காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் தூத்துக்குடி ஸ்டெரிலைட் செப்பு ஆலையை மூடவும் கோரி திரை உலகம் இன்று (ஏப்ரல் 8 ஆம் தேதி ) வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய 9 மணி முதல் ஒரு மணி வரையிலான மவுன போராட்டம் தடியும் உடையாமல் பாம்பும் சாகாமல் பக்குவமாய் நடந்து முடிந்தது .
கருத்துக்களமாக – உரிமைக் குரலாக இல்லாமல் – மவுனப் போராட்டமாக நடந்ததில் நடுநிலைமை கொண்ட பலருக்கும் உடன்பாடு இல்லை.
எனினும் எல்லோரையும் பேச விட்டு அது அரசுகள் மீதான தாக்குதலாக போனால் , திரைப்பட வேலை நிறுத்தத்துக்கு தமிழக அரசின் உதவியை கோரி உள்ள நிலையில் அதில் சிக்கல் வரலாம் என்பதால் மவுனப் போராட்டமே முடிவு செய்யப்பட்டது .
ஒன்பதேகால் மணிக்கு வந்த விஜய் பனிரெண்டு மணிக்கு கிளம்பிப் போனார் . ஒன்பதரை மணிக்கு வந்த சிவ கார்த்திகேயன் கடைசி வரை இருந்தார்.
பத்து மணி முதல் பிரபல நடிகர்கள் பலரும் வந்தனர் .
நிகழ்வின் ஆரம்பத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர் நிகழ்வை விளக்கிப் பேசினார் .
நிகழ்வின் முடிவில் தண்ணீர் இல்லாத காய்ந்து பதரான நெல் மணிகளை காட்டி விஷால் பேசினார்
கமல் வந்து அரை மணி நேரம் கழித்து ரஜினி வந்தார் .
ஆரம்பத்தில் சில வார்த்தைகள் கமலும் ரஜினியும் பேசியதோடு சரி . பின்னர் வெகு நேரம் ரஜினியிடம் கமல் பேசவே இல்லை .
பொதுவாக மேடையில் ஒன்றாக அமர்ந்தால் தொடர்ந்து பேசிக் கொள்ளும் ரஜினியும் கமலும் இப்படி பேசாமல் இருந்தது இதுவே முதல் முறை . இது குறித்து பத்திரிகையாளர் தரப்பில் இருந்து வந்த கமெண்டுகள் கமல் காதில் விழுந்திருக்க வாய்ப்புள்ள நிலையில் கடைசியில் சில வார்த்தைகள் இருவரும் பேசிக் கொண்டனர் . அதோடு சரி
இன்னொரு பக்கம் தனுஷ் சிவகார்த்திகேயன் இருவருக்கும் இருந்த விலகல் இந்த நிகழ்வில் மாறியது . தனுஷ் வந்தபோது சிவ கார்த்திகேயன் எழுந்து இடம் கொடுக்க , தனுஷ் மறுத்தும் சிவகார்த்திகேயன் வற்புறுத்த , அமர்ந்தார் தனுஷ் . அவர் பக்கத்தில் சிவ கார்த்திகேயன் அமர இருவரும் ஈடுபாட்டோடு பேசிக் கொண்டே இருந்தார்கள் .
ஒரு நிலையில் ரஜினி தன் பக்கத்தில் தனுஷை அழைத்து உட்கார வைத்துக் கொண்டார் .
அஜித் , அர்ஜுன் , பிரகாஷ் ராஜ், சரத்குமார் , ராதாரவி, அதரவா , பிரபு , விக்ரம் பிரபு , வடிவேல், ஜீவா , பரத் ஆகியோர் நிகழ்வுக்கு வரவில்லை . நடிகைகள் ரோகினி, கஸ்தூரி , தன்ஷிகா, ரேகா , தவிர வேறு முக்கிய நடிகைகள் யாரும் வரவில்லை . ராஜா வந்தார் ரகுமான் இல்லை . வைரமுத்து வந்தார் .
(நிகழ்ச்சிக்கு வராத சிம்பு மாலையில் தனியாக பத்திரிகையாளர்களை சந்தித்து , ” எனக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை “என்றார் .
