சத்யதேவ், விகாஸ் முப்பாலா, தீபா தாமஸ், பாலா பராசர் , ஆனந்த், பிரணாய் வகா, மாஸ்டர் கிரண் ஆகியோர் நடிக்க வெங்கடேஷ் மகா எழுதி படத்தொகுப்பு செய்து இயக்கி இருக்கிறார்.
நடிகர்கள் அல்லாத சாதாரண நபர்களைக் கொண்டு 2018 எடுக்கப்பட்ட C / O காஞ்சரபலெம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் பெரும் பாடத்துகளைப் பெற்றவர் இவர்.
ராவ் பகதூர் என்ற வார்த்தைக்கு தைரியம் மிக்க ராஜா என்று பொருளாம்
புவனாலயம் என்ற தனது பரம்பரை அரண்மனையில் வசித்து வரும் ஜமீன்தார் புவனம் ராமப்பா ராவ் பகதூர் (சத்யதேவ்) , ஓவர் சரக்கு, முதுமை அதோடு மனநிலை தவறிய நிலையிலும் இருக்கிறார்.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பஞ்சாயத்து செய்து வைப்பது போல, சீரியசாக பேசிக் கொண்டு இருப்பார்.
”கட்டாய குடும்பக்கட்டுப்பாடு கொண்டு வந்து பல ஆண்களுக்கு (குறிப்பாக ஜமீன்களுக்கு) வாரிசுகள் உருவாவதை தடுத்தது நீங்க செய்த பெரிய தப்பு ”என்று, எப்போதோ விமான விபத்தில் இறந்த சஞ்சய் காந்தியைக் கண்டித்து ( இந்திரா காந்தியின் இரண்டாவது மகன்- இந்திரா காந்தி யாருன்னு கேட்காதீங்க; ஐ யாம் பாவம்) காரசாரமாக அவருடன் உரையாடுவார்.
அவரது உணர்வில் அவரது படுக்கை அறை முழுக்க பூசணிச்செடி படர்ந்து நிறைய பூசணிக்காய்கள் விளைகின்றன கல்லென்றால் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் மருத்துவர்கள் நிர்ணயித்த காலத்தையும் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அப்படி அவர் உயிரோடு இருக்கக் காரணம்… செத்துப் போன அவரது இரண்டாவது மகன் குசுமப்பா (மாஸ்டர் கிரண்) அவருக்குப் பிறந்தவன் இல்லை என்கிற அவரது எண்ணம்தான்.
1960 களில் இளைஞனாக இருந்த இதே ராமப்பா, பக்கவாதத்தில் படுத்து இருக்கும் தனது அப்பாவைப் பராமரிக்கும் பணியில் இருக்கும் செவிலியர் ரேணுகா (தீபா தாமஸ்) மீது காதல் கொள்கிறார்
.ஆனால் வேறொருவரை காதலிப்பதாக ரேணுகா சொல்ல , மனம் உடைகிறார். கல்யாணமே வேண்டாம் என்று அவர் நினைக்க, ஆனால் முன்னோர்களின் ஆவிகள் வந்து பரம்பரை தொடர வேண்டும் என்று சொல்கின்றன.
எனவே தனது நண்பர் ஆச்சாரி ( விகாஸ் முப்பாலா) மூலம் மீண்டும் ரேணுகாவை தொடர, அவளும் காதலை ஏற்கிறாள். . கல்யாணம் நடக்கிறது . முதல் மகன் லவனப்பா (பிரணாய் வகா) அழகாக வெள்ளையாகப் பிறக்க, இரண்டாம் மகன் குசுமப்பா கறுப்பாகப் பிறந்ததால்தான் ராமப்பாவுக்கு அந்த சந்தேகம் .
முதல் மகனை கொஞ்சும் ராமப்பா இரண்டாவது மகனை வெறுக்கிறார். முதல் மகனும் தம்பியை நிறம் காரணமாக கேலி செய்ய, மனம் வெறுத்த குசுமப்பா நீரில் முழ்கி தற்கொலை செய்து கொள்கிறான். வெறுத்துப் போன ரேணுகா ஒரு தனி அறைக்குள் தன்னைத்தானே சிறை வைத்துக் கொள்கிறாள்
எல்லோருக்கும் இடையில் ஓடி ஆடுவது வேலைக்காரி அச்சம்மா(பாலா பராசர்)தான்.
இந்தக் காலக்கட்டத்தில் குழந்தையின் அப்பா யார் என்று கண்டுபிடிக்கும் டி என் ஏ மரபணு பரிசோதனை தொழில் நுட்பம் வர, சடங்கு என்ற பெயரில் செத்துப் போன மகனின் கல்லறையை தோண்டி பிணத்தின் எலும்புகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப முயலுகிறார் ராமப்பா .
விஷயம் அறிந்த நண்பர் ஆச்சாரி அதைக் கண்டிக்க, ஒரு நிலையில் போலீஸ் விசாரணை வரை போகிறது. போலீஸ் அதிகாரியே (ஆனந்த்) ஆடிப் போகிறார் . எனினும் டி என் ஏ பரிசோதனை நடக்க, குசுமப்பா ராமப்பாவின் குழந்தைதான் என்று நீதிமன்றம் அறிவிக்கிறது. அந்த சந்தோஷத்தில் ராமப்பா இறந்து போக,
ஆனால்…
இந்த ஆனால் மூலம் சொல்லப்படும் விஷயம்தான் பட்டாசு வெடிக்கிறது. லக லக ரகளை செய்கிறது சொல்லப் போனால் அது ஒரு ஆனால் அல்ல . பரம்பரை பரம்பரையாகவே பல ஆனால்கள் தான் என்று வெடிச் சிரிப்பு சிரிக்க வைக்கிறார்கள்.
சிம்புதேவன் இயக்கி வடிவேல் நடித்து 2006 ஆம் ஆண்டு வந்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் ஒரு கட்டுடல் கொண்ட ஜிம் பாடி நபரின் உடம்புக்கு மேல் தன் தலையை ஒட்ட வைத்து வடிவேலு ஒரு ஓவியம் வரையச் செய்வார் இல்லையா? அந்த ஒற்றைக் காட்சி விதையில் இருந்து முளைத்த பூசணிச்செடி என்று இந்தப் படத்தை சொல்லலாம்.
நாலாந்தலைமுறையை நினைத்துப் பார்த்தால் நாவிதனும் சித்தப்பன் ஆவான் என்பான் சுப்ரமணிய பாரதி. அதுதான் இந்தப் படம்.
பரம்பரைப் பெருமை , நிறத்தை வைத்து மனிதனை தாழ்த்துவது, பொய் மூட்டைகளால் நிரப்பப்படும் சில வரலாறுகள் இவற்றை நையாண்டி செய்யும் படம் இது அன்னப்பறவையை விட காகம் மட்டமாக நினைக்கப்பட நிறம் தானே காரணம் என்று படம் கேட்க்கும் மறைமுக கேள்வியில் அது வெளிப்படுகிறது.
வழக்கமான் திரைக்கதை அல்லாது நான் லீனியர் , பிளாஷ்பேக் குக்குள் பிளாஷ்பேக் என்று ராமப்பாவின் மனநிலையின் அலைவரிசையிலேயே காட்சிகளை அமைத்து, வித்தியாசமான கலாய்ப்புப் படமாக இயக்கி இருக்கிறார் வெங்கடேஷ் மகா.
பிரம்மாண்டமான செட்கள் (சுழலும் சுவர்கள்) மேஜிக்கல் ரியலிசம் பாணியிலான காட்சிகள் என்று மேக்கிங்கும் அருமை. தனித்தன்மையை காட்டவும் படத்தின் கிண்டல் கேலி சிறப்பாக வெளிப்படவும் \வசதியாக, ஒரு நாடகத்தனமான பாணியை கையாண்டு இருக்கிறார் இயக்குனர் குறைவான பாத்திரங்கள், சத்யதேவுக்கான அதீத ஒப்பனை ஆகியவையும் நாடக உணர்வை அதிகரிக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் அது குறையில்லை.
நிகழ்காலம் , பிளாஷ்பேக் இரண்டுக்கும் தனித்தனி ஒளி அமைப்பு மற்றும் வண்ண ஆளுமை கொண்ட கார்த்திக் பர்மர் ஒளிப்பதிவு பிரமாதம் . ஸ்மரன் சாயின் பின்னணி இசை படத்தின் குணாதிசயத்துக்கு பெரும் பலம் சேர்க்கிறது ரோஹன் சிங்கின் தயாரிப்பு வடிவமைப்பு சபாஷ் போட வைக்கிறது. ஆடைகள், மேக்கப் ஆகியவையும் கவனிக்க வைக்கிறது.
ராமப்பாவாக நடித்திருக்கும் சத்யதேவின், இதுவரையிலான கேரியரிலேயே பெஸ்ட் படம் இதுதான் என்கிறார்கள் அக்கட தேசத்தில். சாதாரணமாக ஓர் இளம் நடிகர் ஏற்கத் துணியாத ஒரு கதாபாத்திரத்தில் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் நல்ல வாய்ப்பாக இருக்கும் திரைக்கதையில், நீண்ட வசனங்கள், விதவிதமான பாவனைகள் உடல் மொழிகள் என்று முழு அர்ப்பணிப்புடன் பிரமாதமாக நடித்திருக்கிறார் சத்யதேவ்.
பிளாஷ்பேக்கில் அவ்வளவு அழகான பெண்ணாக, பின்னர் அறைக்குள் இறுக்கிப் போன மனைவியாக அட்டகாசமாக நடித்துள்ளார் தீபா தாமஸ்.
குடும்ப டாக்டராக வரும் விகாஸ் முப்பாலா சிறப்பான நடிப்பு
சைக்கிள் கேப்களில் சிக்ஸர் அடிக்கிறார் அச்சம்மாவாக நடித்திருக்கும் பாலா பராசர. அச்சாம்மா !
பின்னால் அழுத்தமான விளைவுகளை ஏற்படுத்த, ஒரு திரைக்கதை போதுமான BREATHING எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்தப் படம் அதிகமான BREATHING எடுத்துக் கொள்கிறது. அதனால் முதல் பாதி சோதிக்கிறது. எனினும் அதைக் கடந்து விட்டால் படம் நல்ல ரசிப்புக்குரிய ஒன்றாக மாறுகிறது . இன்னும் கொஞ்சம் சீக்கிரம் அந்த தூரத்தை திரைக்கதை கடந்திருக்க வேண்டும்.
இதற்கும் அப்பாற்பட்டு இந்தக் கதைக்கு இவ்வளவு நீளம் என்பது அதிகமே. காரணம் ஒவ்வொரு விஷயமும் தேவைக்கு மேலேயே போகிறது
பிறப்பின் பெருமை, வர்ண வேறுபாடு இவற்றை கண்டிக்கும் கதையில் ஒரு சாதிய மேட்டுக்குடி நபரை இவற்றுக்கு எதிரான நல்லவர் என்று சொல்வது ஒரு சமாளிப்புதான். குற்றத்தின் வேரை விமர்சிக்காமல் , சப்பைக்கட்டுக் கட்டி நிற்பதால் படத்தின் நோக்கம் மழுங்குகிறது.
ஆனால் அந்த கடைசி ஷாட்கள் ..
ஒரு போட்டோவின் பரம்பரை வரலாற்றுக்குள்ளாகவே இவ்வளவு களேபரம் என்று உணர்வு வரும்போது, அந்த பிரம்மாண்டமான சுவர் முழுக்க பல தலைமுறை ராமப்பாக்களின் வரிசையைக் காட்டும் காட்சி, வெடிச் சிரிப்பை வரவைத்து எள்ளலின் உச்சம் தொடுகிறது. வேர்களின் நீட்சியில் தொடங்கும் படம் அதே வேர்களின் நீட்சியில் முடிவது நைஸ்.
சிங் கீதம் படத்தின் மூலம் அண்மையில் அசத்திய தெலுங்கு சினிமா , சூட்டோடு சூடாக கொடுத்திருக்கும் இன்னொரு வித்தியாச காட்சி விருந்துதான் ராவ் பகதூர்.
மொழி மாற்றம் செய்து விட வேண்டிய படத்தை அப்படியே விடறீங்களே, ఎందుకు?