பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ் சார்பில் கிரிஜா வரதராஜ் தயாரிக்க, ராணவ் , ரோஸ்மின், கிரித்திக் மோகன், அமிதா ரங்கநாத், ஊர்வசி அர்ச்சனா, ரங்கநாதன் , சம்பத்ராஜ் , கஸ்தூரி நடிப்பில் காந்தி கிருஷ்ணா இயக்கி இருக்கும் படம்.
ஆன்லைனில் சந்திக்கும் ஓர் இளைஞனும் ( கிருத்திக் மோகன்) ஓர் இளம் பெண்ணும் (அமிதா ரங்கநாத்) உடனே ஜோடியாகி பாரின் போய் இஷ்டம் போல ‘புகுந்து விளையாடி விட்டு’ அப்புறம் திருமணம் செய்து கொள்கிறார்கள். கொஞ்ச நாளிலேயே ஒத்துப் போகவில்லை . விவாகரத்துக்கு விண்ணப்பிக்க, மனநல மருத்துவரிடம் (கஸ்தூரி ) அனுப்பி வைக்கிறார் நீதிபதி ( வினோதினி வைத்தியநாதன்)
ஒரு காதல் ஜோடியின் கதையை இவர்களுக்கு சொல்கிறார் மனநல மருத்துவர்.
கிராமத்தில் வாழும் அப்பா அம்மா மீது ( ரங்கநாதன்- ஊர்வசி அர்ச்சனா) மிகுந்த பாசம் கொண்ட ஒரு மகன் (ராணவ் ), சென்னைக்கு வந்து நண்பனோடு ( ரவி மரியா) தங்கியபடி கிடைத்த வேலையை செய்து வருகிறான் .
ஒரு பிஸ்கட் கம்பெனி அதிபரின் (சம்பத் ராஜ்) பிஸ்கட் தொழிற்சாலையில், ஒரு மிஷின் ரிப்பேர் ஆகி தயாரிப்பு பாதிக்கப்பட, பல லட்ச ரூபாய் செலவில் வெளிநாட்டில் இருந்து பலர் வந்தும் சரி செய்ய முடியாத நிலையில்,
மெக்கானிக் வேலையும் தெரிந்த அந்த கிராமத்து இளைஞன், ஒரே ஒரு போல்ட்டை சரி செய்து மிஷினை இயக்குகிறான் .
அப்புறம் என்ன ? தொழில் அதிபரின் பிடிவாதக்கார மகளுக்கும் (ரோஸ்மின்) அவனுக்கும் காதல். அந்தக் காதல் அப்பாவுக்கு பிடிக்காமல் போக, கோபத்தில் அப்பாவும் மகளும் ஒருவருக்கு ஒருவர் சாபம் விட்டுக்கொண்டு பிரிய ,
காதலனும் காதலியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். சொத்தில் தனது பங்கை வாங்கி வசதியாக வாழ்கிறார்கள்.
ஊரில் உள்ள அம்மா அப்பாவை கணவன் அழைத்துக் கொண்டு வர , அந்த மாமனார் மாமியாரின் கிராமத்து குணம் இவளுக்குப் பிடிக்கவில்லை.
எனவே அவர்களை முதியோர் இல்லத்தில் மனைவி சேர்க்க, கணவன் கொந்தளிக்க , கோபத்தில் பல கந்தரக் கோலங்கள் நடக்க,
இதை எல்லாம் முதல் ஜோடியிடம் சொல்லும் மன நல மருத்துவர் அதன் மூலம் ஏதாவது அறிவுரை சொல்வார் என்று பார்த்தால்,
விதி பட பாணியிலும், ”அந்த கொழந்தையே நீங்கதான் சார் …” ஸ்டைலிலும் ஒரு கதை சொல்கிறார் இயக்குனர் காந்தி கிருஷ்ணா.
சரி அதையாவது சரியாக பயன்படுத்தி ஒரு கிளைமாக்ஸ் கொடுப்பார் என்று பார்த்தால் .. ம்ஹும்.
இரண்டு அழகான காதல் ஜோடி , நவீன பாணி காதல் மற்றும் கசமுசா , திருமணம் வரை வந்தும் மெச்சூரிட்டி இல்லாத பெண் (அமிதா ரங்கநாத்) , எம் ஜி ஆர் கால எவர் கிரீன் ஏழைப் பையன் கோடீஸ்வர பெண் காதல் , கல்யாணம் நடந்தும் காதல் உரிமை சண்டைகள் .. என்று கதையின் அடிப்படை ஒன்றும் அவ்வளவு ஆபத்தானது இல்லை.
இதை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமாக காட்சிகள் எழுதி இருந்தாலே ஒரு வெற்றி படத்தை கொடுத்து இருக்கலாம் .
ஆனால் அதை செய்யவில்லை.
