ஸ்ரீ அண்ணாமலையார் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் , இனிகோ, பிரியங்கா, செங்குட்டுவன், அனிஷா,
யோகி பாபு, ரமேஷ் திலக், நான் கடவுள் ராஜேந்திரன் நடிப்பில் ஐயப்பன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் பிச்சுவா கத்தி .கூர்மை எப்படி? பார்க்கலாம் .
வெட்டியாக சுற்றுகிற கிராமத்து இளைஞன் .(இனிகோ பிரபாகர்) அவனுக்கு சில சக வெட்டி நண்பர்கள் (யோகி பாபு, ரமேஷ் திலக்) .
அந்த ஊர் இளம்பெண் ஒருத்தியை (பிரியங்கா) அவன் காதலிக்க , அவளும் காதலிக்கிறாள்
காதலை கொண்டாடும சந்தோஷத்தில் நண்பர்களுடன் குடிக்கிறான் . மது போதாத நிலையில் மேலும் குடிக்க காசுக்கு என்ன செய்வது என்று யோசிக்கிறான் .
அங்கே மேய்ந்து கொண்டு இருந்த ஆடு ஒன்றை திருடுகிறான் . (என்ன அங்கே சிரிப்பு ?) திருடிய ஆட்டை கொண்டு போகும் வழியில் விவசாயிகளிடம் சிக்கி, போலீஸ் வந்து ,
கோர்ட்டில் அபராதம் விதிக்கபடுவதோடு , ஒரு மாசம் ஒரு குறிப்பிட்ட போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போடச் சொல்கிறது கோர்ட் .
அந்த போலீஸ் ஸ்டேஷனில் உள்ள இன்ஸ்பெக்டர் (சேரன் ராஜ்) பக்கா கிரிமினலாக இருக்கிறார் .”மூவரும் ஆளுக்கு பத்தாயிராம் கொடுத்தால்,
கையெழுத்து நிபந்தனையை சரியாக முடிக்க விடுவேன் . இல்லை என்றால் உங்கள் மீது மேலும் கேஸ் போட்டு உள்ளே தள்ளுவேன்” என்கிறார் .
முப்பதாயிரத்துக்காக ஒரு பெண்ணிடம் (அனிஷா ) சங்கிலி அறுக்க முயல , அவள் போராடி தடுக்கிறாள் .
அந்த பக்கம் இன்ஸ்பெக்டரின் போலிஸ் ஜீப் வர , மீண்டும் அவரிடமே சிக்குகிறார்கள் .
அந்த பெண்ணிடம் புகார் எழுதி வாங்கும் இன்ஸ்பெகடர் , எப் ஐ ஆர் போடாமல் ” ஒழுங்கா எங்கயாவது திருடி முப்பதாயிரம் கொண்டு வாங்க” என்கிறார்
புகார் கொடுத்த பெண் வேலை தேடும் நிலையில் அவளை ஓர் இளைஞன் (செங்குட்டுவன்) நேசிக்கிறான் . அவள் ஒரு எம் எல் எம் கம்பெனியில் வேலைக்கு சேர, அவனும் சேர்கிறான் .
கஷ்டப்பட்டு புத்தகம் விற்கிறார்கள் . ஆனாலும் கம்பெனி சொல்வது போல வருமானம் வர எல்லாம் வழி இல்லை என்பது புரிகிறது .
அந்த கம்பெனி மேனேஜரே (காளி வெங்கட்) ஏமாற்று என்பது புரிகிறது .
ஒரு தாதாவுககும் (ஆர் என் ஆர் மனோகர்) ஓர் அரசியல்வாதிக்கும் ( நான் கடவுள் ராஜேந்திரன்) நடக்கும் சண்டையில்,

தாதாவிடம் சேர்ந்து திருட்டு நண்பர்கள் பணம் சம்பாதிக்கின்றனர் .
அந்த தாதாவும மேற்படி போலீஸ் இன்ஸ்பெக்டரும் கூட்டணி என்பதால் நண்பர்கள் பிரச்னை முடிகிறது .
எம் எல் எம் கம்பெனியில் ஏமாந்த காதல் ஜோடி , பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி , திருமணம் செய்து கொண்டு உழைத்துப் பிழைக்க முடிவு செய்கிறது
தாதாவுக்காக திருட்டு ஹீரோ கொலைகள் எல்லாம் செய்கிறான் .
ஊரில் அவன் காதலிக்கு திருமணம் நிச்சயமாக , இனி திருந்தி குற்றம் செய்யாதவனாக மாறி காதலியை மணந்து வாழ விரும்புகிறான் .
ஆனால் சரியான வேலைக்காரன் என்பதாள் அவனை இழக்க , தாதாவும் இன்ஸ்பெக்டரும் விரும்பவில்லை .
எனவே ”உன் மீது எம் எல் எம் கம்பெனி பெண் கொடுத்த புகாரை எப் ஐ ஆர் போட்டு உன்னை குற்றவாளி ஆக்குவேன்” என்று ,
திருட்டு ஹீரோவை இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறான் .
பிரச்னையில் இருந்து தப்பிக்க அந்தப் பெண்ணை கொலை செய்ய முடிவு செய்து இறங்குகிறான் திருட்டு ஹீரோ .
நடந்தது என்ன என்பதே பிச்சுவா கத்தி !
பொதுவாக குற்றவாளியை போலீஸ் ஸ்டேஷனில் கையுழுத்துப் போடச் சொல்ல அவன் போடுவதோடு அந்த சமாச்சாரம் முடித்து வைக்கப்படும் .
ஆனால் அப்படி கையெழுத்துப் போடும்போது கூட எப்படி பிரச்னைகள் வரலாம் என்று சொன்ன வகையில் பாராட்டுப் பெறுகிறது படம் .

ஆனால் சொன்ன விதத்தில்தான் ஆழம் அழுத்தம் போதவில்லை . கொஞ்சம் முயன்று இருந்தால் சும்மா தெறிக்க விட்டிருக்கலாம்
மிக எளிய இயல்பான படமாக்கல் .
இனிகோ பிரபாகர் , பிரியங்கா, செங்குட்டுவன் , அனிஷா எல்லாருமே இயல்பாக நடித்துள்ளனர் .
யோகி பாபு சில சமயங்களில் சிரிக்க வைக்கிறார் . பல சமயங்களில் அர்த்தமில்லாமல் அவுட் பிளாக்கில் பேசிக் கொல்கிறார். (எழுத்துப் பிழை அல்ல )
காமெடி என்ற பெயரில் பல சீரியஸ் காட்சிகளையும் சிதைத்து சிதற அடிக்கிறார் . லாஜிக்கையும் லகலக செய்கிறார் .
என் ஆர் ரகு நந்தனின் இசை ஜஸ்ட் ஒகே .
ரெண்டு வருஷமாக சுற்ற வைத்த காதலி காதலை சொன்ன சந்தோஷத்தில் சரக்கு அடிப்பது கூட ஒகே.
ஏன்னா இன்னிக்கு அது கலாச்சாரமா போச்சு . ஆனால் அதுக்காக ஒருவன் ஆடு திருடுவானா ?
அந்த அளவுக்கு அவன் என்ன குடி நோயாளியா ? அல்லது அவனுக்கு திருட்டுப் பழக்கம் உண்டா ?
அப்படி எல்லாம் அந்தக் கருமமும் இல்லையே . அப்புறம ஏன் அவன் ஆடு திருடவேண்டும் . ?
சரி … இன்ஸ்பெக்டரிடம் மாட்டி தாதா வரை போயாச்சு . எப்படியாவது சீக்கிரம் இவனிடம் இருந்து கழண்டு கொண்டு,
காதலியைப் பார்க்கப் போகணும் என்றுதானே நினைக்கணும்? அதை விட்டு விட்டு தாதாவுகக்காக கொலை எல்லாம் செய்தால் அப்புறம் அவன் என்ன காதலன் ?
இன்ஸ்பெக்டர் தனக்கு நண்பர் ஆகி விட்ட நிலையிலும் புகார் கொடுத்த பெண்ணை பதியாத எப் ஐ ஆருக்காக திருட்டு ஹீரோ கொலை செய்ய முயல்வது ஏன் ?
பின்னால் இன்ஸ்பெக்டரே எப் ஐ ஆர் பதிவு செய்வேன் என்று மிரட்டினாலும் அதற்காக அந்தப் பெண்ணை கொலை செய்து,
ஒரு காதல் ஜோடியை பிரிக்க முயல்பவன் எப்படி ஒரு காதல் ஹீரோவாக இருக்க முடியும் ?
திரைக்கதை என்பது அவ்வளவு விளையாட்டா போச்சு . அப்படிதானே ?
இப்படி அடிப்படையே தப்பாகப் போனதால் ஓரளவு இயல்பாக ஈர்க்கும் எம் எல் எம் காதல் ஜோடியின் கதை விழலுக்கு இறைத்த நீர் !
ஒரு காதல் ஜோடிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆரம்பித்து இன்னொரு ஜோடியின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிப்பது எல்லாம் திரைக்கதையின் ஒழுங்கின்மை .
என்ன செய்திருக்கலாம் ?
திருட்டு ஹீரோ சங்கிலி பறித்தான் . போலீசிடம் சிக்கினான் . புகார் கொடுக்கப்பட்டது . எப் ஐ ஆர் போடுவதாக,
இன்ஸ்பெக்டர் மிரட்டினான் என்பதில் இருந்து திரைக்கதையை மாற்றி இருக்க வேண்டும் .
கிராமத்தில் இருந்து திருட்டு ஹீரோவின் காதலி வந்தாள். இருவரும் எம் எல் எம் காதலியிடம் பேசினார்கள் .
மன்னிப்புக் கேட்டார்கள் . அவள் மன்னித்தாள். அவளது காதலனும் ஏற்றுக் கொண்டான் . 
இப்போது நான்கு பேரும் இன்ஸ்பெக்டரை பார்த்தார்கள் . புகார் வாபஸ் வாங்க வந்ததாக சொல்ல,
மறுக்கும் இன்ஸ்பெக்டர் அப்போதுதான் எப் ஐ ஆரை பதிந்தான் என்று ஆரம்பித்து ..
இரண்டு காதல் ஜோடி….. எதிராக இன்ஸ்பெக்டர் ,மற்றும் தாதா என்று போயிருந்தால், படம் அசத்தி இருக்கும் .
அது இல்லாததால் இந்த,
பிச்சுவா கத்தி …. வெண்ணெய் வெட்டி !