ஒய் நாட் ஸ்டுடியோஸ் புரடக்ஷன் சார்பில் சஷிகாந்த் தயாரிக்க, மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் நடிப்பில் சஷிகாந்த் முதன் முதலில் இயக்கி, ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று நெட் பிளிக்ஸ்சில் நேரடியாக வெளியாகும் படம் டெஸ்ட் .
கிரிக்கெட் தொடர்பான கதைக் களம் கொண்டது என்றாலும் படத்தின் மையக்கதை கிரிக்கெட் அல்ல என்கிறார் சஷிகாந்த் .
“ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் உயர்ந்த இடத்துக்குப் போக ஏதாவது ஒரு டெஸ்ட்டுக்கு ஆளாக வேண்டி இருக்கும். அப்படி ஆளாகும்போதுதான் பலருக்கு தனது சுயபலமே தெரியும். அப்படி வரும் சோதனையில் வென்றால்தான் வெற்றி கிடைக்கும். அப்படி நான்கு கதாபாத்திரங்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பரிசோதனைகளும் அதன் பலனுமே இந்த டெஸ்ட் .
இதில் அறிவும் திறமையும் இருந்தும் உரிய இடம் கிடைக்காமல் மேதமைக்கும் விரக்திக்கும் இடையில் போராடும் விஞ்ஞானியாக மாதவனும் கிரிக்கெட் வீரராக சித்தார்த்தும் இது போன்ற இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களில் நயன்தாரா ,மற்றும் மீரா ஜாஸ்மினும் நடிக்கிறார்கள் .
நயன்தாரா என் நெடுநாள் நண்பர் . எனவே நான் சொன்ன உடனே ஒத்துக் கொண்டார். கிரிக்கெட் வீரர் கேரக்டருக்கு சித்தார்த் தான் என்பதும் விஞ்ஞானி கேரக்டருக்கு மாதவன் என்பதும் எழுதும்போதே முடிவானது . மீரா ஜாஸ்மினும் அவரது கேரக்டருக்கு முதல் சாய்ஸ்தான் . இதன் மூலம் பத்து வருடம் கழித்து மீண்டும் தமிழுக்கு வருகிறார் மீரா ஜாஸ்மின் .

ஆனால் மாதவன் நடிக்க ஒத்துக் கொண்டாலும் ஸ்கிரிப்டில் அவ்வளவு சீக்கிரம் கன்வின்ஸ் ஆகவில்லை. மீண்டும் மீண்டும் என்னை எழுத வைத்து அவர் நினைத்த ஆழம் வந்த பிறகுதான் ஒத்துக் கொண்டார்.
நால்வரும் அற்புதமாக நடித்துள்ளனர் . மீரா ஜாஸ்மின் லண்டனில் இருந்து வந்து நடித்துக் கொடுத்து விட்டுப் போனார்.
நாசர், காளி வெங்கட் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .
படத்தில் வரும் கிரிக்கெட் காட்சிகளை சினிமா கேமராவில் படமாக்கவில்லை. மாறாக நிஜ கிரிக்கெட் பார்க்கும் உணர்வு வர வேண்டும் என்பதற்காக கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பும் கேமராவிலேயே படமாக்கி இருக்கிரேன . கிரிக்கெட் மேட்ச் பார்க்கும்போது எந்த ஆர்டரில் ஷாட்கள் வருமே அதே வரிசையில் படமாக்கி இருக்கிறேன் .
பொதுவாக சினிமாவில் படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் டப்பிங் முடிந்த பிறகுதான் பின்னணி இசை அமைக்கப்படும் . ஆனால் இந்தப் படத்தில் கிரிக்கெட் தவிர மற்ற காட்சிகளில் ஸ்கிரிப்ட் பேப்பரை வைத்து, அறிமுக இசை அமைப்பாளர் சக்தி ஸ்ரீ கோபாலனை பின்னணி இசை அமைக்க வைத்து அதற்கு, ஏற்ப காட்சிகளை எடுத்து இருக்கிறேன் . அதாவது பாடல் காட்சியை எப்படி படம் பிடிப்பார்களோ அப்படியே காட்சிகளை படமாக்கி இருக்கிறேன்

எனக்குள் இருக்கும் அனுபவம் மிக்க தயாரிப்பாளர் இயக்குனராக ஆகி இருக்கும எனக்கு உதவி இருக்கிறார் . எனக்கு இயக்குனராகும் வாய்ப்பையே எனக்குள் இருக்கும் தயாரிப்பாளர் கொடுப்பதற்கு இத்தனை வருடம் ஆகி இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இனி சினிமா திரையரங்கு ஓ டி டி இரண்டிலும் சவாரி செய்வது சரியாக வராது . தியேட்டரில் ஓடினால்தான் ஓ டி டி யில் விலை போகும் .
எனக்கு இந்த டெஸ்ட் படத்தைப் பொறுத்தவரை, கோடிக் கணக்கில் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் நெட் பிளிக்ஸ் , நல்ல சாய்ஸ் ஆகப் பட்டது .
எனவேதான் இவ்வளவு பெரிய நடிகர்கள் இருந்தும் திரையரங்குக்கு வராமல் நேரடியாக நெட்பிளிக்சில் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் காணக் கிடைக்கச் செய்கிறேன் ” என்றார்