தயாரிப்பாளர் ஷிபு தமீன்சின் ஹெச் ஆர் பிக்சர்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் சார்பில் ஷிபு தமீன்சின் மகள் ரியா ஷிபு மற்றும் மும்தாஸ் தயாரிக்க,
ஷிபு தமீன்சின் மகன் ஹிருது ஹாரூன் ஹீரோவாக நடிக்க, உடன் அனஸ்வரா ராஜன், சிம்ஹா, ஆரோக்கிய தாஸ், முனீஸ்காந்த் நடிப்பில்
நடன இயக்குனர் பிருந்தா – ஹே சினாமிகா படத்துக்கு அப்புறம் – இரண்டாவதாக இயக்கி இருக்கும் படம்.
சர்வ பலங்களும் கொண்ட தாதா ஒருவருக்கு ( தேனப்பன்) கடைநிலை அடியாளாக இருக்கும் ஒருவனுக்கும் ( ஹிருது ஹாரூன்) அனாதை இல்லத்தில் வளர்ந்த பேச்சுத் திறன் இல்லாத அழகிய இளம்பெண்ணுக்கும் ( அனஸ்வரா ராஜன்) காதல்.
தாதாவின் முக்கியக் கையாள ஒருவனின் தம்பி அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க, அதை காதலன் தட்டிக் கேட்க, நடக்கும் சண்டையில் கையாள் தம்பி கொல்லப்படுகிறான்.
இனி நாம் தப்பிக்க முடியாது என்று காதலன் நினைக்க, தாதாவால் பாதிக்கப்பட்ட ஒருவன் கொடுக்கும் ஐடியா படி அவனோடு சேர்ந்து தாதாவின் பணத்தையும் முக்கிய டாக்குமென்ட்களையும் கொள்ளை அடிக்கிறான் காதலன் .
கொள்ளை அடித்த நண்பன் டாக்குமென்ட்களோடு ஆஸ்திரேலியா போய்விட, காதலன் போலீசில் மாட்டி ஜெயிலுக்குப் போகிறான் . டாக்குமென்ட்களைக் கேட்டு ஜெயிலுக்கே வந்து உதைக்கிறார் தாதா
சிறுமியான தன் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற இரண்டு இளைஞர்களை வெட்டிவிட்டு – மனைவி மற்றும் மகனைப் பிரிந்து – ஜெயிலுக்கு வருகிறார் ஒருவர் (சிம்ஹா) .
இவர்களும் இவர் போன்ற இன்னும் சிலரும் அராஜக ஜெயிலரையும் (ஆர் கே சுரேஷ்) மீறி , சிறை அறைக்குள் இருந்து தரைக்கு அடியில் சுரங்கம் வெட்டி தப்பிக்க முயல, என்ன நடந்தது என்பதே படம் .
நாயகன் ஹிருது ஹாரூன் இளம் நாயகனாக ஜொலிக்கிறார் . நன்றாக நடிக்கிறார் . நல்ல தோற்றம் . நல்ல வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து நடித்தால் புகழ் பெறலாம் . நல்ல கதை திரைக்கதைத் தேர்வு ரொம்ப முக்கியம் .
நூற்றுக் கணக்கான படங்களுக்கு நடனம் அமைத்த சிறப்பான அனுபவம் கொண்டு படத்தை அற்புதமாக இயக்கி இருக்கிறார் பிருந்தா. தொழில் நுட்ப அறிவின் அடர்த்தி காரணமாக அற்புதமான படமாக்கல் செய்து இருக்கிறார் பிருந்தா . கேமரா மூலம் காட்சிகளில் மேஜிக் செய்கிறார். கிரேட் . சாம் சி எஸ் சின் பின்னணி இசை, பிரியேஷ் குருசாமியின் பிரம்மாதமான ஒளிப்பதிவு இரண்டும் படத்துக்கு பெரிய பலம். சண்டைக் காட்சிகள் சும்மா தெறிக்க விடுகின்றன . கலை இயக்கம் அருமை .
எல்லாம் இருந்தும் பழகிய கதை திரைக்கதை, தேவைக்கு மேல் நீளும் காட்சிகள் எல்லாம் படத்தை சரசரியாக்கி விட்டன .
படத்தின் முழுப் பெயர் குமரி மாவட்டத்தின் தக்ஸ். ஆனால் துணைக் கதாபாத்திரங்கள் மட்டுமே லேசாக குமரித் தமிழ் பேசுகின்றன. பெரிய கதாபாத்திரங்கள் எல்லாம் தனக்குத் தெரிந்த தமிழே பேசுகின்றன. அவளைத் தொடுவானேன் . அப்புறம் கவலைப் படுவானேன்?
எழுத்து சிறப்பாக இல்லாத காரணத்தால் படத்தின் தலை எழுத்து மாறி விட்டது .