ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்க, ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாச்சலேஸ்வரன், ஃபௌசி நடிப்பில் ஸ்வினீத் சுகுமார் என்பவர் இயக்கி இருக்கும் படம் .
சிறு வயது மகளையும் மகனையும் கணவனிடம் விட்டு விட்டு வேறு ஒருவனோடு போய் விட்ட அம்மாவுக்கு மகனாகப் பிறந்த வா(ரி)சு (ரியோ ராஜ்), வளர்ந்த பிறகும் அதன் பாதிப்பில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கிறான் . (ஆனால் அவனது அக்கா முன்னேறி டாக்டர் ஆகி கல்யாணம் குடும்பம் என்று செட்டில் விட்டாள்)
கல்யாணம் குழந்தை மேல் அவனுக்கு நம்பிக்கை இல்லை.
அப்பா, அம்மா , அம்மா தாத்தா, அக்கா , அக்காவின் மகளான சிறுமி ஆகியோரோடு ஒரே வீட்டில் வாழும் பெண்ணுக்கு ( கோபிகா ரமேஷ்) அவன் மீது காதல் .
காதல் வந்தால் என்ன செய்ய வேண்டும்? உடனே படுத்து விட வேண்டும். அதைத்தானே இன்றைய படங்கள் சொல்கின்றன.
ஆனால் அது மட்டும் போதுமா? இது யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் படம் அல்லவா? எனவே தனது பிறந்தநாள் அன்றே அவனை தனது கூட்டுக் குடும்ப வீட்டுக்கே இரவில் பைப் வழியாக ஏறி வர வைத்து, இருவரும் புரளும்போது, அவளுக்கு பிறந்த நாள் கேக் எடுத்துக் கொண்டு அவளது அறைக்கு வரும் குடும்பமே (சிறுமி உட்பட) அதைப் பார்க்கிறார்கள்.
சுகிப்பதற்காக அவள் கூட எப்போதும் இருப்பேன் என்று சொல்லும் அவன் , ‘வேலை’ முடிந்ததும் கல்யாணத்துக்கு மறுக்கிறான் .
அவளுக்கு வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்க, அவள் கரப்பமாக , கர்ப்பத்தைக் கலைத்து விட அவன் சொல்ல, அவள் மறுக்க, வீட்டுக்குத் தெரியாமல் அவளைக் கொண்டு வந்து கர்ப்பம் கலைக்க அவன் முயல,
அவள் வீட்டில் அவளை அறைக்குள் அடைக்க,
வீட்டில் இருப்போர் வருவோர் போவோரின் செல்போனை எல்லாம் அவள் விதம் விதமாக திருடி அவனிடம் பேச, கடைசியில் என்ன ஆச்சு என்பதே படம் .
இவன் இப்படி என்றால் இவனது நண்பன் ஒருவன் (அருணாச்சலேஸ்வரன்) காதலிக்கும் பெண்ணை ரூமுக்குள் கொண்டு வந்து நிரோத்தும் வாங்கி வந்து விட்டு, அவளை ‘ஒன்றும் செய்ய முடியாமல்’ தவிக்கிறான். காமடியாமாம்
படத்தின் ஆரம்பத்தில் வரும் பெயிண்ட் பால் கன் கேம் வித்தியாசமாக இருந்தாலும் நீளம் பொறுமையை சோதித்தது . ஆனால் பின்னாடி யோசித்துப் பார்க்கும்போது அது எவ்வளவோ பரவாயில்லை என்ற அளவில் மற்ற காட்சிகள் .
படத்தின் பலம் நாயகி கோபிகா ரமேஷின் யதார்த்த அழகு, கண்கள் உடல் மொழிகள் .. இவைதான் . ஆனால் அவர் மீதே கடுப்பு வரும் அளவுக்கு செல்போன் திருடும் காட்சிகளில் பிசாசு மாதிரி அவளைக் காட்டுகிறார்கள் .
பாலாஜி சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு அருமை.
அநாதை இல்லத்தில் பிறந்த நாள் கேக் வெட்டுவது பற்றிய காட்சி அபாரம். இந்தப் படத்தில் கொண்டாடத்தக்க ஒரே விஷயம் அந்த காட்சியும் அது தரும் சிந்தனையும்தான்.
அது உட்பட ஒரு சில காட்சிகளில் ரியோ ராஜின் நடிப்பு கவனிக்க வைக்கிறது . ஆனால் அந்தக் கேரக்டர் எழுதப்பட்ட விதமும் அவர் நடித்து இருக்கும் விதமும் எரிச்சலையே உண்டு பண்ணுகிறது .
தன் சொந்தத் தம்பியின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை ஏதோ மூன்றாம் மனுஷி போல டீல் பண்ணும் அந்த டாக்டர் அக்காவை இழுத்துப் போட்டு மிதிக்கணும் போல இருக்கு.
ஒரு ஜோடி லவ் பண்ணினாலே உடனே அவங்க படுக்கணும் . நிரோத்ல பிரச்னை இருக்கணும். கர்ப்பம் ஆகணும். கருவைக் கலைக்க அடிச்சுக்கணும் . இதை எல்லாம் என்னவோ இட்லி தோசை திங்கிற மாதிரி சர்வ சாதாரணமாக காட்டனும் என்று நம்புகிற ஒரு கூட்டம் தமிழ் சினிமா மீது பார்த்தீனியச் செடி போல பரவி வளர்ந்து கொண்டு இருக்கிறது. கேட்டால் அதுதான் யூத் டிரன்ட் என்கிறார்கள் .
