என் டி சி மீடியா மற்றும் வீ கேர் புரடக்ஷன் தயாரிப்பில்
எனக்குள் ஒருவன் மற்றும் ஸ்டராபெரி படங்களில் வில்லனாக நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்க, டியூப் லைட் படத்தில் நடித்த அதிதி கிருஷ்ணா நாயகியாக நடிக்க,
ஆடுகளம் நரேன்,நான் கடவுள் ராஜேந்திரன் , ஆகியோர் நடிப்பில் பாலா முருகன் என்பவர் இயக்கி இருக்கும் படம் தங்கரதம். ரசனை வடம் பிடிக்கலாமா ? பார்க்கலாம்
சின்ன வயதிலேயே அம்மாவை இழந்த நிலையில் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாத நிலையில், டெம்போ வேன் உரிமையாளர் ஒருவரிடம் (ஆடுகளம் நரேன்),
பெற்ற அப்பாவாலேயே அடைக்கலம் தரப்பட்ட செல்வா என்ற பையன் வளர்ந்து இளைஞனாகி (வெற்றி) அந்த டெம்போவுக்கே டிரைவர் ஆகிறான் .
தனக்கு ஒரு மகன் இருந்தும் வேன் உரிமையாளர் பாசமுள்ள சித்தப்பாவாக நடந்து கொள்கிறார் .
அதே ஊரைச் சேர்ந்த பரமன் என்ற வேன் டிரைவர் மற்றும் உரிமையாளரோடு (சவுந்திரராஜன்) செல்வாவுக்கு இருக்கும் தொழிற் போட்டி பரமன் மனசில் பகையாகிறது .
ஆனால் பரமனின் தங்கைக்கும் செல்வாவுக்கும் காதல் வருகிறது .
ஒரு முறை பரமன் செல்வாவை அடிக்கப் போக, அதை தடுக்கப் போன சித்தப்பாமீது பரமன் காய் வைக்க, பரமனை செல்வா அடிக்க, பகை முற்றுகிறது .
பரமனை தடுக்க என்ன செய்வது என்று யோசிக்கும் சித்தப்பா பகையை முறிக்க ஒரு முடிவு எடுக்கிறார் .
பரமனின் தங்கையை செல்வா காதலிப்பது தெரியாத சித்தப்பா , அவளை தன் சொந்த மகனுக்கு பெண் கேட்கிறார் . திருமணம் நிச்சயம் ஆன பிறகே செல்வாவுக்கு விஷயம் தெரிகிறது .
செல்வாவின் காதல் என்ன ஆனது ? பரமனின் தங்கையின் திருமணம் என்ன ஆனது ? செல்வா பரமன் பகை என்ன ஆனது ? செல்வா – சித்தப்பா பாசம் என்ன ஆனது ? என்பதே இந்த தங்கரதம்
வித்தியாசமான ஒரு பின்னணியில் வழக்கமான ஒரு காதல் கதையை எடுத்துக் கொண்டு , கொஞ்சம் சிரத்தையாகவே படத்தை எடுத்து இருக்கிறார்கள்
சில இடங்களில் உத்திகளில் கவர்கிறார் இயக்குனர் பாலமுருகன் .
வேன் உரிமையாளராக வரும் ஆடுகளம் நரேனின் பாத்திர படைப்பும் நடிப்பும் அருமை . நல்ல மனிதர்களை திரையில் (ஆவது),
பார்க்கிற சுகமே தனி. திரைக்கதை அமைத்த பால முருகனும் இதற்காகப் பாராட்டப் பட வேண்டியவர் .
பரமனாக வரும் சவுந்திரராஜா அடுத்து நடிப்பில் கவர்கிறார் .
கேமராமேன் ஜேக்கப் ரத்னராஜ் மிக சிறப்பாக பங்களித்து உள்ளார் . நல்ல கோணங்கள் , ஷாட்கள் ! நாயகி நடு ரோட்டில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு செல்லும் ஒரு ஷாட் அபாரம் .
அதே போல பழனி மலையை ஏரியல் வியூவில் பழனி ஊரோடு சேர்த்து ஒரே ஷாட்டில் காட்டும்போது மெய் சிலிர்க்கிறது . நன்றி ஜேக்கப் ரத்னராஜ் மற்றும் பால முருகன்
செல்வாவாக வரும் வெற்றி நடிப்பில் ஜஸ்ட் ஓகேதான் . ஆனால் அவர் மலையாள நெடியுடன் படம் முழுக்க பேசுவது மகா எரிச்சல்
அட டைரக்டர்களா ! இப்படி ஒரு மண்சார்ந்த கதைக்கு கூட உங்களுக்கு நம்மூர் முகங்களை ஹீரோவா போட தோணலியா ? அப்படி என்னப்பா அவங்க கிட்ட இருக்கு?
எப்போதும் தாஜ்மகாலை பார்ப்பது போன்ற வியப்பான எக்ஸ்பிரஷனிலேயே இருக்கிறார் நாயகி . சீனுக்கு ஏத்த படி மாறணும். ஓகே வா ?
புகழ் பெற்ற ஒட்டன்சத்திரம் சந்தையில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுத்த படம் என்கிறார்கள் .
சந்தைக்கு யார் ஓட்டும் வேன் சீக்கிரம் போக வேண்டும் என்ற — இரண்டு டிரைவர்களுக்கான சண்டை இவ்வளவு பெரிய பகையாக மாறுமா ? தெரியவில்லை
நல்ல நல்ல லொக்கேஷன்களுக்குப் போயும் அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டிருக்கிறார்கள் .
சொல்ல வந்ததை ஓரளவு நன்றாகவே சொல்லி இருக்கிறார்கள் . ஆனால் என்ன சொல்ல வந்தார்கள் என்பதுதான் ரொம்பவே வீக்
கிளைமாக்சில் கல்யாண மண்டபத்தில் ஆடு களம் நரேன் பேசுவதோடு படத்தை முடித்து இருந்தாலாவது ஒரு சின்ன கவிதை பூர்வமான கனம் கிடைத்து இருக்கும் .
அதுக்கு மேல ஓடுவது எல்லாம், படம் பார்க்கும் ரசிகன் மேல் வேனை மோதி அடித்துத் தூக்கி ரத்தக் களறியாக்கி மன்னிப்புக் கேட்க வைத்து மெண்டல் ஆக்கி ஈஸி சேரில் உட்கார வைத்து புலம்ப வைப்பதற்கு சமம்
தங்க ரதம் ….. ரோல்டு கோல்டு !