
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்க, துரை சுதாகர், டோனா ஜெயக்குமார் , மணி , துளசி, லட்சுமி ரூபி நடிப்பில்,
கதை திரைக்கதை வசனம் எழுதி முஜிபுர் ரகுமான் என்பவர் இயக்கி இருக்கும் படம் தப்பாட்டம் . இது தப்பான ஆட்டமா இல்லை தப்பிக்கும் ஆட்டமா ? பார்க்கலாம் .
மரண வீடுகளில் ஒலி இசைக்கும் தப்பாட்டக் கலைஞன் (துரை சுதாகர்) , அவனது அம்மா , அக்கா மற்றும் தாய்மாமன் (இயக்குனர் முஜிபுர் ரகுமான்) ….
கணவனை இழந்த அக்காவின் மகள் (டோனா) . அவளுக்கு மாமன் மேல் தீராக் காதல் .
காதல் கல்யாணத்தை நோக்கிக் கனியும் நேரம் …. அந்த ஊர்ப் பெரிய மனிதரின் மகனும் , ஆள் பலத்தை வைத்து இளம் பெண்ணை வேட்டையாடுபவனுமான ஒருவன்,
அந்தப் பெண்ணை சீண்டுகிறான் . அதனால் அவமானப் படுகிறான் .
மாமனோடு அவளுக்கு கல்யாணம் ஆகி கர்ப்பவதியாகவும் ஆகும் நிலையில் கல்யாணத்துக்கு முன்பே அவளை தொட்டு விட்டதாக காமுகன் சொன்ன பொய்யை தப்பாட்டக்காரன் நம்புகிறான் .
மனைவியை அவமானப்படுத்துகிறான் . பிரிகிறான் . அக்காவின் சாபத்துக்கும் அம்மாவின் கோபத்துக்கும் ஆளாகிறான் .
அவனையே உலகமாக நினைத்த கர்ப்பிணிப் பெண்ணின் நிலை என்ன ? அவனுக்கு உண்மை தெரிய வந்ததா ? தப்பாட்டம் ஆடும் அவன்,
மனைவி மேல் நம்பிக்கை இல்லாமல் ஆடிய தப்பான ஆட்டத்தின் விளைவு என்ன என்பதே இந்தப் படம் .
முழுமையான கிராமத்துப் படம் . ஆனாலும் லொக்கேஷன்கள் கம்மி . சாராயக் கடையை வைத்து நிறைய காட்சிகள் , கதாபாத்திரங்களின் மிகை நடிப்பு என்று முதல் பாகம் பயணிக்கிறது .
இரண்டாம் பாகம் கனம் சேர்க்கிறது . அக்கா தங்கை உறவை சொல்லும் விதம் சிறப்பு .
கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். மிக நன்றாக நடித்திருக்கும் நாயகி டோனா,
அக்காவாக நடித்திருப்பவரும் சிறப்பு . மூவரும் கரை சேர்கிறார்கள்
இரண்டாம் பகுதியில் பல இடங்களில் நெகிழ வைத்து , முதல் பாதிக்கு பரிகாரம் தேடிக் கொள்கிறார்கள் .
தப்பாட்டக் கலைஞனின் அம்மாவாக வருபவர் பேய்ப் படங்களுக்கு பொருத்தமாக இருப்பார் . இந்தப் படத்தில் வேறு மாதிரி பயமுறுத்துகிறார்.
பழனி பாலுவின் இசை படத்துக்கு சிறப்பு . பாடல்களில் கதையை நகர்த்தும் அளவுக்கு உதவி இருக்கிறார் இசை அமைப்பாளர் . பாராட்டுக்கள் .
”நான் பொறுக்கி. உன் பொண்டாட்டிய பத்தி ஆயிரம் சொல்வேன் . ஆனா பொண்டாட்டிய நம்ப உனக்கு வக்கில்ல. நீ யோக்கியமா ?” என்று வில்லன் கேட்பது, இந்தக் கதையில் ஒரு நச் .
“நான் செத்துப் போனாதான் நீ பாக்க வருவன்னா நான் முன்னேயே செத்துருப்பேன் மாமா ” என்ற வசனமும் அப்படியே .
கதை, திரைக்கதை ,வசனம் , இயக்கம் , நடிப்பு எல்லாவற்றிலும் இன்னும் செய்நேர்த்தி தேவைப்படும் படம் இது.
சரி சரி.. தொண்ணூறு கோடி செலவு பண்ணியே நம்ம ஆட்களால் விவேகம்தான் எடுக்க முடியும் என்ற நிலையில் இது போன்ற சின்னப் படங்களை ஊக்குவிப்பதுதனே கண்ணியம் .
முட்டாள்தனமாக மனைவியை சந்தேகப்படும் மடமையைக் கண்டிக்கும் வகையில் பாராட்டுக்குரிய படம் இது