இளைய தலைமுறையை அசத்தும் படங்களை உலகெங்கும் எழுதி எடுக்கும் இயக்குனர்கள் பலர் நாற்பத்தி ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் . உடலின் வயசா முக்கியம் ? மனசின் வயசுதான் படைப்புக்கு முக்கியம் . பித்துக்குளித்தனம் யூத்னஸ் ஆகாது என்பதை தயாரிப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
கிளைமாக்ஸ் என்னவென்று பாதியிலேயே தெரிந்து விட்ட படத்தை எருமை மாட்டில் மழை பெய்த கதையாக ஆடி அசைத்து இழுத்து வந்து முடிக்கிறார்கள். அது இன்னொரு கொடுமை.
சரி கதை திரைக்கதைதான் இப்படி என்றால் , படமாக்கல் அதை விடக் கொடுமை .
படத்தில் நாயகியின் அப்பாவாக ரெஞ்சி பணிக்கர் என்று ஒரு மலையாள நடிகர் நடித்து இருக்கிறார்.
லால் என்ற ஒருவர் , தனது கர்ண கொடூரமான குரலில் தமிழைக் குதறிப் பேசி நடிப்பு என்ற பெயரில் பல படங்களில் ரசிகர்களை சாகடித்துக் கொண்டு இருக்கிறார் என்றால் அந்தக் கொடுமை போதாது என்று இந்தப் படத்தில் , சோளக் கொல்லைப் பொம்மைக்கு கஞ்சி போட்டு விறைப்பு ஏற்றிய மாதிரி நடிப்பு என்ற பெயரில் இந்த ரெஞ்சி பணிக்கர் செய்யும் கொடுமை தாங்கல.
நல்ல நடிகன் என்றால் எங்க இருந்து வேண்ணா வரட்டும்.
ஆனால் இப்படி சாகடிக்கும் ஆட்களை தமிழ் சினிமாவில் நடிக்க வைத்து நோகடிக்கும் தொடர் கொடுமையின் பின்னால் உள்ள ரகசியம் என்ன என்றுதான் புரியவில்லை.
ஒரு சீரியஸ் காட்சி , ஒரு காமெடி காட்சி , காமெடிக்குள் திடீரென்று சீரியஸ் , சீரியஸ் காட்சிக்குள் திடீரென்று காமெடி இதுவெல்லாம் தப்பில்லை.
ஆனால் எது சீரியஸ் எது காமெடி என்ற குழப்பத்துடனே முழுப் படமும் போவதை இதுவரை தமிழ் சினிமா கண்டது இல்லை.
இன்றைக்கு ஒரு ரசிகன் சினிமா பார்க்கலாம் என்று எண்ணி, டிக்கெட் புக் செய்ய போனைத் திறந்து விட்டால், அவனை சினிமாவுக்குப் போக விடாமல் தடுக்க அதே போனில் எவ்வளவு விஷயம் இருக்கிறது தெரியுமா?
ஆனால் என்னமோ இந்த டைரக்டர் வீட்டு வாசலில் தமிழ் ரசிகர்கள் எல்லோரும் போய் ஒரு படம் டைரக்ட் பண்ணி எங்களை வாழ விடுங்க என்று கெஞ்சியது போலவும் போனால் போகிறது என்று மக்கள் மீது பரிதாபப்பட்டு இவர் அருள் பாலிக்க வந்ததுவும் மாதிரியான மன நிலையில் படத்தை இயக்கி இருக்கிறார் இந்த அறிமுக இயக்குனர்.
படத்தின் ஆரம்பத்தில் ஹீரோவும் ஹீரோயினும் ”பெரிய _ _ _ மாதிரி பேசாத..” …. ” நீ பெரிய _ _ _ மாதிரி பேசாத..” என்று மாற்றி மாற்றி சொல்லிக் கொள்கிறார்கள் . படமும் அதே மாதிரிதான் இருக்கு …
அறிமுக இயக்குனர் என்பதால் இதற்கு மேல் வேண்டாம்.
படத்தின் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு ஒரே கேள்வி.
எவ்வளவு படம் பாக்கறீங்க . ரீ ரிக்கார்டிங் பிரம்மாதமா பண்றீங்க ?அதுல எந்த படம் ஓடுது ஓடலைன்னு உங்களுக்குத் தெரியாதா? உங்களால் எப்படி இப்படி ஒரு கதை இப்படி ஒரு மேக்கிங் உள்ள படம் ஓடும் என்றும் முக்கியமாக நாட்டுக்குத் தேவை என்றும் யோசிக்க முடிந்தது?
கொடுமை .
மற்ற படங்களில் எல்லாம் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் உங்கள் படத்தில் அதை செய்ய முடியவில்லை பார்த்தீர்களா? காரணம் கதை திரைக்கதை அப்படி .
இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படி மிஸ் யூஸ் செய்யக் கூடாது .
நீங்கள் U 1 ஆகவே இருங்கள் . U 2 1? (அதாவது U too 1 of this group ?) என்று கேட்கும்படியான படங்களை எடுக்க வேண்டாம்.
மொத்தத்தில் sweet heart…. failured kidney