சி 3 @ விமர்சனம்

singam 88

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ .ஞானவேல் ராஜா மற்றும் தவால் ஜெயந்திலால் காடா ஆகியோர் தயாரிக்க, 
சூர்யா , அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் நடிப்பில் , ஹரி இயக்கி இருக்கும் படம் சி 3 என்கிற சிங்கம் 3

தமிழ் சினிமாவின் முதல் மூன்றாம் பாகப் படமாக வந்து இருக்கும் சிங்கம் 3  , ரசனைக்கு தங்கமா ? இல்லை காசுக்கு பங்கமா ? பார்க்கலாம் .

ஆந்திராவில் விசாகப் பட்டினத்தில் போலீஸ் கமிஷனர் ராம கிருஷ்ணா (ஜெயப் பிரகாஷ்) மர்மமாக கொலை செய்யப்படுகிறார் .

அதன் பின்னணியில் மது சூதன ரெட்டி என்ற தாதா (சரத் சக்சேனா ) இருப்பதாக சந்தேகிக்கப் பட்டாலும் , ஆந்திர காவல்துறையே  ரெட்டி சொன்னபடி ஆடுவதால் ஒன்றும் செய்ய முடியாத நிலை

singam 33

ஆந்திர உள்துறை அமைச்சர் சத்திய நாராயணா (சரத் பாபு ) ,

முன்பே தமிழ்நாட்டு துறைமுக நகரங்களில் கடல்  வழிக்கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை கண்டு பிடித்த ,  தமிழ் நாட்டைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியான துரை சிங்கத்தை (சூர்யா),

தமிழக உள்துறை அமைச்சர் ராமநாதன் (விஜயகுமார் ) உதவியோடு சி பி ஐ யில் பதவி ஏற்க வைத்து அதன் வழியே ஆந்திராவுக்குக் கொண்டு போய் விசாகப் பட்டினத்தின் டெபுடி கமிஷனராக அமர்த்துகிறார் .

ராம கிருஷ்ணாவைக் கொன்றது ரெட்டிதான் என்பதை கண்டு பிடிப்பதோடு , அவரது மனைவியும் (ராதிகா ) மகள்களும் ரெட்டியால் பெரும் கஷ்டங்களை அனுபவிப்பதையும் கண்டு பிடிக்கும் துரை சிங்கம் ,

மது சூதன ரெட்டியை சூதானமாகப் போட்டுத் தள்ளுகிறார் .  ஆனால் ராம கிருஷ்ணா  கொல்லப் படக் காரணம் ?

singam 66

மத்திய அமைச்சர் ராம் பிரசாத்தின் (சுமன்) மகன் விட்டல் பிரசாத் ( தாக்கூர் அனூப் சிங் ) ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மொத்த இரும்புப் பொருள் வியாபாரத்தையும்  தன் கைக்குள் வைத்து இருக்கிறார் . எப்படி ?

 மருத்துவ மனைகளில் பயன்படுத்தப்பட்ட  மருத்துவ உபகரணங்கள், நோய்க் கிருமிகள்  தொற்றிய ரத்தம், சீழ், நிணநீர்  ஆகியவை துடைக்கப்பட்ட பஞ்சு , பிளாஸ்திரி போன்ற மருத்துவக் கழிவுகள்,

காலாவதியான மாத்திரைகள் , கம்ப்யூட்டர , செல்போன் போன்ற மின்னணுப் பொருட்களின் — மறு சுழற்சிக்கு ஆட்படாத உதிரி பாகங்கள் அடங்கிய மின்னணுப் பொருள் கழிவுகள் ஆகியவற்றை  ,

அந்த நாட்டுக் குப்பையில் போட்டால் அது மக்கி நிலத்தடி நீரை , மண் வளத்தை பாதிக்கும் , காற்றில் கலந்து மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்று எண்ணும் ஆஸ்திரேலிய அரசு ,

singam 44

அவற்றை வேறு ஏதாவது நாட்டுக்கு , உபயோகமான பொருள் என்ற பெயரில் கண்டெய்னரில் கப்பலில் கொண்டு போய், அந்த நாடுகளில் கொட்டி , எல்லா ஆபத்துகளையும் அந்த நாட்டுக்கு வர வைக்கிறது .

