விஜய ராஜ், தீபிகா ரங்கா ராஜு, சாப்ளின் பாலு, ஜீவிதா, நடிப்பில் சக்திவேல் என்பவரின் கதை திரைக்கதை வசனத்துக்கு சந்தோஷ் குமார் என்பவர் படத் தொகுப்பு செய்து இயக்கி இருக்கும் படம் ஆறடி
சுடுகாட்டு வெட்டியான் . இரண்டு மகள்கள் . நடுவில் ஒரு மகன் . குடும்பம் விரும்பாவிட்டாலும் வசதி இல்லாத காரணத்தால் மகனும் அப்பாவுக்கு உதவியாக அதே தொழிலில் இறங்குகிறான் .
ஒரு விபத்தில் தம்பி இறந்து அப்பா பக்கவாதத்தில் படுக்க, சுடுகாட்டுக்குள்ளேயே பெண்கள் அனுமதிக்கப் படாத சூழலையும் மீறி , இரண்டு பெண்களும் ஊருக்கு வெட்டியாள்களாக மாறுகின்றனர் .
பிணங்களை மேளம் அடித்து கொண்டு வருவது , குழி தோண்டி , சடங்கு செய்து புதைப்பது எரிப்பது உட்பட எல்லா சடங்குகளையும் செய்கின்றனர் .
அக்காவை பத்திரிகையாளன் ஒருவன் காதலிக்கிறான் . ஆரம்பத்தில் சமூக ஏற்றத் தாழ்வை காரணம் காட்டி, தானே மறுக்கும் அவள், ஒரு நிலையில் ஏற்கிறாள் .
கல்யாணத்தை நோக்கி போகும் போது காதலனின் அப்பாவுக்கு சமூக அவமானம் வர, அதை வரதட்சணைமூலம் சரி செய்யப் பார்க்கிறார் . பக்கவாதம் வந்த வெட்டியான் கஷ்டப்பட்டு வரதட்சணைப் பணம் சம்பாதிக்க , அது திருடு போக அப்புறம் என்ன ஆனது என்பதே ஆறடி
கதை பழசு . ஆனால் களம் புதுசு. பெண்கள் வெட்டியான் தொழில் செய்வது போன்ற காட்சிகள் சிறப்பாக விவரிக்கப் படுகின்றன. அந்த பெண்களின் வாழ்வியல் சூழல் யதார்த்த மன நிலை போன்றவை ( சமைத்துக் கொண்டிருக்கும் சூழலில் ஆள் செத்துப் போன தகவல் வரும்போது காட்டும் சந்தோஷம்) விவரிக்கப்படும் விதமும் அருமை .
படத்தை ஒற்றை ஆளாக தாங்குகிறார் நாயகி தீபிகா. அபாரமான குரல் . நல்ல நடிப்பு . எல்லா சூழல்களிலும் அவர் அழுத்தமாக வசனம் பேசுவது ஆரம்பத்தில் செயற்கையாக பட்டாலும் ஒரு நிலையில் அதுதானே சரி என்று நம்மை நாமே திருத்திக் கொள்கிறோம் . அந்த அளவுக்கு நவீன கண்ணாம்பாவாக ஜொலிக்கிறார் தீபிகா .
தங்கையாக நடித்து இருக்கும் இரண்டாம் கதாநாயகி ஜீவிதாவும் சிறப்பு
சாப்ளின் பாலு இயல்பு .
மற்றவர்கள் ஜஸ்ட் ஒகே
அபி ஜோ ஜோ இசையில் பாடல்கள் எளிமை . சில நல்ல வரிகளும் காதுக்குள் விழுகின்றன
படமாக்கல் சிறப்பாக இல்லை என்றாலும் திரைக்கதை நம்மை தொடர்ந்து பார்க்க வைக்கிறது.
கிளைமாக்ஸ் ஏரியாதான் பலவீனமாகி நிற்கிறது .
‘நம்ம கல்யாணத்துக்கு பிறகு உன் தங்கையின் கல்யாண விசயத்தை நாமே பார்த்துக்கலாம் ‘ என்று காதலன் சொல்லி இருக்க, ஒரு நிலையில் எல்லோரும் திரும்பி வந்த பிறகும் இந்த கிளைமாக்ஸ் . வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது .
படத்துக்கு வேறு நல்ல கிளைமாக்ஸ் முயன்று இருக்க வேண்டும்