TURM (குதிரைப்படை வீரர்கள் ) புரொடக்ஷன்ஸ் சார்பில் உமா மகேஸ்வரி தயாரிக்க, விவேக் பிரசன்னா, சாந்தினி,சஞ்சீவ், அனந்த் நாக்,பூர்ணிமா ரவி, பிரதோஷ், மாரிமுத்து நடிப்பில் தம்பிதுரை மாரியப்பன் இயக்கி இருக்கும் படம்.
TRAUMA என்றால் அதிர்ச்சி அல்லது கடுந்துயர் தரும் நிகழ்வு என்று பொருள்
பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் ஒரு பெண் ( பூர்ணிமா ரவி) மீது ஒருவனுக்கு ( பிரதோஷ்) காதல். ஆனால் அவளது அம்மாவுக்கு(ரமா) அவளை சாதி சன உறவில் கட்டி வைக்க ஆசை .
ஒரு தம்பதிக்கு ( விவேக் பிரசன்னா- சாந்தினி) குழந்தை இல்லை. . மனைவிக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை. ஆனால் அவனுக்கு உடம்பில் குறைபாடு . எனவே தன் குறையை மனைவியிடம் சொல்லாமல் , அவளை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துப் போகிறான் .
பெட்ரோல் பங்க் பெண்ணிடம் பெட்ரோல் பங்க் ஓனர் தவறாக நடக்க முயல , காதலிப்பவன் காப்பாற்ற , அவளுக்கும் காதல் வர, இருவரும் உறவு கொள்ள , அவள் கர்ப்பம் ஆகிறாள் . விஷயம் தெரிந்து வீட்டில் பிரச்னை வெடிக்க, காதலன் முன்பே கொல்லப்பட்டு விட்ட சேதி வருகிறது .
அப்புறம் நடந்தது என்ன என்பதே படம்
மாறும் வாழ்க்கை முறையால் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு, பெண்களுக்கு கருப்பை பிரச்னை போன்றவற்றால் குழந்தைப் பேறு சிரமாமகிறது
இதை பயன்படுத்தி குழந்தைப் பிறப்பை வைத்து, கொள்ளை லாபம் சந்திக்க மருத்துவமனைகளும். ஏஜெண்டுகளும் புற்றீசல் போலப் பெருகுகிறார்கள் .
பணத்துக்காக எந்த எல்லைக்கும் போகத் தயங்காத சமூக விரோத வேலைகள் எல்லாம் அங்கே நடைபெறுகின்றன. அதில் எல்லாம் போய் ஏன் சிக்க வேண்டும் . அதற்குப் பதிலாக ……
– என்று ஒரு நல்ல, பயனுள்ள, சமூகத்திலும் சமநிலை உருவாக்கும், ஒரு தீர்வை, சொல்லும் படம் இது .
கருத்தியலாக கவர்கிறது சமூக அக்கறை கொண்ட தம்பிதுரை மாரியப்பனின் கதையும் இயக்கமும்.
ராஜ் பிரதாப்பின் பின்னணி இசை அருமை .
அஜீத் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவும் ஓகே.
நடிகர் நடிகைகள் தேர்வும் நடிப்பும் அருமை . சின்னச் சின்ன கேரக்டர்களுக்குக் கூட நல்ல நடிகர்களை (என்னை உட்பட) பிடித்துப் போட்டு இருக்கிறார் இயக்குனர்
படத்தின் இரண்டாம் பகுதி சிறப்பாக இருக்கிறது . விவேக் பிரசன்னா நடிப்பில் நெகிழ வைக்கிறார் .
பெற்றால்தான் பிள்ளையா? உங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பது போல எத்தனை குழந்தைகளுக்கு ஒரு அம்மா அப்பா தேவைப்படுகிறது தெரியுமா?
– என்று நேரடியாக கேட்க வேண்டிய கேள்வியை மறைமுகமாகக் கேட்கும் கிளைமாக்ஸ் படத்தின் சிகரம்.
மெதுவான நகர்வு , அடுத்தடுத்து அறிமுகம் ஆகும் கதாபாத்திரங்கள் ஒன்று காணமல் போவது , அல்லது திடீர் என உள்ளே வந்து நிறைய இடம் எடுத்துக் கொள்வது , பலவீனமான வசனம் இவற்றால் TRAUMA வின் தீவிரம் ரொம்பவே குறைகிறது .