சங்கர் பிரவீன் பிலிம்ஸ் தயாரிப்பில் வினய், சாமுத்ரிகா, ஸ்வஸ்திகா, கேஷா கம்பட்டி. மயில்சாமி, இளவரசு, அருள்தாஸ், ராம்ஸ் நடிப்பில்,
சரண் இயக்கி இருக்கும் படம் ஆயிரத்தில் இருவர் . எத்தனை பேர் தேறுவார்கள் ? பார்ப்போம் .
ஜென்மப் பகை படிந்த பங்காளிகள் இருவர். ஒருவனுக்கு பிள்ளை இல்லை. இன்னொருவனுக்கோ,

இரட்டை ஆண் பிள்ளைகள் பிறக்கின்றன . பிறந்த குழநதைகள் வளரும் போதே அடித்துக் கொள்கின்றன.
இந்த நிலையில் ஒரு சிறுவன் , ஒரு சிறுமியைப் பார்த்து அவள் பின்னாலேயே போய் விட , சந்தர்ப்ப சூழலில்,
பிள்ளை இல்லாத பங்காளி அந்த சிறுவனை கொன்று விட்டது போல தோன்றுகிறது .
பிள்ளையை ‘இழந்த’ அப்பன் ஆத்திரத்தில் பிள்ளை இல்லாத பங்காளியை கொன்று விடுகிறான் . பகை பெரிதாகிறது .
அப்புறம் தன் மகனை வெளியூரில் அப்பன் பார்க்கிறான் . இந்த மகன் உயிரோடு இருப்பது தெரிந்தால் அவனைக் கொன்று விடுவார்கள் என்ற பயத்தில்,
வெளியூரிலேயே வளர்க்கிறான் . அவனும் வளர்கிறான் (வினய் ). ஹவாலா மோசடி செய்கிறான் .
கம்பியூட்டர் ஹேக்கராகவும அப்படியே ஹூக்கராகவும் இருக்கும ஒரு பெண் அவன் மீது மையலாக இருக்கிறாள்
இன்னொரு மகன் ஊரிலேயே பங்காளியின் பகையை எதிர்கொண்டு வாழ்கிறான் (இரட்டை வேடம் வினய் ) . அவனுக்கு ஒரு பெண்ணுக்கும் காதல் . (சாமுத்ரிகா)
தாய் மாமனின் நகைக்கடை ஒன்றில் அவள் வேலை செய்கிறாள். மாமனுக்கு அவளை கல்யாணம் செய்து கொள்ள ஆசை .
இந்த நிலையில் எம் பி ஒருவரின் பினாமி (பிரதீப் ராவத் ) பல்லாயிரம் கோடி பணத்தை எம் பி சார்பில் சுவிஸ் பேங்கில் போட்டு,
அதன் பாஸ்வேர்டின் ஒரு பகுதியை பெற்ற மகளின் மார்புப் பகுதியிலும் , மறு பகுதியை முதுகின் கீஈஈஈஈழ்ப் பகுதியிலும் டாட்டூ போட்டு வைக்கிறான் .
எம் பி யின் ஆசை நாயகி ஒருத்தி (காஜல் பசுபதி) அந்த பணத்தை ஆட்டையைப் போடக் காத்து இருக்கிறாள் .
சொந்த ஊரில் வளரும் மகன் முழு சொத்தையும் தன் பேரில் எழுதித் தரக் கேட்கிறான் . ஆனால் காணமல் போன –
கொல்லப்பட்டதாகக் கருதப்படும் தன் மகன் திரும்ப வருவான் . அவனுக்கும் பங்கு தரவேண்டும் என்று தாய் விரும்புகிறாள் .
இந்த விஷயம் வெளியூரில் இருக்கும் ஹவாலா மகனுக்கு தெரிகிறது.
எம்பி இறந்து போக , ஆசை நாயகியும் பினாமியும் பணத்தை தமதாக்க முயல்கின்றனர் . அந்த நேரத்தில் பினாமியின் மகள் ஹவாலா நாயகன் வசம் வருகிறாள் .
பிள்ளை இல்லாமல் செத்துப் போன பங்காளியின் மனைவியின் தம்பி இன்ஸ்பெக்டராக வந்து ஊரில் உள்ள மகனுக்கு குடைச்சல் கொடுக்கிறான் .
சில்லுண்டி ரவுடிக் கூட்டம் ஒன்று தன் தந்தையை கொன்றவன் என்று தவறாக நம்பி உள்ளூர் மகனை பழிவாங்க அலைகிறான் .
ஹவாலா மகனும் உள்ளூர் மகனை ஒரு வழி பண்ண வருகிறான்
எல்லோரும் ஊருக்கு வருகிறார்கள் .
எல்லாரோடு எல்லாரும் மோதி எல்லாவற்றோடு எல்லாமும் முட்டி கடைசியில் சுபம் . இதுவே ஆயிரத்தில் இருவர் .
மேல் உள்ளாடையை ஜாக்கெட் ஆகவும் கீழ் உள்ளாடையை டிரவுசராகவும் போடும் தினவேறிய பெண்களாக, லோ ஆங்கிளில் தொடை காட்டும் சில கதாநாயகிகள் ….
அனைத்து கேரக்டருக்கும் பொருத்தம் இருக்குதோ இலையோ வெள்ளை வெளேர் பெண்கள்…..
கலர் ஃபுல் ஒளிப்பதிவு என்று , சரண் படத்துக்கான தன்மைகள் இந்தப் படத்திலும் உண்டு .
குட்டியானை வண்டியில் நிஜ பெண்ணை அலங்காரப் படுத்தி நிற்கவைத்து நகைக் கடைக்கு விளம்பரம் செய்யும்,
சில பகுதி சில வியாபாரிகளின் ஐடியாவை படத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார் சரண் .
குலசேகரப் பட்டினம் தசாரா திருவிழாவை அழகாக காட்சிப் படுத்தியுள்ளர்கள்
பிரச்னை வரும்போது எல்லாம் வெளியே கெத்துக் காட்டி விட்டு ரூம் போட்டு அழும் ரவுடிகள் புன்னகைக்க வைக்கிறார்கள் .
சில நாவலடியான நகைச்சுவைகளும் அவ்வப்போது வருவதை மறுப்பதற்கு இல்லை . அவ்வப்போது மட்டுமே .
பரத்வாஜின் இசை ஒகே தான் . இந்த இருவர் இணைந்த பழைய படங்களில் உள்ள உற்சாகம் , இனிமை இதில் நஹீ .
இந்த கேரக்டருக்கு வினய்யை யோசிக்க மிகப் பெரிய தைரியம் வேண்டும் ! மகா தைரியம் !
ஏகப்பட்ட கேரக்டர்கள் , ஏகப்பட்ட காட்சிகள் , ரங்கநாதன் தெருவுக்குள் எதிர் நகர்வுப் பெருங்கும்பலில் சிக்கி மூச்சும் முட்டும் உணர்வை ஏற்படுத்துகிறது திரைக்கதை .
அதுவும் வருவது எல்லாம் வத்தலும் தொத்தலுமாகவோ அல்லது இடிதடியர்களாகவோ இருந்தால் எப்படி இருக்கும் ? அதே நிலை .
ஒரு சிறு நகைச்சுவைக் காட்சி வருவதற்கு முன்பு நிறைய சவ சவ காட்சிகளை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டி உள்ளது .
பாடல்கள் வேறு அசந்தர்ப்பமாகவே வருகிறது .
இன்னும் நல்ல கதை திரைக்கதை , நல்ல கதாபாத்திரத் தேர்வு அடுத்த படத்தில் எதிர்பார்க்கிறோம் சரண் .