அயல்நாட்டுப் பனிமலையின் சூடேற்றும் காதல் பாடல் காட்சி பிரமாதம். காதல் கலந்த கிளாமர் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார் இயக்குனர் காந்தி கிருஷ்ணா.
எம் வி பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு கம்பீரம் சேர்க்கிறது. . ஷாட்கள் ஃபிரேம்கள் அருமை
ஜி வி பிரகாஷ் குமாரின் இசையும் பாடல்களும் குறையில்லை … இப்படி படத்தில் நல்ல விசயங்கள் இல்லாமல் இல்லை .
இளமையான ஹீரோயின்கள், ஹீரோக்கள் ! ரோஸ் மில்க் மாதிரி இருக்கிறார் ரோஸ்மின். ஆனாலும் அதை விட அமிதா ரங்கநாத் முகத்தின் ஒவ்வொரு மில்லி மீட்டரும் துடித்துக் கவர்கிறது. so cute செல்லம்.
ராணவ் சிறப்பு. மிக உற்சாகமாக நடித்துள்ளார் கிரித்திக் மோகன்
நாயகனின் அம்மாவாக அற்புதமாக நடித்திருக்கிறார் ஊர்வசி அர்ச்சனா. எதிர்பாராத விதமாக கல்யாணம் செய்து கொண்டு தம்பதியாக வந்து நிற்கும் மகனுக்கும் மருமகளுக்கும் ஆரத்தி எடுக்கும் காட்சி ஒன்றில் அர்ச்சனாவின் நடிப்பு சிலிர்க்க வைக்கிறது . 100 % பர்ஃபக்ட் நடிப்பு
இவை எல்லாம் இருந்தும் திரைக்கதையில் ஒரேயடியாகக் கோட்டை விட்டு இருக்கிறார்கள் என்றால் என்ன ஓர் அநியாயம்.!
பொருத்தமோ லாஜிக்கோ இல்லாத, ஏற்க முடியாத, யதார்த்தமற்ற , செயற்கையான, வம்படியான காட்சிகள் தான் இந்தப் படத்ததுக்கு எமன்
ராணவ்வும் ரவி மரியாவும் வாடா போடா நண்பர்களாம். அவர் வயசுக்கு இவர் வயசுக்கு எப்படி பொருந்தும்? பிரேமில் பார்க்கும்போதே அந்நியமாக இருக்கிறது. மாமா சித்தப்பா என்றாவது சொல்லக் கூடாதா?
‘இல்லை..இல்லை.. அவர்கள் வயது கடந்த நண்பர்கள்’ என்றால் அதை அடிக்கோடிட்டு சொல்ல வேண்டாமா?
அதுவும் கடைசியில் டுவிஸ்ட் என்று நம்பி ரவி மரியா கதாபாத்திரத்துக்கு ஒரு end கொடுக்கிறார்கள் பாருங்கள்… கொடுமை. !
திமிர் பிடித்த – ஓவராக செல்லம் கொஞ்சும் பணக்கார மகள் என்பதை சினிமாத்தமாக சொல்லும்போதே, பிற்பகுதியில் அப்பாவும் மகளும் முட்டிக் கொள்வார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்படி இருக்கிறது. அவ்வளவு ஓப்பன்.
அயல்நாட்டு ஸ்பெஷலிஸ்ட் என்ஜினீயர்களாலும் தீர்க்க முடியாத, அந்த பிஸ்கட் ஃபேக்டரி மெஷின் ரிப்பேரை, ஒரு சாதாரண துப்புரவுத் தொழிலாளி சரி செய்கிறான் என்பது சுவாரஸ்ய காட்சியாக ஓகே. ஆனால் அதை நம்பும்படி சொல்ல வேண்டாமா? ஏதோ கம்ப் யூட்டரை தட்டிவ போல்ட்டை முறுக்கிவிட்டு ஒரு வாக்கியத்தில் பதில் சொல்லி முடித்தால் போதுமா? தெளிவில்லை.
பணக்கார பெண் ஏழை இளைஞன் காதல் இன்றும் சுவையான விஷயம்தான். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளும்படியான காட்சிகள் மூலம் சொல்ல வேண்டாமா? அதெல்லாம் தேவையில்லை என்பதற்கு இவர்கள் என்ன எம் ஜி ஆரும் ஜெயலலிதாவுமா? எடுத்த எடுப்பிலேயே மக்கள் ஏற்றுக் கொள்ள?
அவ்வளவு பாசமான மகன் அம்மா அப்பாவுக்கு சொல்லாமல் கல்யாணம் செய்வானா?
அப்பா அடித்து விரட்டி விட்ட நிலையில் ”நமக்கு உங்க அம்மா அப்பா தவிர யார் இருக்கா. அவங்களை அழைச்சுட்டு வந்து நம்மோட வச்சுக்கலாம் ” என்று மனைவியே சொன்னதால்தான் கணவன் தனது பெற்றோரை அழைத்து வருகிறான்.