அவற்றை இந்தியாவுக்கும் கொண்டு வந்து கொட்ட ஆஸ்திரேலிய அரசுக்கு உதவுவதால்தான் அங்கே விட்டலுக்கு அவ்வளவு மரியாதை .

அப்படிக் விசாகப் பட்டினத்தில் கொட்டப்பட்ட ஒரு குப்பைமேடு எரிக்கப்பட, அதில் இருந்து காலாவதி மாத்திரைகள், மின்னணுக் கழிவுகளின் வேதிப் பொருட்கள் அடங்கிய புகையை சுவாசித்து ,

பக்கத்தில் இருந்த பள்ளிக் கூடத்தில் மாணவ மாணவிகள் முப்பத்தாறு பேர் மரணம் அடைகிறார்கள்

singam 6

ஆனால் உண்மையை மறைத்து சாப்பிட்ட உணவு விஷமானதால் அவர்கள் இறந்ததாக  பிரச்னையை முடிக்கிறது ஆந்திர காவல்துறை

இந்த விஷ(ய)த்தை கண்டு பிடித்த காரணத்தாலேயே , ராம கிருஷ்ணாவை  ரெட்டி மூலம்  விட்டல் கொன்றான் என்பது   துரை சிங்கத்துக்கு தெரிய வருகிறது

துரை சிங்கம் விட்டலைக் கைது செய்ய முயல , பண பலம், அதிகார பலம் , ஆள் பலம், உடல் பலம், தொழில் பலம் என்று ஐந்து கிரகங்களும் உச்சம் பெற்ற விட்டல் ,

இனி தனது  ஆட்கள் மீது ஓர்  அடி விழுந்தாலும் , துரை சிங்கத்தின்  அப்பா அம்மா, அங்காளி பங்காளி , மாமன் மச்சான் , சொந்த பந்தம், சாதி சனம் அடங்கிய நல்லூர் கிராமத்தையே, 

singam 1

ராக்கெட் விட்டு அழித்து இந்திய வரை படத்தில் இருந்தே இல்லாமல் செய்து விடுவேன் ” என்ற  ரீதியில்  மிரட்ட ,
அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த சி3

துரை சிங்கமாக மூன்றாவது முறையாகவும் பின்னிப் பெடல் எடுக்கிறார் சூர்யா . உச்சத்தலை முறை உள்ளங்கால் வரை போலீஸ் முறுக்கு .

கஞ்சி போட்டு விரைப்பேற்றிய காக்கி சட்டையை  கம்பி கட்டியும்  இழுத்து விட்ட மாதிரி அப்படி ஒரு தெறிப்பு . சண்டைக் காட்சிகளில் இதுவரை பார்க்காத அளவுக்கு பிரம்மிக்க வைக்கிறார் . குரல் நடிப்பும் அருமை.

துரை சிங்கத்தின் மனைவி காவ்யாவாக அனுஷ்கா . குறைவான காட்சிகள் என்றாலும் நிறைவான நடிப்பு

singam 3

துரை சிங்கத்தை சந்தேகப்பட்டு பின் தொடர்ந்து அவரைப் பற்றி தவறாக பத்திரிகையில் எழுதி , பின்னர் உண்மை உணர்ந்து காதலித்து அவர் கல்யாணம் ஆனவர் என்பதை உணர்ந்து மனம் மாறும், 

பத்திரிகையாளர் அக்னி என்கிற வித்யாவாக , கவர்ச்சியும் துடுகுமான கேரக்டரில் சுருதிஹாசன். இளமை ;வளமை ! (ஆனா வெள்ளையா இருக்கறது மட்டும் அழகு இல்ல ஸ்ருதி. கவனம் )

ராமகிருஷ்ணாவின் மனைவியாக செண்டிமெண்ட் காட்சிகளில் கனம் சேர்க்கிறார் ராதிகா . வில்லனாக வரும் தாக்கூர் அனூப் சிங்கும், சரத் சக்சேனாவும் மிரட்டுகிறார்கள் .

