2016 ஆம் ஆண்டு இவரே இயக்கிய ‘ஐ போன் ஸ்ரீயும் அயனாவரம் ரவியும்’ குறும்படத்தின் விரிக்கப்பட்ட வடிவம்.
உணவு ஆர்டர் செய்வது, பொருட்கள் வாங்குவது, மெசேஜ் அனுப்புவது இப்படி நாம் சொல்கிற வேலைகளை மட்டும் செய்யும் ஸ்மார்ட் போன், ஒரு நிலையில் நமக்கு என்ன தேவை என்பதை தானாகவே உணர்ந்து , செயற்கை நுண்ணறிவு மூலம் அதுவாகவே – பிசினசில் பணக்காரன் ஆக்குவது வரை – செய்தால் எப்படி இருக்கும் .
அப்படி ஒரு செல்போனை கண்டுபிடிக்கும் ஒருவர் ( ஷாரா) அதற்கு Software Intelligence of Moderating and Regulating Analysis of Nature (அல்லது Navigation ) என்பதன் சுருக்கமாக SIMRAN என்று பெயர் வைக்கிறார். போனின் திரையில் ஒரு அழகான பெண் உருவம் ( மேகா ஆகாஷ் ) தோன்றிப் பேசும் .

திருடப்படும் அந்த போனை உணவு டெலிவரி செய்யும் இளைஞன் (சிவா) ஒருவன் ஒரு கடையில் விலைக்கு வாங்குகிறான் . அலாவுதீன் அற்புத விளக்கின் நவீன அவதாரம் போன்ற அந்த செல் ஃபோன் அவனுக்கு வேண்டிய எல்லாம் செய்கிறது . ஆன் லைன் விளையாட்டுகளில் கோடி கொடியாக சம்பாதித்துத் தருகிறது . தொழிலை நவீன முறையில் செய்ய வைத்து புகழ்பெற வைக்கிறது .
அவனுக்கு ஒரு அழகுக்கலை நிபுணர் மீது (அஞ்சு குரியன்) காதல் வருகிறது . ஆனால் சிம்ரனுக்கும் அவன் மீது காதல் வருகிறது . சிம்ரன் உடனான காதல் என்பது கல்யாணம் குடும்பம் என்று எல்லாம் போக முடியாது என்பதால் அவன் அதை மறுக்க, சிம்ரன் வற்புறுத்த , ஒரு நிலையில் ஆப்டர் ஆல் நீ ஒரு போன் என்று அவன் சொல்ல, கோபப்படும் சிம்ரன் அவன் காதல் , தொழில் எல்லா வகையிலும் செய்யும் குழப்பங்களும் அதன் விளைவுகளுமே படம்.
எந்திரன் படத்தில் ஆண் ரோபோவுக்குப் பதில் இதில் பெண் ஸ்மார்ட் போன் . அது அதிரடியான ரகளை . இது காமெடி முயற்சி .
சிவா வழக்கம் போல நடிக்கிறார் . அவ்வப்போது சிரிக்க வைக்கிறார் .

சிம்ரனாக வரும் மேகா ஆகாஷ் ஒரு நல்ல இளம் பெண்ணுக்கான வெள்ளந்தி குணம் , தனது தொழில் நுட்ப பலத்துக்கான கம்பீரம் இரண்டையும் காட்டும்படி சிறப்பாக நடித்துள்ளார் .
அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளில் கணினி வரைகலை அருமை
அஞ்சு குரியன் இளமை விரியன் .
பாடலில் மட்டுமல்ல நடிப்பிலும் எஸ் பி பி யின் இளவல் போன்ற உணர்வை ஏற்படுத்தும்படி நடித்துள்ளார் மனோ .
முதல் பாதி சுவாரஸ்யமாக இருந்தது . இரண்டாவது பாதி தேவையான அளவுக்கு சிறப்பான திரைக்கதை இல்லாத காரணத்தால் கொஞ்சம் ஜஸ்ட் ஒகே சொல்லும் தூர்தர்ஷன் டிராமா மாதிரி ஆகி விட்டது .