ஆர் ஆர் சினி ஆர்ட்ஸ் சார்பில் சிவன் மற்றும் செல்வன் இருவரும் தயாரிக்க, ராஜா , காஷ்மிரா, மதுமாறன், பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் பலர் நடிக்க ,
சிவா. ஜி . என்பவர் இயக்கி இருக்கும் படம் சுட்ட பழம் சுடாத பழம் . படம் காயா பழமா ? பார்க்கலாம் .
பணத் திமிரும் ஆணவமும் கொண்ட ஒரு பணக்காரனின் ( தயாரிப்பாளர் செல்வன்) மனைவிக்கும் (லதாராவ்), ஒரு ஆட்டோ டிரைவரின் (மதுமாறன்) மனைவிக்கும்,
மருத்துவமனையில் ஒரே நேரத்தில் குழநதைகள் பிறக்கின்றன .
எஸ் .. அதேதான், குழந்தைகள் மாறி விடுகின்றன .
இரண்டு குழந்தைகளும் வளர்ந்து ஒரே பள்ளியில் படிக்கின்றன .
தான் வளர்க்கும் ஆட்டோ டிரைவரின் மகனின் (மாஸ்டர் சாய் ) பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு வருகிற — ஆட்டோ டிரைவரின் மகனாக வளர்கிற,
தனது மகனையே ( ரியாஸ்கான் — உமா ரியாஸ்கான் தம்பதியின் மகனான மாஸ்டர் சமர்த்)….
அந்தஸ்தின் பெயரால் அவமானப்படுத்துகிறான் பணக்காரன்
இதற்கிடையே அந்த பணக்காரனின் தொழில் விரோதிகள் அவனை தோற்கடிக்க அவன் மகனைக் கடத்த முடிவு செய்து அந்த வேலையை ஒரு கடததல்காரனிடம் ( கஸ்பார் ) ஒப்படைக்கிறான் .
அந்த தாதா கடத்தல் வேலையை, ஒரு குழுவாக இயங்கும் நான்கு கடத்தல்காரர்களிடம் ( கிங்காங், சுருளி மனோகர், மகாநதி ஷங்கர், ரோபோ ஷங்கர் ) ஒப்டைக்கிறான்.
மேற்சொன்ன நான்கு பரையும் பிடிக்கிற முயற்சியில் தனியார் டிடக்டிவ் ஒருவரும் (லொள்ளு சபா உதய்) அவரது உதவியாளரும் (வடிவேல் பாலாஜி ) இருக்கிறார்கள்.
இவர்களுக்கு உதவி செய்கிறார் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் ( பயில்வான் ரங்கநாதன்)
இன்னொரு பக்கம் , பிரபல கதாநாயகி நடிகை (காஷ்மீரா ) தனது காதலனுடன் (ராஜா ) ஓடிப்போக , அவளைக் கண்டுபிடிக்க ரவுடிகளை அனுப்புகிறாள், நடிகையின் வளர்ப்புத் தாய் .
நடிகையை வைத்து முதல் படம் எடுத்து ஓட்டாண்டியாகிப் போன நிலையில், அடுத்து அவளது கால்ஷீட் கிடைக்காத கடுப்பில் இருந்த பழைய புரடியூசர் தமிழ்மணி (ஜெயசூர்யா ),
நடிகையை கண்டுபிடித்து , அவளையும் அவள் காதலனையும் வைத்து ரகசியமாக படம் எடுக்கிறார் .
இந்த நிலையில் பணக்காரனின் மகனைக் கடத்தப் போன , குழந்தைக் கடத்தல் பேர்வழிகள் குழு , பணக்காரனின் மகனுக்குப் பதிலாக ஆட்டோ டிரைவரின் மகனை…
அதாவது பணக்காரனின் நிஜ மகனைக் கடத்திக் கொண்டு வந்து விடுகின்றனர் .
அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்த படம் .
சிறுவர்களின் நடிப்பு நன்றாக இருக்கிறது
பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு பாடலுக்கு வந்து நடனம் ஆடுகிறார் . பாடலை அவரே பாடி இருக்கிறார் .
சினிமாவிலும் தொலைக்காட்சி நிகழ்சிகளிலும் நாம் பார்த்த நிறைய காமெடி நடிகர்கள் படத்தில் இருப்பதால் சில இடங்களில் சிரிக்க முடிகிறது .
பணக்காரன் ஆட்டோ டிரைவர் இருவருக்கும் தங்கள் நிஜ குழந்தை யார் என்று தெரிந்த பின்னரும் கிளைமாக்சில் அவர்கள் எடுக்கும் முடிவு கவனிக்க வைக்கிறது .
மற்றபடி கதை, திரைக்கதை, வசனம் , படமாக்கல் , நடிப்பு என்று எல்லாவகையிலும் நேர்த்தியும் அக்கறையும் தேவைப்படும் படம் இது