நிகழ்ச்சிக்கு வரும் முன்பே பத்திரிகையாளர்களிடம் பேசிவிட்டு கிளம்பிய ரஜினி , ” சாதாரண விவசாயிகளின் கோரிக்கையை வெளிப்படுத்தினால் கர்நாடக ஏற்றுக்கொள்ளும் ” என்று கூறி இருந்தார் )
நிகழ்வு முடியும்போது வந்தார் இயக்குனர் ஷங்கர் .
நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் உணர்வாளர்களுக்கு இப்படி மவுனப் போராட்டமாக போவதில் உடன்பாடு இல்லை . கோஷம் போட அனுமதி கேட்ட அவர்கள் போட்ட கோஷங்களில் ராமராஜ்யம் வேண்டாம் தண்ணீர் வேண்டும் என்பது உட்பட மோடி எதிர்ப்புக் கோஷங்கள் இருந்தன.
இறுதியாகப் பேசிய பெப்சி தலைவர் இயக்குனர் செல்வமணி “கன்னட மக்களுக்கு எதிராக நாங்கள் பேசவில்லை . கன்னட மக்கள் ரொம்ப நல்லவர்கள் . ” என்றார் .
நாசர் இறுதியாக கோஷங்கள் போட நிகழ்ச்சி முடியும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் “சத்யராஜை பேசச் சொல்லுங்கள் என்று குரல் எழுப்பினார் நிகழ்வுக்கு வந்திருந்த தமிழ் இன உணர்வாளர் பால முரளி வர்மன் உள்ளிட்ட நண்பர்கள் .
ஏன் ?
இது குறித்துக் கூறும் பால முரளி வர்மன் , “இன்று திரைத்துறையினர் கலந்துகொண்ட நிகழ்ச்சி. ஆம் அது ஒரு நிகழ்ச்சிதான். அதை போராட்டமென்று சொல்லி காவிரிக்காக தமிழர் உரிமைக்காக நடைபெறும் போராட்டங்களை கொச்சைப் படுத்திவிடக்கூடாது.
எனினும் காவிரியின் பெயராலான அந்த ஒன்றுகூடலில் நமக்கான குரல் ஒலிக்கவேண்டும் என்று நினைத்தேன்.
முன்னதாக மத்திய மாநில அரசுக்கெதிராக முழக்கங்கள் எழுப்பியபோதே என்னிடம் வந்து மத்திய அரசை திட்டாதீர்கள் என்றார்கள்.
இறுதி வரை இவர்கள் மேடையில் நெளிந்தது கண்டு பொறுக்கமுடியாமல் தான் சத்யராஜை பேசச்சொல்லுங்கள் சத்யராஜ் பேசியே தீரவேண்டும் இங்கே தமிழர்குரல் ஒலித்தே ஆகவேண்டும் என்று கத்தி குரல் கொடுத்தேன்.
அவரும் ‘தம்பிகளுக்கு நன்றி. நான் எப்போதும் எந்த சூழலிலும் தமிழர்களுக்காக நிற்பேன்.இருந்தாலும்சபை நாகரிகம் கருதி நாம் அனைவரும் …….’
என்று தொடங்கவே,
‘தமிழன் நாமதான் நாகரிகம் பாக்குறோம் வேற எவன் பாக்குறான் நீங்க பேசணும் பேசணும் என்று கத்தினேன்.
திரைத்துறையில் இருக்கும் மானத்தமிழ் தம்பிகள் முத்து,சண்முகம்,கனியரசு, கதிர்,சுகுமார் அழகர்சாமி, விருமாண்டி மற்றும் உணர்வாளர்கள் என் குரலை வலுப்படுத்தினார்கள்.
சத்யராஜ் தனது பேச்சில் “. நாம் என்றுமே . தமிழ் உணர்வின் ன் பக்கம். இயற்கை அன்னை கொடுத்த வளத்தை அரசியலாக்கி கெடுக்க வேண்டாம். எந்த அரசாக இருந்தாலும், ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம். குரல் கொடுக்க தைரியம் இருந்தால் வாருங்கள். இல்லை என்றால் ஒளிந்துகொள்ளுங்கள் ‘ என்று முழங்கினார்.
அவர் முடித்ததும் இந்திய தேசிய கீதத்தை புறக்கணித்து வெளியேறினோம்.” என்கிறார் பால முரளி வர்மன் .