சூரியை சாணை  பிடிக்க வேண்டிய நேரம் இது

singam 2

துவக்கம் முதல் இறுதிவரை படத்தை படு ஸ்பீடில் கொண்டு போகிறார் ஹரி . மும்பையில் இருந்து சென்னைக்கு படு ஸ்பீடில் காரில் வந்தால் இறங்கும்போது எப்படி இருக்கும்? படம் முடியும்போது அப்படி ஓர் உணர்வு !

முதல் இரண்டு பாகங்களை மூன்றாம் பாகத்தோடு இணைக்கும் வகையில் காட்சிகள் வைத்த வகையில் திரைக்கதையிலும் கவர்கிறார் .

அனுஷ்காவுக்கு புலி என்று பட்டப் பெயர் வைத்தது ரசனை (முதல் பாகத்தில் அனுஷ்கா புலி வேடத்தில் வருவது ஞாபகம் இருக்கா ?)

பஞ்ச் வசனங்கள் பக்காவான கமர்ஷியல் தாளிப்பு . பெண்களை நடத்தும் விதம் குறித்த  காட்சிகள் வசனங்கள் பெண்களைக் கவரும் .

singam 55

செல்போன் நிறுவனங்கள் போலீசுக்கு தரும் தகவல்கள் உண்மையாக இருக்க  வேண்டும் என்ற அவசியம் இல்லை. பலம் படைத்தவர்கள் நினைத்தால், 

அந்த ஆதாரத்தை அழிக்க முடியும்  என்ற விழிப்புணர்வைக் கொடுத்து இருப்பது சூப்பரோ சூப்பர்.

ஜி பி ஆர் எஸ் , சிக்னல் டிரேசிங் ,கம்பியூட்டர் ஹேக்கிங் போன்றவற்றை படத்தில் பயன்படுத்தி இருக்கும் விதமும் அருமை .

சேசிங் மற்றும் பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் பிரியன்  அசத்தி இருக்கிறார். ஆஸ்திரேலிய லோக்கேஷன்கள் அழகோ அழகு

கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகள் படத்தின் மாபெரும் பலம்அதிரடி என்றால் அப்படி ஒரு அதி அதி ரடி ரடி!

ஹாரீஸ் ஜெயராஜின் பாடல்களும் பின்னணி இசையும் இன்னும் நன்றாக இருந்திருக்க வேண்டும் .

singam 8

படத்துக்கு வேகம் முக்கியம்தான் . அதற்காக அடுப்பை பற்ற வைத்த உடனேயே  தண்ணீர் தளபுள என்று கொதித்தால் எப்படி ? இளம் சூடும் ஒரு சுகம்தானே ?

ஒரு படம் வேகம் எடுத்த பிறகுதான் தொங்கக் கூடாது .எடுத்த உடனே இத்தனை வேகம் எதுக்கு ?  வேகம் தேவைப் படும் நேரத்தில் வேகமும் அழுத்தமாக சொல்ல வேண்டிய விசயத்தை நிறுத்தி சொல்வதும்தான் அழகு .

ஒரு நிமிஷம் அசைவே இல்லாத சைலன்ட் ஷாட் வைத்து அப்புறம் இந்தப் படம் ஆரம்பித்து இருந்தால் கூட தப்பில்லை

singam 5

எனினும்

இரண்டு மணி முப்பத்தாறு நிமிடத்துக்கு ஆக்ஷன், காதல் , கவர்ச்சி, சமூக அக்கறை, விழிப்புணர்வு விஷயங்கள் அடங்கிய ஒரு  ஆல் இன் ஆல் படமாக ,

கம்பீரமாக கர்ஜிக்கிறது சிங்கம் 3.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *