7 ஸ்டார் பாய்ஸ் @விமர்சனம்

ஃ பீனிக்ஸ் ஸ்டூடியோ சார்பில் அசோக் தயாரிக்க, டேனிஷ் பி கே, ஆண்டனி வர்கீஸ்,  தேசிய கால்பந்தாட்ட வீரர் ஐ எம் விஜயன், ஜூமானா அப்து ரகுமான், பாலு வர்கீஸ்  நடிப்பில் நிகில் பிரேம்ராஜ் எழுதி இயக்கி , 2022 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த  ஆனப்பரம்பிலே வேர்ல்ட் கப் படத்தின் தமிழ் மொழிமாற்றம் .

தமிழில் இந்தப் படத்தை வெளியிடும் அசோக்கும் ஒரு கால்பந்தாட்ட வீரர்தான் 

இந்தியா முழுக்க கிரிக்கெட்தான் முக்கிய விளையாட்டு என்றாலும் மேற்கு வங்காளம் முதலிய மாநிலங்களில் கிரிக்கெட்டை விட கால்பந்தாட்டத்துக்கு மவுசு அதிகம். அப்படிப்பட்ட மாநிலங்களில் ஒன்றான கேரளாவின்  வடபகுதியில் ,  இஸ்லாமிய  மக்கள் அதிகம்  வாழும்  ஆத்தங்கரை என்ற  கிராமத்தைச் சேர்ந்த   ( ஒரிஜினல் பெயர்   ஆனப்பரம்பிலே),   ரஹீனா என்ற பெண்ணுக்கு (ஜூமானா அப்து ரகுமான் ),  ஒரு பெரிய விவசாய நிலம், குடும்ப சொத்தாக வருகிறது. அதே ஊரைச் சேர்ந்த இஸ்மாயில் என்ற கால்பந்தாட்ட வீரனுக்கும் (ஆண்டனி வர்கீஸ்) அவளுக்கும் காதல் 
 
ஆனால்  ரஹீனாவின் அப்பா மீரானுக்கு (சஜ்ஜு குரூப்) அந்தக் காதல் பிடிக்கவில்லை ஒரு முறை மீரான் வீட்டில் நடந்த விஷேசத்தின் போது , இஸ்மாயில் ரஹீனாவை பார்க்க திருட்டுத்தனமாக வந்து பிடிபட , மீரானுக்கு கோபம் அதிகமாகிறது.
 
2002 ஆம் ஆண்டு பிபா உலகக் கோப்பை நெருங்கி வரும் சமயம் அது. அந்த  ஊரில் சிறுவர் முதல் மூத்தவர் வரை உலகக்கோப்பை என்பது உணர்வுப் பூர்வமான  ஒரு மாபெரும் திருவிழா. 
 
அதே ஊரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் உமருக்கு  (டேனிஷ் பி கே,) பிரபல கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி என்றால் உயிர். அவரைப் போலவே பிரபல கால்பந்தாட்ட வீரனாக வர வேண்டும் என்பதே அவன் லட்சியம். 
 
மெஸ்ஸி போலவே உமருக்கும்  வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இன்மை மற்றும் உடல்   பலவீனம் ,ஆரம்ப கட்டப் புறக்கணிப்புகள் இருக்கின்றன. 
 
ஹார்மோன் குறைபாடு, குடும்பத்தால் தனித்து விடப்பட்டது , இவை எல்லாம் மெஸ்ஸிக்கு பிரச்னையாக இருந்தது என்றால், உமருக்கு வறுமை, சக கால்பந்தாட்ட வீரனான அண்ணனின்  எதிர்ப்பு ஆகியவை இருக்கிறது 
 
உமரின் வயதை ஒத்த  சிறுவன் தோற்றத்தில் மெஸ்ஸி அடிக்கடி உமரின் கனவில் அவனுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கிறார் 
 
உமர் தனது வயது சிறுவர்களை சேர்த்துக் கொண்டு 7 ஸ்டார் பாய்ஸ் என்ற கால்பந்தாட்ட அணியை துவங்குகிறான். 
 
