
ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் சார்பில் மாதவன் , மோகன் இருவரும் தயாரிக்க, அறிமுக நாயகன் இந்திரஜித், தேவிகா மாதவன் ஆகியோர் நடிக்க, தயாரிப்பவரான மாதவனே எழுதி இயக்கி இருக்கும் படம், நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க .
இந்திர ஜித், மாதவனின் தம்பிதான் . இவர்கள் இருவரும் மகான் கணக்கு படத்தை இயக்கிய சம்பத் ராஜின் தம்பிகள் .
கதையும் குடும்பக் கதைதான் என்பது படத்தின் டிரைலரில் இருந்து ஆழ்ந்து யோசித்து உணர்ந்து கொள்ள முடிகிறது.
பெண் பார்க்கும் சடங்கு மூலம் பெண் தேடும் ஒருவன், அவன் பார்க்கும் பெண்கள், அது தொடர்பான நிகழ்வுகள் மற்றும் பிரச்னைகளை சிங்க முத்து , சுவாமிநாதன், சிவா சங்கர் மாஸ்டர் ஆகியோரைக் கொண்டு காமெடியாக சொல்ல…. முயன்று இருக்கிறார்கள் .
இந்திர ஜித் பார்ப்பதற்கு அந்தக் கால டி.ராஜேந்தர், மற்றும் சசிகுமார், ஜே.கே.ரித்தீஷ், கஞ்சா கருப்பு, ஆகியோரின் கூட்டு சாயலில் இருக்கிறார் .
தேவிகா மாதவன் நல்ல தமிழில் பேசுகிறார் . இவர் பெயரில் மாதவன் இருந்தாலும் இவருக்கும் இந்த படத் தயாரிப்புக் குடும்பத்துக்கும் எந்த உறவும் (இதுவரை?) இல்லை .
மகான் கணக்கு , சதுரன் ஆகிய படங்களுக்கு இசை அமைத்த ரிஷால் சாய் தான் இந்தப் படத்துக்கும் இசையமைப்பாளர் . அந்த வகையில் சதுரன் பட இயக்குனர் ராஜீவை மேடைக்கு அழைத்து கவுரவித்தார் ரிஷால் சாய் .
கல்கோனா கண்ணழகி என்ற பாடல் உற்சாகம் தந்தது. அதிலும் பல்லவி ரொம்ப சிறப்பு.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஹரிதாஸ் படத்தின் வசனகர்த்தாவும் இயக்குனரின் நண்பருமான வெங்கடேசன் ” ஹரிதாஸ் படத்தில் ‘ உங்க பையன்லாம் ஜெயிக்கறதுதான் வெற்றி . ஆனா என் மகன் கலந்துக்கறதே வெற்றி’ அப்படின்னு நான் ஒரு டயலாக் வச்சிருப்பேன் .
இப்போ சினிமாவில் தோற்காம நீடிப்பதே பெரிய வெற்றி . அந்த வகையில் நண்பர் மாதவனின் முதல் வெற்றியாக இந்தப் படத்தின் தயாரிப்பை நான் பார்க்கிறேன் . நாலு பேரும் நல்லவிதமா பேசும்படி படம் நிஜ வெற்றி பெற வாழ்த்துகள் ” என்றார் .
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் களஞ்சியம் “படத்தின் பாடல்கள் அருமை . கல்கோனா கண்ணழகி உவமை நல்ல இருக்கு (எழுதியது யுக பாரதி ) . பாடல் என்ற பெயரில் ஆபாசங்களை எழுதும் நிலை பெருகி வரும் சூழ்நிலையில் நல்ல வரிகளை எழுத வேண்டியது நல்ல கவிஞரிகளின் கடமை ” என்றார் .
ஹலோ இயக்குனர் மாதவன் ..!
கல்கோனா கண்ணழகி பாடல் பல்லவியை வச்சு ஒரு டிரைலர் ரெடி பண்ணுங்க . கலக்கலா வரும் !