ஈ 4 என்டர்டைன்மென்ட் சார்பில் முகேஷ் மேத்தா தயாரிக்க, துருவ் விக்ரம், பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்பு தாசன் , கடலோரக்கவிதைகள் ராஜா நடிப்பில் கிரி சாயா இயக்கி இருக்கும் படம் .
அறிவாளியான கோபக்கார சென்னை பையன் ( துருவ்) கர்நாடக மங்களூர் மெடிக்கல் கல்லூரியில் மருத்துவம் படிக்கிறான் . படிக்கும் காலத்திலேயே அளவற்ற குடி சிகரெட் .
தான் சொல்வதே நியாயம் என்ற கருத்து உள்ள அவன், ஒரு மாணவியை (பனிதா சந்து) காதலிக்கிறான் . இருவரும் காதல் காலத்திலேயே உடலால் இணைகிறார்கள் .
ஷெட்டி பிரிவைச் சேர்ந்த பெண்ணின் தந்தை சாதியையும் காதல் ஜோடியின் நெருக்கத்தையும் காரணம் காட்டி காதலை பிரிக்கிறார் .
காதல் ஜோடிக்குள்ளும் கருத்து மாறுபாடு . காதலிக்கு வேறு திருமணம் .
டாக்டராகும் நாயகன் கூடவே போதைப் பழக்கத்துக்கும் ஆளாகிறான் . அதே நேரம் நல்ல டாக்டர் என்ற பெயரும் எடுக்கிறான் .
ஒரு நடிகை ( பிரியா ஆனந்த்) உட்பட சில பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்துக் கொள்கிறான் . எனினும் காதலியை மறக்க முடியாத நிலை .
போதையில் ஒரு ஆப்பரேஷன் செய்த விவகாரத்தில் உண்மையை ஒத்துக் கொண்டு வேலையை இழந்து , இன்னும் மோசமான நிலைக்கு போகிறான் . காதல் ஜோடி என்ன ஆனது என்பதே படம் .
நாயகன் வேடத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார் துருவ் . தோற்றம், நடை உடை பாவனை , குரல் நடிப்பு எல்லாம் அருமை . சோகம், கோபம் , என்று எல்லா உணர்வுகளிலும் அசத்துகிறார் .
தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நாயகன் கிடைத்து இருக்கிறார் . துருவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு !
கிரிசாயா காட்சிகளை மிக சிறப்பாக எடுத்து இருக்கிறார் . அழுத்தமான இயக்கம் . ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவில் ஜொலிக்கிறது படம் . ரதனின் இசை ஒகே .
ஒரு ஹீரோ அதுவும டாக்டர் நாயகன் குடி , சிகரெட் , போதை மருந்து , கோபம் , என்று படம் முழுக்க வருவதை ஜீரணிக்க முடியவில்லை . கெட்ட குணங்களை அழகாக்கம் செய்வதையும் ஏற்க முடியவில்லை . தர்ம நியாயம் இல்லாத பாத்திரப் படைப்பு ( இதன் மூலமான தெலுங்கு அர்ஜுன் ரெட்டியும் அப்படியே )
துருவ் விக்ரம் படத்தை தூக்கிப் பிடிக்கிறார். அவருக்காகப் பார்க்கலாம் .