இவர்களுக்கு இளம் வயது கிரிக்கெட் வீரனான இஸ்மாயிலும் அவனது நண்பர்களும் உதவுகின்றனர்  இந்திய அணிக்கான விளையாடியகேரள  கால்பந்தாட்ட வீரர் விஜயனை சந்தித்து இந்த சிறுவர்களுக்கு கோச்சிங் தர வைக்கின்றனர். 
 
பயிற்சி பெரும் சிறுவர்கள்  பல அணிகளோடு விளையாடுகின்றனர். 
 
இதற்கிடையில் மீரான் இஸ்மாயிலை ஃபுட்பால் கிளப்பில் இருந்து விளக்குகிறார் . அவனுக்கும் ரஹீனாவுக்குமான காதல் என்ன ஆனது? சிறுவன் உமரின் கால்பந்தாட்ட லட்சியம் என்ன ஆனது என்பதே படம். 
 
கேரள கிராமங்களின் அழகான லொக்கேஷன்கள்… சராசரி இந்தியனின் கிரிக்கெட் அபிமானத்தை விட , இந்த  மக்களின் உணர்வுகரமான  கால்பந்தாட்ட ரசனை இவற்றை அழகாக வெளிப்படுத்துகிறது படம். 
 
கேரள இஸ்லாமிய பின்புலம் சிறப்பாக வெளிப்படுகிறது 
 
சிறுவன் உமராக நடித்துள்ள மாஸ்டர் டேனிஷ் அற்புதமாக நடித்துள்ளான். மற்ற சிறுவர்கள் நடிப்பு அவர்கள் செய்யும் சேட்டை ஆகியவையும் கியூட். 
 
கேரளாவின் பிரபல கால்பந்தாட்ட வர்ணனையாளர் சைஜு தாமோதரன் வர்ணனையாளராகவே வருகிறார் 
 
கேரளாவில் இயற்கையான புல்  தரையில் நடக்கும் இரண்டாம் நிலை கால்பந்துத் போட்டிகளை சிறப்பாக படமாக்கியுள்ளார் இயக்குனர்  நிகில் பிரேம்ராஜ். ஆட்டத்தில் கோல் அடிக்கும்போது சிறுவர்கள்  காட்டும் சந்தோஷ உடல் மொழிகள் ஒவ்வொன்றும் கவிதை. 
 
மெஸ்ஸிக்கும் உமருக்குமான கனவு சந்திப்பு காட்சிகள் அருமை 
 
ஜேக்ஸ் பீஜேயின் இசையில் அந்த இஸ்லாமிய விஷேஷ கவாத்து பாடல் அருமை. 
 
பயஸ் சித்திக்கின் ஒளிப்பதிவு, நூஃபுல் அப்துல்லாவின் படத் தொகுப்பு யாவும் சிறப்பு 
 
இது போன்ற கதைகளில் வழக்கமாக ஒரு முடிவு வரும் . ஆனால் அதில் இருந்து வேறுபட்டு ஒரு முடிவை கொடுத்ததோடு நமபிக்கையாகவும் முடித்த விதம் அழகு. 
 
பிரச்சனை என்னவென்றால்  படத்தில் வரும் பகை,போராட்டம் எதிலும் ஒரு சீரியஸ்னஸ் இல்லை. அதிகம் வலிக்காத  ஒரு கொசுக்கடி போலவே  பயணிக்கிறது படம் . 
 
கிளைமாக்சில் முக்கிய விஷயமாக மாறும் காதல் பிரச்னை படத்தில் வலுவாக சொல்லப்படவில்லை . 
 
ஒரு நிலையில் விளையாட்டு நேரலைதான் படத்தில் முக்கிய இடத்தை பிடிக்கிறது. அங்கே மற்ற பிரச்னைகளையும் இடையிடையே சொல்லி  ஒரு மேட்ச் பார்ப்பதற்கும் அப்பாற்பட்ட கனத்தைக் கொடுத்து இருக்கலாம்.  
 
ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு.. அதிலும் கூட கால்பந்தாட்ட பிரியர்களுக்கு  படம்  பிடிக்கலாம். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *