2M சினிமாஸ் மற்றும் D பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கே.வி. ஷபரீஷ், தயாள் பத்மநாபன் ஆகியோர் தயாரிக்க, வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, மாறன், சரவணன், லிஸ்ஸி ஆண்டனி, லோகன் கண்ணன், நர்மதா, அருவி மதன், கன்யா பாரதி, கவிதா பாரதி மற்றும் சுப்பிரமணியம் சிவா நடிப்பில் கவிதா பாரதியோடு சேர்ந்து திரைக்கதை வசனம் எழுதி தயாள் பத்மநாபன் கதை எழுதி இயக்கி இருக்கும் படம் லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு .
ம்ஹும்!
கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் , தியாகராஜ பாகவதர் சம்மந்தப்பட்ட லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு விஷயத்துக்கும் இதற்கும் சம்மந்தமில்லை.
அதை எல்லாம் எடுக்கும் அளவுக்கு இங்கே யாரும் இல்லை என்பதை தெரிந்தோ என்னவோ, தூக்குத் தண்டனை நியாயமா இல்லையா என்ற கதைக்கு, ஓர் ஈர்ப்பு ஏற்படுத்த, இந்தப் பெயரை பயன்படுத்தி இருக்கிறார் தயாள் பத்மநாபன் .
கொலைக்குற்றவாளி ஒருவனுக்கு ( அருவி மதன்) தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டிய நிலையில், நீதிபதிக்கு (கன்யா பாரதி) என்னவோ உறுத்தல்! தீர்ப்பு எழுதிய நிலையில் அறிவு என்ற (வெற்றி) தூக்குத் தண்டனைக் கைதியின் சுயசரிதை புத்தகம் ஒன்றை அவர் படிக்க ஆரம்பிக்க, காட்சிகள் விரிகின்றன.
உருப்படாத அப்பா , உழைத்துப் போராடும் அம்மா (லிசி ஆண்டனி) இவர்களுக்கு மகனாக பிறந்த அறிவு, படித்து முடித்து விட்டு அரசு வேலைக்கு காத்திருக்கிறான் . குடும்பத்தில் வறுமை.
விவசாய நிலத்தின் பத்திரம் கந்துவட்டி ரெட்டியார் (கவிதா பாரதி) வீட்டில் இருக்கிறது. வட்டி கூட கொடுக்க முடியாத நிலையில் அவரால் ஏற்படும் அவமானங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
அவ்வப்போது அறிவுக்கு உதவி செய்யும் நபர் (மாறன்) ஒரு திருடன் எனது அறிவுக்கு பிறகுதான் தெரிய வருகிறது . வேறு வழி இன்றி அறிவும் திருட ஆரம்பிக்கிறான். கொஞ்சம் காசு வருகிறது.
பாலில் தண்ணீர் கலந்து விற்று ஏமாற்றும் ஒரு பெண்ணுக்கும் ( பிரிகிடா சாகா) அவனுக்கும் காதல் . திருட்டுக்கு திருட்டுக்கு செட் ஆகி விடுகிறது. கல்யாணம் . பிள்ளைகள்.
போதிமரம் இல்லை….வேறு ஏதோ ஒரு மரம்!
அந்த மரத்தடியில் திடீரென்று மனைவிக்கு ஞானோதயம் வருகிறது. ”திருடிய காசில் வாங்கிய சேலையைக் கட்டிக் கொண்டு இருக்கும்போது எவன் எவனோ தொடுவது போல இருக்கிறது ” என்கிறாள். (சபாஷ் வசனம் தயாள் பத்மநாபன்- கவிதா பாரதி)
வட்டிக்கட்ட திருடுவதற்கு பதில் அசலைக் கட்ட ஒரு முறை திருடி விடு என்று ஒரு ரிவர்ஸ் அடிக்கவும். செய்கிறாள் மனைவி
கந்துவட்டி ரெட்டி வீட்டு பொட்டியைத் திறந்து பத்திரத்தை மட்டும் திருட முடிவு செய்கிறான் வெற்றி.
அப்போது நடந்த ஒரு சம்பவம் அறிவுவை தூக்குத் தண்டனைக் கைதியாக்குகிறது. அவனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதா இல்லையா? தூக்குத் தண்டனை நியாயமா இல்லையா என்பது பற்றி, சின்சியராக ஒரு உரையாடலை நிகழ்த்தி முடிகிறது இந்த லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு .
காலகாலமாக விவாதங்களை வளர்த்துக் கொண்டே இருக்கும் ஒரு சீரியசான விஷயத்தை எடுத்து, அது பற்றிய சிந்தனையையும் படம் பார்ப்போர் மனதில் வாதப் பிரதிவாதங்களையும் நிகழ்த்துகிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன்.
தூக்கு கயிறு தயார் செய்யும் விதம், ஜெயிலில் கைதியின் மனநிலை. போலீஸ் அதிகாரிக்கும் அவனுக்குமான வாதம், அம்மாவின் அழுகை என்று காட்டி … அதன் பின்னர் திருடன் கொலைகாரன் ஆகும் சூழல் ஏற்படுவது எப்படி என்று காட்டும் திரைக்கதை உத்தி நன்றாக இருக்கிறது.
இயக்குனரின் எளிமையான படமாக்கல் பாராட்டுக்குரியது.
காட்சியின் சூழலுக்கான உணர்வை மேம்படுத்தித் தருகிறது பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு. ஜெயில் அறையின் கடைசி ஷாட் ஒளிப்பதிவு, இயக்கம் , கலை இயக்கம் எல்லாம் சேர்ந்த ஒரு கவிதை. குறிப்பாக பன்னீர் செல்வம் வைத்திருக்கும் ஃ பிரேமின் அளவு அபாரம் .
பாரதிதாசனின் முத்தம் ஒண்ணு தாடா பாடலுக்கு மெட்டமைத்து சுகமாக ஒலிக்க விட்ட இடத்தில் ஜொலிக்கிறார் இசையமைப்பாளர் தர்புக சிவா .என்ன ஒரு அற்புத வரிகள். இசையமைப்பாளர்களே .. உங்களுக்கு பாட்டுக்கு மெட்டுப் போடத் தெரிந்தால் இப்படி பல திரவியங்கள் திரைக்கு வரும்.
தனது பாணியில் இயல்பாக நடித்துள்ளார் வெற்றி .ஃ பைவ் ஹோட்டலில் groom செய்து கொண்ட தோற்றத்தில் இருப்பதை மட்டும் தவிர்த்து இருக்கலாம்.
பிரிகிடா சாகா கவனிக்க வைக்கிறார் . லிஸியின் பங்களிப்பு சிறப்பு.
அதிகம் பேச வாய்ப்பில்லாத – தூக்குப் போடும் நபரின் – கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் சுப்ரமணிய சிவா
நன்றாக பேசி இருக்கிறார் ரங்கராஜ் பாண்டே.
தூக்குக் கைதியின் மனநிலைக்கு அப்பாற்பட்ட நடிப்பு, உரையாடல் என்று படம் போவது , படம் கொடுக்க வேண்டிய தாக்கத்தை குறைக்கிறது.
அந்ததந்த சூழ்நிலைக்கு அவரவர் நியாயம் என்று பேசும் ஒரு கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு தூக்குத் தண்டனை நூறு சதவீதம் தவறு என்று பேச முடியுமா ? எனில் கொலைக் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை சரிதான் என்பது அந்த சூழலில் அரசுத் தரப்பின் , சட்டத் துறையின் நியாயம் என்று ஆகி விடாதா?
தவிர படம் சொல்லும் வழக்குக்கு தூக்குத் தண்டனை கிடைக்குமா? என்ற சட்ட ரீதியான சந்தேகமும் எழுகிறது கந்து வட்டிக்காரன் வீட்டில் தனது சொந்தப் பத்திரத்தை திருடப் போனவன் என்ற விஷயம் வழக்கு விசாரணையில் சரியாக முன்னிலைப்படுத்தப்பட வில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. அந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் கவனமாக எழுதி இருக்கலாம்,
படத்தின் இறுதியில் சுவாரஸ்யமாக , ‘தூக்குத் தண்டனை சரியா தப்பா என்பதை பார்வையாளர்கள் முடிவு செய்யுங்கள்’ என்கிறார்கள்
இரண்டு திரைப்படங்களை வைத்தே இதை முடிவு செய்யலாம்.
புதிய வார்ப்புகள் படத்துக்கு கதை எழுதிய பாக்யராஜ் ஒரு பெண்ணின் கழுத்தில் உள்ள தாலியை அறுத்து ஒரு நல்ல மனிதனுடன் இணைய வைப்பார் . அதே பாக்யராஜ் அந்த ஏழு நாட்கள் படத்தில் தாலி என்பது சாதாரண விஷயமில்லை. அப்படி எல்லாம் அறுத்துப் போட முடியாது என்பார். இரண்டு படத்தையும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் .
புதிய வார்ப்புகள் படத்தில் தாலியை அறுப்பது நியாயமாக இருக்கக் காரணம் அதைக் கட்டியவன் அயோக்கியன். அந்த ஏழு நாட்கள் படத்தில் தாலியை தொடக் கூடாது என்பதே நியாயமாக இருக்கக் காரணம் அதை கட்டியவன் நல்லவன் என்பதுதான்.
எனவே தாலியை அறுப்பது சரியா தப்பா என்பதை தாலிக் கயிறு முடிவு செய்வதில்லை . கட்டியவன்தான் முடிவு செய்கிறான்.
அதே போல தூக்குத் தண்டனை சரியா தப்பா என்பதை தூக்கு கயிறோ சட்டமோ கூட முடிவு செய்வதில்லை. குற்றத்தின் நோக்கமே முடிவு செய்கிறது.
அதே நேரம், தாலியை அறுத்தது தப்பு என்றால் மீண்டும் கட்டிக் கொள்ளலாம். தூக்குத் தண்டனை என்ற பெயரில் ஒருவனின் உயிரை அறுத்து விட்டால் மீண்டும் முடிச்சு போட்டு உயிரை மீட்க முடியாது. அப்படி ஒரு நிரபராதி கொல்லப்பட்டால் அந்த தவறை சட்டத்தால் சரி செய்ய முடியாது என்பதால்தான் தூக்குத் தண்டனையே வேண்டாம் என்ற கருத்தும் வருகிறது.
ஆனால் கால மாற்றத்தில் மனிதன் மேலும் மேலும் மிருகமாவதும் , கொடூர கொலைகளுக்கான அநியாய காரணங்களும், கால் பவுன் மூக்குத்திக்காக உயிர்களை எடுப்பதும் பெருகி வரும் நிலையில்,
தாம் செய்த குற்றங்களுக்கு ஆதாரம் இருக்கக் கூடாது என்ற ஒற்றைக் காரணத்துக்காக கூட அதீத சுயநலத்தால் பலர் கொலைகள் செய்யும் சூழலில் தூக்குத் தண்டனை கூடவே கூடாது என்று முழு மனதோடு சொல்ல முடியவில்லை.
ஒரு பெண்ணைக் கற்பழித்துக் கொன்ற தனது மகனை , ஒரு பாசமுள்ள அப்பா, பெரும் பணம் செலவு செய்து காப்பாற்ற, வெளியே வந்த அந்த மகன் அடுத்த ஒரே மாதத்தில் தன்னை பெற்ற தாயையே கொலை செய்த சம்பவம் கூட அண்மையில் தமிழ்நாட்டில் நடந்தது. அவனை தூக்கில் போட்டு இருந்தால் அவனது அம்மா செத்திருக்க மாட்டார் அல்லவா?
எனில் என்னதான் செய்வது ?
ஒரு குற்றவாளியின் குற்றம், தூக்குத் தண்டனைக்குரியதுதான் என்ற சூழல் வரும்போது, மீண்டும் ஒரு முறை அந்த குற்றத்தை போலீஸ் விசாரணையில் இருந்து வழக்கு விசாரணை வரை மறுபடி ஆரம்பிக்க வேண்டும். அந்த விசாரணைக்கு குழுக்களில் புதியவர்களுக்கு இருக்க வேண்டும் . முற்றிலும் புதிய குழு செய்தாலும் தவறு இல்லை.
வேறு குற்றங்கள் செய்து சிறைக்கு வருவோரிடம் கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு எதிரான பயத்தை உருவாக்கி அனுப்ப வேண்டும்.
ஒருவேளை இன்னும் விஞ்ஞானம் வளர்ந்து குற்றவாளிகளை சாட்சியம் வாக்கு மூலம் மட்டும் இல்லாமல் தொழில்நுட்ப ரீதியாகவே சரியாக கண்டுபிடிக்கும் நிலை வரும்வரை இதைத்தவிர வேறு வழி இல்லை.
அது நடக்காத வரை இன்னும் சில நூற்றாண்டுகள் ஆனாலும் தூக்குத் தண்டனை சரியா தவறா என்ற இந்த விவாதம் இப்படியே தொடரும் .
இவ்வளவு விவாதங்களை எழுப்புகிறது அல்லவா? இதுதான் இந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின் வெற்றி.
படம் பார்த்தால் , நீங்களும் தீர்ப்பு எழுதலாம்
