டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிக்க, ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு, சக்தி வாசு, ராதாரவி, ஊர்வசி, பானுப்பிரியா, சந்தான பாரதி நடிப்பில் ,
பி.வாசு கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் சிவலிங்கா தரிசனம் எப்படி? பார்க்கலாம்
ஓர் இரவில் ஓடும் ரயிலில் இருந்து ரஹீம் என்ற (சக்தி வாசு) அசைவ சமையற் கலைஞன் கொல்லப்படுகிறான் . தற்கொலை என்று அந்த சம்பவம் முடிக்கப்பட ,
அவனது காதலி சங்கீதாவோ ( சாரா ) ரஹீமுக்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று போலீசிடம் சொல்லி
விசாரணைக்கு உயிர் கொடுக்கிறாள் .
விசாரிக்க நியமிக்கப்படுகிறார் சி பி சி ஐ டி அதிகாரி சிவ லிங்கேஸ்வரன் ( ராகவா லாரன்ஸ் ) . அவருக்கு திருமணம் செய்யப்படும் மனைவி ( ரித்திகா சிங்) பேய்ப்படம் பார்த்து பயப்படும் ரசனை கொண்டவள் .
ரஹீம் கொலையின் போது அவனுடன் இருந்த புறா ஒன்று கொலையாளியை தேடுகிறது . போலீசுக்கும் உதவுகிறது
இறந்து போன ரஹீமின் தந்தையின் ( சந்தான பாரதி) தொழில் முறை நண்பர் மற்றும் சங்கீதாவின் தந்தையான சைவ சமையல் வல்லுநர் ( ராதாரவி) , சந்தேகப்படுகிறார் . சிவலிங்கா
டி வி யில் சமையல் நிகழ்ச்சி நடத்தி பிரபலமான தனது அம்மாவைப் ( ஊர்வசி) பிரிந்து , சம்பவம் நடந்த ஊருக்கே போய் நண்பரான போலீஸ் அதிகாரி ஒருவரின் ( வி டி வி கணேஷ்) உதவியோடு,
வீடு எடுத்து மனைவி மற்றும் திருட வந்து சிக்கிக் கொண்ட ஒரு நபர் ( வடிவேலு) ஆகியோரின் உதவியோடு துப்பறிகிறார் சிவலிங்கா .
ரஹீமின் ஆவி சிவலிங்காவின் மனைவி உடலுக்கும் புகுந்து ஆட்டிப் படைக்கிறது . “என்னை யார் கொன்றார்கள் என்று கண்டு பிடித்துச் சொல்லாவிட்டால்,
உன் மனைவியின் உடலை விட்டுப் போகமாட்டேன் ” என்று சவால் விடுகிறது .
மனைவிக்கு நடக்கும் பிரச்னையை மாமனார் (ஜெயப்பிரகாஷ்) மாமியார் (பானு பிரியா ) இருவருக்கும் தெரியாமல் மறைக்க சிவலிங்கா எடுக்கும் முயற்சிகள் வீணாகின்றன .
ஒரு நிலையில் எல்லார் முன்னிலையிலும் உண்மைகள் வெளிப்படுகின்றன . ரஹீமைக் கொன்றது யார் ? ரஹீமின் ஆவி சிவலிங்கா மனைவயின் உடலுக்குள் நுழைந்தது ஏன் ?
இருவருக்கும் என்ன சம்மந்தம் என்ற உண்மைகள் எல்லாம் வெளிப்பட, அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த சிவலிங்கா .
அட்டகாசாமான ஒளிப்பதிவு மற்றும் ஒலி அமைப்போடு துவங்கும் அந்த அறிமுகக் காட்சியிலேயே மிரட்டுகிறது இயக்குனர் பி. வாசுவின் மேக்கிங் .
சந்திரமுகியை ஞாபகப்படுத்தும் காட்சிகள் , சூழல்கள் படத்தில் வருகின்றன . ஆனால் மாறுபட்ட கதை சொல்கிறார்கள் .
சந்திர முகியில் ஜோதிகாவை பயன்படுத்தியது போல இதில் சில காட்சிகளில் ரித்திகா சிங்கை நடிக்க வைத்துள்ளார்கள்.
இயல்பாக போய்க் கொண்டு இருக்கும் படத்தில் , உண்மைகள் வெளிப்படும் காட்சியில் சூடு பறக்கிறது
சர்வேஸ் முராரியின் ஒளிப்பதிவு அழகையும் அமானுஷ்யத்தையும் ஒன்றாகத் தருகிறது .
ரயிலின் ஓசையை இழைத்து தீம் மியூசிக் கொடுத்த வகையில் கவர்கிறார் இசை அமைப்பாளர் தமன். பாடல்கள் ஒகே ரகம்.
நடனக் காட்சிகள் மசாலா மாநாடு . சண்டைக் காட்சிகள் மிரட்டல் . ஒலி அமைப்பும் கணிப்பொறி வரைகலையும் பயமுறுத்த உதவுகின்றன
ராகவா லாரன்ஸ் வழக்கம் போல சிறப்பாக ஆடுகிறார் . சண்டை செய்கிறார் . ஸ்டைல் பண்ணுகிறார் . பேயாக வரும்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார் .
ரித்திகா சிங் சுழன்று சுழன்று குதித்து குலுங்கி ‘மத்தியப் பிரதேசம்’ திறந்து ஆடுகிறார் . பேயாக வரும் காட்சிகளில் மிரட்டுகிறார் .
உணர்ச்சிப் பிழம்பான கேரக்டரில் நடிப்பைக் கொட்டி இருக்கிறார் சக்தி வாசு . பேயாக வரும் காட்சிகளில் வாசு, ரித்திகா சிங் இருவருமே உடல் மொழிகளால் அசத்துகிறார்கள் .
சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்கள் வடிவேலுவும் ஊர்வசியும் .
வடிவேலுவின் உடல் மொழிகள் வசீகரிக்கின்றன . பானு பிரியா பாந்தமாக நடித்துள்ளார் .
படத்தில் பல காட்சிளின் அளவை , நீள நீள வசனங்களை கத்தரி போட்டு இருக்கலாம் . நச்சென்று பாரட்டும்படியான காட்சிகளை , கதைப் போக்கை இன்னும் படத்தில் சேர்த்து இருக்கலாம் .
அந்த விசாரணை ஏரியாவை இன்னும் விவரமாக அழுத்தமாகச் சொல்லி இருக்கலாம் .
அதுவரை சொல்லப்பட்ட சம்பவங்களுக்கு அப்பாற்பட்டு வெளியே போகும் கிளைமாக்சுக்கு மாறாக அதுவரை சொல்லப்பட்ட முக்கிய கதைப் போக்கில் இருந்தே கிளைமாக்சை கொண்டு வந்திருக்கலாம் .
சாமி, பேய் . மத நல்லிணக்கம் , பாட்டு , சண்டை , எல்லாம் கலந்த கலவையாக இருக்கிறது படம்
மொத்தத்தில் சிவலிங்கா ..’ஷிவர்’லிங்கா









