யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் மற்றும் வான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராதாரவி, சரண்ராஜ் , துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரில்லா, சங்கர் நாக் விஜயன், ஹரிப்பிரியா, மகேஸ்வரி, ஜீவா ரவி, அர்ஜுனா கீர்த்தி வாசன், ஹைடு கார்த்தி, பிரியதர்ஷன், கௌஷிக், துங்கன் மாரி, கிரண் மயி, பேபி ஜாயிஸ் , ஐஸ்வர்யா நடிப்பில் ஜெயவேல் முருகன் இயக்கி இருக்கும் படம் .
வட சென்னை கடல்புறப் பகுதியில் வாட்டர் கேன் சப்ளை செய்யும் இரண்டு நிறுவனங்கள் . முதலாளிகளுக்குள் புரிதல் இருந்தாலும் ஒரு முதலாளியின் (ராதாரவி) கீழ் வேலை செய்யும் இளைஞர்கள் இருவருக்குள் (துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் – மாரி) ஆரம்பத்தில் பகையும் பின்னர் நட்பும் . ஒருவனுக்கு ஒரு தெலுங்குப் பெண்ணோடு (கேப்ரில்லா) காதல். இன்னொருவனுக்கு ஒரு சமூக சேவகி பெண்ணோடு (ஹரிப்பிரியா) காதல்
இன்னொரு முதலாளி (சரண்ராஜ்) நல்லவர் என்றாலும் அவரது மனைவி (மகேஸ்வரி ) மனைவியின் தம்பி (சங்கர் நாக் விஜயன்) மற்றும் அவனது நண்பர்கள் நியாய தர்மம் அற்றவர்கள் .
இரு தரப்பையும் முட்டிக் கொள்ள வைத்து ஆதாயம் தேடும் போலீஸ் அதிகாரி ஒருவர் (ஜீவா ரவி)
தண்ணி கேன் போடுவது, போட்டி பொறாமை, பேராசை இவற்றால் இரு தரப்பும் முட்டிக் கொள்ள போலீஸ் ரத்தம் குடிக்கும் நரியாகச் செயல்பட , என்ன நடந்தது என்ன என்பதே படம்.
வட சென்னைப் பின்னணியில் ஜிகினா இல்லாத படமாக்கல்.
படத்தில் முதலில் கவர்வது ஸ்ரீராம் சந்தோஷின் சிறப்பான ஒளிப்பதிவும் அதற்கு இயக்குனர் ஜெயவேல் முருகன் வைத்திருக்கும் சிறப்பான ஷாட்களும் .
வாட்டர் கேன் வரலாறு , சுண்டிச் சோறு சட்ட விரோதமான பொருளாக மாறிய வரலாறு , லொக்கேஷன்கள் தேர்வு நடிக நடிகையர் தேர்வு ஆகியவற்றால் பாராட்டுப் பெறுகிறார் இயக்குனர்
வித விதமான கேமரா கோணங்கள் , ஒளி – இருள் பயன்பாடு, வண்ண ஆளுமை என்று அசத்துகிறார் ஒளிப்பதிவாளர். . கேமராவை ஷேக் செய்வதன் மூலம் காட்சியின் உணர்வை கடத்தும் கேமராமேனின் உத்தி அபாரம் .
போபோ சசியின் இசை பாடல்கள் , பின்னணி இரண்டிலும் சிறப்பு . பத்துவின் கலை இயக்கமும் சபாஷ் போட வைக்கிறது .
வாட்டர சப்ளை முதலாளிகளாக அமர்த்தலாக ராதாரவியும் , குடும்பத்தினரின் அயோக்கியத்தனங்களை சமாளிக்க முடியாத திக்குவாய் நபராக சரண்ராஜும் சிறப்பு .
கேப்ரில்லா , ஹரி பிரியா கியூட் கதாநாயகிகள் .
பேராசை பிடித்த மனைவியாக மகேஸ்வரியும் அருமையாக நடித்துள்ளார் . அவரது தம்பியாக வரும் சங்கர்நாக் விஜயன் வித்தியாசமான மேனரிசம் மிரட்டலான நடிப்பு என்று கவனம் கவர்கிறார் .
ஆங்காங்கே சில அட்டகாசமான காட்சிகள் வந்தாலும் திரைக்கதையில் ஏகப்பட்ட குழப்பம், பலவீனம், தெளிவின்மை .
ஆரம்பத்தில் சத்யராஜின் குரலில் ஐம்பூதம் , தண்ணீர் , மனிதனின் மிருக குணம் என்று பெரிய பில்டப் கொடுத்து எதிரபார்ப்பை எக்கச்சக்கமாகத் தூண்டி விட்டு ஒரு எளிய கதையை சொல்கிறார்கள் . எனவே ஆரம்பத்தில் வரும் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாத படமாகப் போகிறது .
படம் முழுக்க யாராவது பின்னணிக் குரல் கொடுத்துக் கொண்டே ஏ ஏ ஏ ஏ … இருக்கிறார்கள்.
ஐம்பூதம் , தண்ணீர் சண்டை , காதல் , பண ஆசை , போலீசிந தந்திரம் இவற்றை எதை எந்த அளவில் சொல்வது என்பதில் திட்டவட்டம் இல்லை.
இந்தக் கதைக்கு ரெண்டு காதல் ஜோடி அவர்களுக்கான காட்சி , பாட்டு கண்ணீர் என்பது 25 லிட்டர் தண்ணீர் கேனில் 50 லிட்டர் தண்ணீர் ஊற்றி அழுத்துகிற உணர்வைத் தருகிறது .
ஒரு காதல் ஜோடி என்று வைத்து மொத்த பாதிப்பையும் அதற்கு கொடுத்து விட்டு தண்ணீர் கதை விவகாரத்தில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் .
நீளநீளமான காட்சிகள் , தாக்குப் பிடிக்க முடியாத இடத்தில் நிறுத்தி நிதானமாக ஒரு பாட்டு, மிக எளிதாக யூகிக்க முடிந்த இரண்டாம் பாதித் திரைக்கதை இவற்றால் வறண்டு கிடக்கும் நிலம் போல் ஆகிறது படம் . வருணன் என்ற பெயரே கூட படத்துக்கு அவ்வளவாக பொருத்தமில்லை.
வாட்டர் கேன் சுத்தமாக இருந்து உள்ளே இருக்கும் தண்ணீர் சுத்தமாக இல்லை எனில் எப்படி இருக்கும்? அப்படி மேக்கிங்கில் கவர்ந்தாலும் எழுத்தில் ஏமாற்றுகிறது வருணன்