திருக்குமரன் எண்டர்பிரைசஸ் மற்றும் தங்கம் சினிமாஸ் சார்பில் சி வி குமார் மற்றும் தங்கராஜ் தயாரிக்க, மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், கருணாகரன், வாகை சந்திரசேகர், ராதாரவி, எம் எஸ் பாஸ்கர், கவி, கல்கி, அருள்தாஸ், யோக ஜேபி , கராத்தே கார்த்தி நடிப்பில் எஸ் ஏ அர்ஜுன் இயக்கி இருக்கும் படம்
ஆளுங்கட்சியின் நேர்மையான நிறுவனர் கண்ணபிரான் (வாகை சந்திரசேகர்) நெடுநாள் கோமாவுக்கு போய்விட, ஊழல் பேர்வழி சத்தியசீலன் முதல்வராகி விடுகிறார். கண்ணபிரானின் நெருங்கிய நல்ல நண்பர் ஞானோதயத்தின் (எம் எஸ் பாஸ்கர்) மகனான அருமை பிரகாசம் ( கருணாகரன்) ஊழலில் கரைகண்டு இருக்கிறார்.
நினைவு திரும்பிய கண்ணபிரான் இவர்களை தண்டித்து கட்சியைத் தூய்மைப்படுத்த முயல,அவரால் முடியாமல் போக, கட்சியில் இருந்து வெளியேறி நண்பர் ஞானோதயத்தோடு சேர்ந்து புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் . அவருக்கு மக்கள் இமேஜ் பெருக,
ஒரு கேம் ஆப் மூலம் கருப்புப் பணத்தை வெளியாக்கி மக்களுக்கு நேரடியாக அனுப்பி பணத்தால் அடித்து ஓட்டு வாங்க முயல்கிறது சத்தியசீலன் அருமைப் பிரகாசம் கையில் உள்ள பழைய கட்சி.
மதுவின் அளவு குறைந்து விட்டால் பாம்பு வந்து கொத்துவது போலவும் , இல்லாத காதலி இருப்பது போல கற்பனை செய்து கொண்டும் செயல்படும் கடத்தல் பேர்வழி குருநாத்தை ( மிர்ச்சி சிவா) பிடிக்க போலீஸ் அதிகாரி பிரம்மா (யோக ஜேபி) முயல்கிறார் .
எலக்சன் நெருங்க மக்களுக்குப் பணம் போடுவதற்குள், தவறுதலாக அருமைப் பிரகாசத்தை கடத்தி விடுகிறது குருநாத் அணி .
அடுத்து நடந்தது என்ன என்பதை காமெடியாக சொல்ல முயன்று இருக்கிறார்கள் . ஆனால் அவை எல்லாம் பிடிக்க ஆரம்பித்த சில நிமிடங்கள் மட்டுமே பிள்ளையாராக இருந்து விட்டு அப்புறம் குரங்காக மாறிவிடுகின்றன.
மிர்ச்சி சிவா வழக்கம் போல.
கருணாகரனுக்கு வாய்ப்பு அதிகம்.
மதுவின் அளவு குறைந்து விட்டால் பாம்பு வந்து கொத்துவது போலவும் , இல்லாத காதலி இருப்பது போல கற்பனை செய்து கொள்வது , வெள்ளை நிற அறை சித்திரவதை போன்ற சில ஐடியாக்கள் ஒகே . ஆனால் அவை எல்லாம் அடுத்தடுத்த பத்து நிமிடங்களில் பல்லிளித்து விடுவதால், ரசிகர்கள் சிரிக்கும்படி இல்லை.
கார்த்திக் தில்லையின் ஒளிப்பதிவும எட்வின் லூயிஸ் விஸ்வநாத்தின் பின்னணி இசையும் சிறப்பு
முதல் பாக விஜய் சேதுபதி கேரக்டர் போலவே மிர்ச்சி சிவா இருப்பது பலமாக அமையவில்லை.
டார்க் காமெடி என்று நினைத்து எடுக்கப்பட்டிருக்கும் பல காட்சிகள் எந்த கலர் காமெடியாகவும் இல்லை .
சூது கவ்வும் முதல் பாகத்தில் இருந்த வித்தியாசம் , நாவல்டி, காமெடி எதுவும் இதில் இல்லை .
எனவே சூது கவ்வும் 2…. கழுத்தைக் கவ்வும் .
