சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் சாம்பியன் படத்தின் ஹீரோ விஷ்வா, பெரிய குடும்பப் பின்னணி கொண்டவர் . ஸ்டுடியோ 9 நிறுவன அதிபர் மற்றும் நடிகர் ஆர் கே சுரேஷின் சகோதரி மகன் .
எனினும் முறைப்படி தகுதியை வளர்த்துக் கொண்டு சினிமாவை இவர் அணுகி இருப்பது சிறப்பான விஷயம் .
” சின்ன வயசில் எனக்கு விளையாட்டில்தான் ரொம்ப ஆர்வம் . நாலு வயசு முதல் நீச்சல் பயிற்சி பெற்று பல வருடம் அதில் ஈடுபட்டேன் . அப்புறம் ஸ்குவாஷ் விளையாட்டில் பனிரெண்டாம் வகுப்பு வரை ஈடுபட்டேன்.
எனக்கும் சினிமா ஆசை வந்தது . ப்ளஸ் டூ முடிந்ததும் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் திரைப்பட உருவாக்கம் குறித்த படிப்பு படித்தேன் . வந்து எந்த சிபாரிசையும் நம்பாமல் நானே முயற்சி செய்தேன் .
ஆடிஷன்களுக்கு போனேன் .
நடிகர் சூரி எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல . அவர்தான் என்னிடம் ‘சுசீந்திரன் கால் பந்து பற்றி ஒரு கதை செய்யப் போகிறார். போய்ப் பார் “என்றார் .
பார்த்தேன் . அவருக்கு என்னை பிடித்துப் போனது . அவர் என்னை புழல் பகுதியில் இருக்கும் ஐ சி எப் கோச் சாந்த குமாரிடம் பயிற்சி பெற வைத்தார் . ஒரு வருடம் பயிற்சி பெற்றேன் . அதன் பின்னர் படம் துவங்கப் பட்டது .
ஒரு நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஒதுங்கிக் கொள்ள , என் அம்மாவே படத்தைத் தயாரித்து முடித்தார் . படம் திரைக்கு வருகிறது . ஸ்டுடியோ 9 சார்பில் என் மாமா ஆர் கே சுரேஷ் படத்தை வெளியிடுகிறார் ” என்றவரிடம் ,
சாம்பியன் அனுபவங்களைக் கேட்டால் ” சுசீந்திரன் சார் தான் என் குரு. அவர் சொன்னதை சொன்னபடி செய்தேன் . இன்னொரு குரு என் கால்பந்து கோச் சாந்த குமார் . படத்தில் என் தந்தையாக மனோஜ் பாரதி ராஜா நடிக்கிறார் . இன்னொரு முக்கியப் பாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார் . இருவரும் நட்பாக பழகினார்கள் . அவர்களுக்கு நன்றி
விளையாட்டு , குடும்பப் பிரச்னை இரண்டும் கலந்த படம் இது .
நான் வசதியான பையன் . இந்தப் படத்தில் வசதி இல்லாத காரணத்தால் திறமையை வெளிக்காட்ட முடியாத ஏழை இளைஞன் பாத்திரத்தில் நடிக்கிறேன் . அதற்காக குடிசைகளில் புழங்கியது , அவர்களுடன் எளிய உணவை சாப்பிட்டது எல்லாம் புது அனுபவம் ” என்றவரிடம் , “நடிப்பை எப்படி பார்க்கிறீர்கள்?” என்று கேட்டேன் .
” ஒரு பாத்திரம் நடிக்கும்போது அதற்காக தயார் ஆகிறோம் . அதற்கு தயாராகி நடிக்கும்போது வேறு மனிதர் ஆகிறோம் . உதாரணமாக இரண்டு வருடம் முன்பு வரை எனக்கு கால் பந்து தெரியாது . குடிசையில் இருந்த பழக்கம் இல்லை .
இப்போது அதையும் கற்ற- தெரிந்த புது மனிதனாக இருக்கிறேன் . இது மாதிரி ஒவ்வொரு கதாபாத்திரம் ஏற்கும்போதும் ஒரு புது வாழ்வு வாழ்கிறோம் . இது நடிகனுக்கு மட்டுமே கிடைக்கும் பாக்கியம் ” என்கிறார் .
“என்ன மாதிரி பாத்திரங்களில் நடிக்க ஆசை?” என்றேன் .
” இந்த சாம்பியன் படத்தில் நான் நடிக்கும் வறுமை காரணமாக திறமையை வெளிக்காட்ட முடியாத விளையாட்டு ஆர்வலன் கதாபாத்திரம், எப்படி சமூகத்தில் பல நபர்களை பிரதிபலிக்கிறதோ,
அப்படி பல மட்டங்களில் வாழும் மக்களை அடையாளப்படுத்தும் பாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்” என்கிறார் , மிக தெளிவாக !
தவிர விஷ்வாவுக்கு இசை ஆர்வமும் உண்டு . நிறைய தனிப்பாடல்கள் உருவாக்கி வைத்திருக்கிறாராம்.
சாம்பியன் கலைஞன் விஷ்வா , தமிழ் சினிமாவில் சாம்பியன் ஆக வாழ்த்துகள் !