வந்த இடத்தில் மாமியார் துணி துவைத்து பங்களாவில் கார்டனில் கொடி கட்டிக் காயப் போட்டது தப்பாம். பாத்ரூமில் மாமியார் மஞ்சள் பூசிக் குளித்த நிறத்தை, மலம் என்று நினைத்து கோபப்படுவாளாம் மனைவி . அதனால் அவர்களை வீட்டை விட்டே அனுப்புகிறாளாம்.
சினிமா எடுத்தார்களா? வீடியோ கேம் எடுத்தார்களா என்றே புரியவில்லை.
தொழிலதிபரின் இரண்டாம் மனைவி என்று ஒரு கேரக்டர் . அது ஏன் ஒரு வேலைக்காரி மாதிரியே காட்டப்பட்டுள்ளது என்பதுதான் இந்தப் படத்தில் உள்ள ஒரே சஸ்பென்ஸ்.
இத்தனைக்ககும் பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ் தங்கமான தயாரிப்பு நிறுவனம். ஒரு சிறு குறை வைக்காமல் பணத்தை அள்ளி இறைத்து இருக்கிறார்கள் . இப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைப்பதே ஒரு வரம் .
விஜயகாந்த் நடித்த ரமணா படம் நினைவு இருக்கிறதா? அரசு மருத்துவமனையில் இறப்புச் சான்றிதழ் தரப்பட்ட ஒரு பிணத்துக்கு, நோயாளி என்று சொல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை என்ற பெயரில் பல கோடி ரூபாய் பில் போடுவார்கள்.
அப்படியொரு உயிரற்ற திரைக்கதைக்கு, அட்டகாசமான மேக்கிங் மூலம் பல கோடி ரூபாய்க்கு பில் போட்டு இருக்கிறார்கள் இந்தப் படத்தில் .
இந்தப் படத்தின் இயக்குனர் காந்தி கிருஷ்ணாவும் சாதாரண மனிதர் அல்ல.
விஷால் அறிமுகமான செல்லமே படத்தின் இயக்குனர் இவர்தான் . இதற்கு முன்பு வரை இவர் இயக்கிய நிலாக்காலம். செல்லமே , ஆனந்த தாண்டவம் ஆகிய மூன்று படத்தின் கதையும் எழுத்தாளர் சுஜாதாதான்.
இவை எல்லாம் பெரிய விஷயம் இல்லை
மாதுரி தீட்ஷித், அரவிந்தசாமி நடிக்க, இவர் இயக்கத்தில் 1998 இல் உருவான என்ஜினீயர் படம் அன்றைய தமிழ் சினிமாவையே அதிர வைத்த புராஜக்ட் . இந்திய சினிமாவே தமிழ் சினிமாவை வாய் பிளந்து பார்த்த தருணங்களில் அதுவும் ஒன்று .
குஜராத்தில் கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணையால் பெரும் பாதிப்புக்கு ஆளான பழங்குடி மக்களை காக்கப் போராடிய சமூக சேவகர் மேதா பட்கர் இன்ஸபிரேஷனில் உருவான கேரக்டரில் மாதுரி தீக்ஷித்தும்….
அவரது கணவராக , டேம் கட்டும் நிறுவனத்தின் என்ஜினீயராக அரவிந்த்சாமியும் நடித்த அந்தப் படத்துக்கு, அப்போது இருந்த எதிர்பார்ப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல.
ஆனால் (எண்பது சதவீதம் படப்பிடிப்பு முடிந்த பிறகு?) அந்தப் படம் கைவிடப்பட்டது ஒரு கொடுமையான விஷயம் . அந்தப் படத்துக்கும் எழுதியது சுஜாதாதான் .
இது பற்றி 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி அன்று கூட மாதுரி தீட்ஷித் tumblr சோஷியல் மீடியா தளத்தில் ஒரு பதிவு போட்டு இருந்தார் என்றால் அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எப்படிப்பட்டது புரிந்து கொள்ளலாம் . 2018 ஆம் ஆண்டு மீண்டும் இந்தப் படம் தொடர்ந்து எடுக்கப்படுமென்று செய்தி வந்தது . அதுவும் நடக்கவில்லை
இப்போது சுஜாதா இல்லாதது காந்தி கிருஷ்ணாவுக்கு ஓர் இழப்புதான் . ஆனால் அதில் இருந்து மீண்டு நல்ல எழுத்தாளர்களுடன் இணைந்து காந்தி கிருஷ்ணா வெல்வதற்கு வாழ்த்துகள் .
ஒரு திரைப்படத்தின் முதன்மையான மூலதனமும் முதலீடும் (Capital & Investment ) திரைக்கதைதான் என்பதை, மீண்டும் நிரூபிக்கிறது Breakfast .
