‘ இந்த உலகில் எல்லோரும் தனித்தனி மனிதர்கள் . அவர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்களுக்கு அவரவர்களே காரணம்’ என்று பொதுவாக சொல்கிறோம்.
என்றாலும் , அதையும் மீறி ஒருவர் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அவருக்கு தெரிந்தவரோ தெரியாதவரோ , ஒரு நிலையில் அறிமுகமாகிக் கொள்ள இருப்பவரோ , அறிமுகமே ஆகாமல் போகப் போகிறவரோ……
இப்படி யாரோ ஒருவர் காரணமாக இருக்கிறார்கள் . அப்படிப்பட்ட இருவர் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் இவை ” என்று …
தசாவதாரத்தில் கமல் சொன்ன கேயாஸ் தியரியை வேறு ஒரு கோணத்தில் நினைவூட்டி துவங்கும் படம்.
பிளாக் டிக்கெட் விற்பதில் இருந்து கஞ்சா கடத்துவது வரை சகல அயோக்கியத்தனங்களையும் செய்கிற சுள்ளான் ரவுடி கார்த்தி (ஸ்ரீ) . அரசியல் புள்ளி ஒருவரின் ஆதரவு அவனுக்கு உண்டு .
அந்த அரசியல் புள்ளிக்கு வேண்டிய நபர் ஒருவரின் மகள் பூங்கொடிக்கும் கார்த்திக்கும் காதல் . ஆனால் அந்த நபருக்கு கார்த்தியை பிடிக்காது .
கார்த்தி– பூங்கொடி விவகாரம் தெரிய வந்தால் பூங்கொடியின் அப்பாவே கார்த்திக்கு எமன் ஆவார் என்ற நிலை.
இன்னொரு பக்கம் ….
டீசன்டான குடும்பத்தில் பிறந்து , அப்பா ஐ டி படிப்பு படிக்கச் சொல்லியும் அதைக் கேட்காமல் சினிமா கேமரா மேன் ஆகும் ஆசையில் விஸ்காம் படித்த இளைஞன் அருள் (ஹரிஷ் கல்யாண்) .
ஒழுங்கான வேலை கிடைக்காமல, அப்பா வாங்கித் தர விரும்பும் வேலைக்கும் போகாமல் நடந்து கொள்வதால் அருளை வெறுக்கிறார் அவனது அப்பா . அருளின் காதலி நித்யா ( சிருஷ்டி டாங்கே ).
தவிர இரவு நேர தள்ளுவண்டி டிபன் கடை வைத்து நடத்தும் கனகவல்லிக்கு (சாந்தினி ) அருள் மீது சிறுவயது முதலே சொல்லாக் காதல் .
தனது தினசரி அயோக்கியத் தனங்களில் கார்த்தி செய்யும் காரியங்கள் பலவும், நிகழ்தகவையும் மீறி சரியாக அருளையே பாதிக்கிறது . அவனது முன்னேற்றம் தடை படுகிறது .
அப்பாவால் மிகவும் அவமானப்படுத்தப் படுகிறான் . விரக்தியில் விஷயம் புரியாமல் ஒரு கொள்ளைக் குற்றத்துக்கும் துணை போகிறான் .
பூங்கொடியின் வற்புறுத்தல் காரணமாக கார்த்தி திருந்தி ஜெயிலில் இருந்து வெளியே வர, அருள் குற்றவாளியாக ஜெயிலுக்குப் போகிறான் . அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்தப் படம் .
அந்த ஆரம்ப விளக்கமும் அதைத் தொடர்ந்து படத்தைத் துவங்கும் விதமும் படு சுவாரஸ்யம் .
குட்டிக் குட்டியாக சில நல்ல காட்சிகள் வருகின்றன .
அருளுக்கும் நித்யாவுக்குமான பணி ரீதியான அந்த குட்டி லவ் பிளாஷ்பேக் அருமை .
நவீன் இசையில் ‘குறும்படமே ….’ மற்றும் ‘ஆள சாச்சுப்புட்டா கண்ணால….’ பாடல்கள் இனிமை .
யோகி பாபு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் .
கனகவல்லி கதாபாத்திரமும் காட்சிகளும் முடிவும் நிறைவு அழகு .
ஒருவன் செய்யும் தவறுகள் அவனுக்கே தெரியாமல் அடுத்தவனை பாதிக்கின்றன என்ற அந்த சிங்கிள் லைன் ஓகேதான் . ஆனால் அதில் நடக்கும் சம்பவங்கள்?
திருட்டு,கடத்தல், ரவுடியை தைரிய சாலி என்று கூறித் தெறிக்கத் தெறிக்கக் காதலிக்கும் தமிழ் சினிமா கதாநாயகி, வேலைக்குப் போகாத பையனை திட்டும் அப்பா , என்று …
நடக்கும் சம்பவங்கள் யாவும் பார்த்து சலித்த விசயங்களாக இருப்பதற்குப் பதில், அவையும் வித்தியாசமாக புதுமையானதாக சுவாரஸ்யம் நிறைந்ததாக இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் .
ஒருவன் செய்யும் செயல்கள் அவனுக்கே தெரியாமல் இன்னொருவனுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது என்பது வழக்கமாக எப்போதும் எங்கும் நிகழ்கிற ஒன்றுதான் .
அதில் சுவாரசியம் என்பது பத்து நிமிடத்துக்கு மேல் தாங்காது என்பதை உணர்ந்து கொண்டு அடுத்த கட்டத்துக்கு போயிருக்க வேண்டும்
அருளை பாதிக்க வேண்டும் என்று கார்த்திக்கு மோட்டிவ் இல்லை என்றே கடைசிவரைக்குமே சொல்வதால் திரைக்கதையின் அழுத்தம் குறைகிறது .
தன்னை பாதிக்கும் செயல்களுக்கு கார்த்திதான் காரணம் என்பதோடு கார்த்தி செய்வதெல்லாம் சமூகக் குற்றங்கள் என்பதை அருள் தானே கண்டு பிடித்திருக்க வேண்டும் .
அவனால்தான் தன் வாழ்க்கை போனது என்பதை அவனுக்கு உணர்த்த வேண்டும் .
யாரோ ஒருவனை அருள் தேடிப் போய்ப் பார்த்து ” குற்றத்தை ஒத்துக் கொண்டு என்னை வாழ விடு ” என்று சொல்கிறானே . அது அருளுக்கு கார்த்திக்கும் இடையே நிகழும் சம்பவமாக இருக்க வேண்டும் .
ஆனால் காதலி பூங்கொடியின் கட்டளைப்படி ரவுடித் தனத்தை கைவிட்டு அவளோடு வாழ முயலும் கார்த்தி, மீண்டும் குற்றவாளியாக ஜெயிலுக்குப் போக விரும்பாத நிலையில்,
அருளின் கோரிக்கையை மறுக்க வேண்டும் .
இந்த நிலையில் அருளுக்கும் பூங்கொடியின் தந்தைக்கு ஏற்படும் அறிமுகம்….. என்று , திரைக்கதை ஒரு காரண காரியத்தோடு அமைக்கப்பட்டு இருந்தால், வில் அம்பு இன்னும் கம்பீரமாக இலக்கை வென்றிருக்கும் .