இதுதானே முக்கியம் 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் போராட்ட தியாகிகள் உள்ளிட்ட போராளிகளுக்கு கார்த்தி திதி செய்வதை விஷுவலாகக் காட்ட வேண்டாமா? படத்துக்கு இன்னும் கனம் கிடைத்து இருக்குமே . 

இவை எல்லாம் இன்றி படம் முழுக்க ரெண்டு பேர் பேசிக் கொண்டே இருப்பதை மட்டும் ‘ கேட்க’  சினிமா எதற்கு? 

96 கொடுத்து நமது இதயங்களைக் கொள்ளையடித்த பிரேம் குமாரிடம் இருந்து இப்படி ஒரு அலட்சியமான படமாக்கலையும் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு  விட்டேத்தியான படத்தையும் எதிர்பார்க்கவே இல்லை.

தவிர படத்தில் ஏதோ செவ்வாய் கிரகத்துக்காரனுக்கு கிராமத்தைக் காட்டும் தொனிதான் இருக்கிறதே ஒழிய, டீன் ஏஜ் காலம் வரை கிராமத்தில் வாழ்ந்த ஒருவனின் பார்வையில் விடுபட்ட கிராமம் சிரத்தையாக சொல்லப்படவில்லை (சும்மா ஆரம்பத்தில் சில ஷாட்கள் அரவிந்த் சாமி தயங்கித் தயங்கிப் பார்ப்பதால் அது சரியாக சொல்லப்பட்டு விட்டதாக ஆகாது )

ஒருவன் சென்னையில்  இருப்பதாலேயே அவனுக்கு (படம் பார்க்கும் ரசிகர்கள் உட்பட )  கிராமம் , சொந்த ஊரு தெரியாது என்று அர்த்தம் இல்லை.  

இன்னைக்கும் தீபாவளி பொங்கல் என்றால் ஆம்னி பஸ் அநியாயக் கொள்ளையையும் மீறி சென்னையையே காலி செய்வது போல ஒரு பெரும் கூட்டம் ஊருக்குப் போய் வந்து கொண்டுதான் இருக்கிறது. 

சொத்தை ஏமாற்றிய நபர்களை அரவிந்த்சாமி  பார்ப்பதை ஒரு ஷாட்டில் மட்டும் காட்டி அந்த கேரக்டர்களை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல நிறுத்துவது என்பது ஒரு படைப்பாளியின் விருப்பம் அல்லது உரிமையாகக் கூட இருக்கலாம் . ஆனால் ஒரு காட்சியாவது உள்ளே இழுத்து விட்டு விளையாடுவதுதான் கெத்தான சுவாரஸ்யமான திரைக்கதையாக இருக்க முடியும். 

அப்போதுதான்  கடைசியில் அவர்கள் பற்றி கார்த்தி அரவிந்த்சாமியிடம் அவர்களைப் பற்றிப் பேசும் காட்சிக்கும் கனம் கிடைத்து இருக்கும் . அதுவும் இல்லை. 

இசை ஒளிப்பதிவு எடிட்டிங் எதிலும் ஈர்ப்பு இல்லை 

இப்படி எந்த அக்கறையும் இல்லாத திரைக்கதை மற்றும் படமாக்கலால்,  படத்தில் கொஞ்சம் மெய் இருக்கே ஒழிய கொஞ்சம் கூட அழகு இல்லை, 

தஞ்சாவூர் பற்றிய படம் என்பதால் 

அதையே தொடர்புப் படுத்தி ஒரே வாக்கியத்தில் சொல்வது என்றால் …. 

தயிர்வடை தேசிகனின் கையில்…..  ராஜராஜ சோழ மாமன்னன்  போர்வாளைக் கொடுத்தது போல இருக்கிறது படம்.. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *