டிரம்ஸ்டிக் புரடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன் பட்டி சக்திவேல், விவேக், விஜய் ஆகியோர் தயாரிக்கின்றனர், ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ், ஷீலா, ஜென்சன் திவாகர், இயக்குனர் ஏ. வெங்கடேஷ் நடிப்பில் சிவகுமார் முருகேசனோடு சேர்ந்து எழுதி கலையரசன் தங்கவேலு இயக்கத்தில் இருக்கும் படம் .
மெக்கானிக்கல் படித்து விட்டு ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கும் இளைஞன் சிவா (ரியோ), தன் அம்மா அப்பாவோடு சக்தியை (மாளவிகா மனோஜ்) பெண் பார்க்கப் போகிறார் .
அப்பாவின் (வெங்கடேஷ்) ஆணாதிக்கக் கட்டுப்பாட்டில் வளர்ந்த சக்தியை பெண் பார்க்கும் வைபவத்திலேயே அவளது அப்பாவே தரையில் உட்கார வைக்க, தானும் நாற்காலியில் இருந்து கீழே உட்காரும் சிவா , தான் பெண்களை சம உரிமை கொடுத்து நடத்துவதை உணர்த்த, திருமணம் நிச்சயமாகிறது
கல்யாணத்துக்குள் காதலும் வருகிறது .
ஆனால் கல்யாணம் முடிந்த தேன் நிலவு நாட்களுக்குப் பிறகு எல்லாம் மாறுகிறது. விடுமுறை நாளில் சமையலுக்கு உதவச் சொல்ல, அவன் உதவ , பிறகு தினமும் சேர்ந்து சமையல் செய்யும் கட்டாயம் வருகிறது.
”என் அப்பா வீட்டில் அடிமை போல இருந்தேன் . நீதானே சம உரிமை தர்றேன்னு சொன்ன ..” என்ற ரீதியில் அவள் பறக்கிறாள்.
தாலியைக் கழட்டி பீரோவில் வைத்து விட்டு தினசரி ரீல்ஸ் போடுவது, அதுவும் கவர்ச்சியான உடைகளில் ரீல்சில் ஆடுவது, அதற்கு ஆபாசமாக மற்றவர்கள் போடுவது கமென்ட் பற்றி சிவா கேட்டால், ”அது எவனோ பண்றான் . நீயேன் கவலைப்படுகிறேன்” என்பது…
எந்தப் பொருள் என்றாலும் ரொம்ப காஸ்ட்லியாக வாங்குவது , ஒரு நிலையில் வீட்டில் சமைக்காமல் வெளியே ஆர்டர் பண்ணியே சாப்பிடுவது ,
தேவை இல்லாமல் முப்பதாயிரம் ரூபாய் எல்லாம் செலவு செய்வது ..
கேட்டால் ‘பொண்டாட்டிக்கு செலவு பண்றது உன் கடமை’ என்பது ,
ஜி யூ போப்பை கார்ல் மார்க்ஸ் என்பது , அம்பேத்கார் பிறந்த இடம் போர்பந்தர் என்பது ..
ஒருநாள் சக்தி திடீரென்று தன் நண்பன் ஒருவனுடன் சேர்ந்து பியூட்டி பார்லர் ஆரம்பிக்க விரும்புவதாகச் சொல்ல, ”தெரியாத வேலையைச் செய்யாதே.. உன் இன்னொரு தோழி துணிக்கடை வைத்ததால் நீயும் ஏதாவது கடை வைக்க நினைக்காதே ” என்று சிவா சொல்ல, வாக்குவாதம் அதிகமாகி, அவள் டென்ஷனாகி மயங்கி விழா, அப்போதுதான் அவள் கருவுற்று இருப்பது சிவாவுக்கு தெரிய வர, அப்போதே அந்தக் கரு கலைந்து விட, புருஷன் பொண்டாட்டி உறவில் விரிசல்.
டைவர்ஸ்க்கு அப்ளை செய்கிறார்கள் . எப்படியாவது டைவர்ஸ் வாங்கிக் கொடுத்து விட வேண்டும் சக்தியின் வக்கீல் லக்ஷ்மி (ஷீலா) முயல , எப்படியாவது சேர்த்து வைத்து விட வேண்டும் சிவாவின் வக்கீல் (ஆர் ஜே விக்னேஷ்) முயல,
லக்ஷ்மியும் விக்னேஷுமே விவாகரத்து செய்த தம்பதி என்பதால் ஒருவரை ஒருவர் பழி வாங்கும் வாய்ப்பாகவும் இதைப் பயன்படுத்துங்கள்
விவாகரத்து கிடைத்ததா இல்லை விவகாரத்தை ரத்து செய்ததா என்பதே படம்
படத்தின் முதல் பலம் அட்டகாசமான எழுத்து .
ஆரம்பத்தில் அந்த ஜி யூ பாப் காரல் மார்க்ஸ் , விஷயம் அம்பேத்கார் பிறந்த இடம் போர்பந்தர் .. போன்ற விஷயங்கள் ஏதோ இருக்கு என்று நினைக்க வைத்தாலும் பல படங்களில் வரும் காட்சிகளே அடுத்தடுத்து வர , இதுவும் போச்சா சோனமுத்தா என்ற பயத்தோடு படம் பார்ப்பவர்கள் உட்கார்ந்து இருக்க,
இடைவேளைக்கு முன்பு ‘சிரி (ஆனால்) சிந்தி’ பாணியில் வரும் அந்த தெறிக்க விடும் காட்சி படத்தை தூக்கி நிறுத்துகிறது கேரக்டர்கள் சீரியஸ் ஆனால் ஆடியன்ஸ்க்கு காமெடி என்ற ஊத்தியில் ஒரு காட்சி பார்த்து எத்தனை நாளாச்சு.
இடைவேளைக்கு பிறகான படத்தின் இரண்டாவது பாதியில் விக்னேஷ்காந்த் கேரக்டருக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படத்துக்கு பெரிய பலம் . இப்படி மற்ற கேரக்டர்களுக்கும் ஸ்பேஸ் கொடுத்து நடியுங்கள் ரியோ . நல்ல படங்கள் அமையும்.
விக்னேஷ்காந்த் – ஷீலா கதை , விதி என்ற பழைய படத்தைப் போல் இருக்கிறதே என்று நமக்கு தோன்றும் நொடியில் விக்னேஷ் காந்திடம் ”நீங்க பிரியக் காரணம் என்ன?” என்பது போன்ற ஒரு கேள்விக்கு அவர் ”எல்லாம் ‘விதி’தான்” என்பது ரகளை.
ஒரு நிலையில், ‘அப்பாக்களே நீங்கள் உங்க பெண்களின் எந்த விருப்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் வளர்க்காதீர்கள்.அதனால் கல்யாணம் பண்ணிய பிறகு உங்கள் பெண்கள், கணவனின் உயிரை வாங்குகிறார்கள்’ என்று கணவன் சொல்ல. “அப்படி கட்டுப்பெட்டியா வளர்த்ததால்தான் நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போனீங்க . உங்களுக்கு குடும்பம் நடத்த தெரியல” என்று பெற்றோர்கள் சொல்ல, படம் இப்படி ஏதோ செய்யப் போகிறது என்று பார்த்தால்..
முற்றிலும் வேறு பக்கம் திரும்பி ஆனால் சிறப்பாக பயணிக்கிறது திரைக்கதை .
குடும்ப நலக் கோர்ட்டுகளில் நடக்கும் கொடுமைகள் , பெண்களுக்கு இருக்கும் சலுகைகள் , ஆண்கள் என்றாலே என்ன ஏது என்று விசாரிக்காமலே ஆண்களை வில்லன் போல பார்ப்பது, அதில் விவாகரத்து கேட்கும் பெண்களும் அவர்களது வக்கீல்களும் எடுத்துக் கொள்ளும் சலுகைகள் , காசுக்காக கலர் மாறும் பெண் போலீஸ்கள், கோர்ட்டு ஊழியர்கள் , மனைவி விவாகரத்து கேட்டு கொடுத்தால் கணவன் சொத்தில் பாதியும் மாத வருமானத்தில் பங்கும் கொடுக்காமல் தப்பிப்பது எப்படி என்ற ஐடியாக்கள் .. என்று சும்மா பிரித்து மேய்ந்து இருக்கிறார்கள் . சபாஷ் . பாரிய உழைப்பு மற்றும் தேடல் .பாராட்டுகள் சிவகுமார் முருகேசன் மற்றும் கலையரசன் தங்கவேலு
இடைவேளைக்கு முந்தைய கடைசி காட்சி சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கிறது என்றால் கிளைமாக்சில் வரும் வசனங்கள் நெகிழ்ச்சியோடும் கனத்தொடும் சிந்திக்க வைக்கின்றன .
அம்பேத்காருக்கும் போர்பந்தருகும் உள்ள சம்மந்தத்தை வைத்தே படத்தை முடிக்கும் அந்த ஸ்கிரிப்ட்டோரியல் டச்சும் அருமை
இதுவரை ரியோ நடித்த படங்களில் இதுதான் பெஸ்ட் நடிப்பு வசனம் பேசும் முறை , மாடுலேஷன், சரியான இடைவெளிகள் விட்டு பேசுவது என்று பாராட்டுக்குரிய வகையில் நடித்துள்ளார் .
ஆரம்பத்தில் தேவதை போலவும் போகப்போக நச்சரிப்பவள் , அப்புறம் கோபக்காரி , அப்புறம் …. என்று அந்த மாற்றங்களை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் மாளவிகா அவினாஷ் .
விக்னேஷ் , ஷீலா பொருத்தம் .
காமெடி வெடிகளால் அதிர விடுகிறது ஜென்சன் சம்மந்தப்பட்ட காட்சிகள். (அந்த ஃபாலோயர் விவகாரம் வெடிச் சிரிப்பு). ஜென்சன் திவாகரின் எளிமையான நடிப்பும் சிறப்பு
மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு வண்ணம் , வெளிச்சம் , காட்சிக்கான பின்புலம் என்று எல்லாவகையிலும் அருமையாக இருக்கிறது .
சித்துகுமாரின் இசை நன்று .
திரைக்கதை இன்னும் கொஞ்சம் சீக்கிரம் பரபரப்பாகி இருக்க வேண்டும். ரொம்ப டைம் எடுத்துக் கொண்டது ஒரு பலவீனம் .
காமெடி விஷயங்கள் எல்லாம் ஒன லைனர்களாக இருக்க , சீரியஸ் விஷயங்கள் போகப் போக நீண்ட நெடிய வசனங்களாக இருப்பது, யாரோ ஒரு பெண்ணுரிமை பேசும் நபர் சொன்னதற்காக நாயகி மனம் மாறுவது இவை எல்லாம் நம்பும்படி இல்லை.
இப்படிப்பட்ட ஒரு கதையில் இருவரின் பெற்றோர் கேரக்டர்களை தவிர்த்து விட்டு, ஒரு நிலையில் ”அய்யய்யோ விட்டுட்டா வம்பாப் போச்சே..” என்று சும்மா ரெண்டு காட்சிகள் மட்டும் வைத்து இருப்பது போங்கு.
எனினும் இதை எல்லாம் சரிசெய்து இருந்தால் இந்தப் படம் இன்னும் பாய்ச்சல் காட்டி இருக்கும்.
பொதுவாக சினிமாக்களில் அம்மாவின் பாசம் போற்றப்படுவது போல அப்பாவின் பாசம் போற்றப்படுவது இல்லை. எனவேதான் அப்பா பற்றி வரும் படங்களும் பாடல்களும் பெரும்பாலும் ரசிகர்களை – பெண்களைக் கூட கவர்கிறது.
அதே போல விவாகரத்து வழக்குகளில் பெண்கள் படும் கஷ்டங்கள் பேசப்படுவது போல பணம், மரியாதை, சொத்து, நிம்மதி எல்லாம் இழந்து ஆண்களும், ஆண் பெண் இருவரின் பெற்றோர்களும் உறவுகளும் படும் கஷ்டங்களை இதுவரை எந்தப் படமும் சரியாகப் பேசவில்லை என்பதுதான் இந்தப் படத்தின் பெரும்பலம் .
இதை விடவும் பல முக்கிய விஷயங்கள் படத்தில் இருக்கு
ஒழுங்காக கதை திரைக்கதை எழுதாமல் கடமைக்கு எழுதி படம் எடுத்து படம் பார்க்க வருபவரை கதறவிடும் ரசிகபாவம் பொல்லாதது என்பது இந்தப் படக்குழுவுக்குத் தெரிந்து இருக்கிறது .
மகுடம் சூடும் கலைஞர்கள்
கலையரசன் தங்கவேலு
சிவகுமார் முருகேசன்
ரியோ,
மாளவிகா அவினாஷ்,
மாதேஷ் மாணிக்கம்