லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன், ஜி கே எம் தமிழ்க் குமரன், பசங்க புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பாண்டிராஜ் தயாரிக்க, ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார், யோகிபாபு, மிஸ்கின், நடன இயக்குனர் சாண்டி , பாண்டிராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம்.
கணவன் (ஜெயராம்), மனைவி (ஊர்வசி), மூத்த மகள் பராசக்தி (சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி) இளைய மகள்மதுமிதா (அனந்திகா சனில்குமார்) அடங்கிய நடுத்தரக் குடும்பம். நடுத்தரக் குடும்ப சண்டைகளோடு கணவன் மனைவி.
எப்போதும் சண்டை போட்டுக் கொள்ளும் அக்கா தங்கை . இவர்களுக்கு வரப்போற கணவன்மார்கள் என்ன பாடுபடப் போறாங்களோ என்று நினைக்கும் அம்மா. வாடகை வீடு.
இவர்களின் அலட்சியங்களால் டென்சன் ஆகும் வீட்டு ஓனர் (யோகிபாபு)
அப்பாவியாக தோன்றும் ஒருவனை அக்கா காதலிக்க, தங்கையை ஒரு போதைப் பொருள் கடத்தல், அடிதடி ரவுடி (நடனம் சாண்டி) விரட்டி விரட்டி லவ் டார்ச்சர் கொடுக்கிறான். தைரியசாலி அக்கா ரவுடியை மிரட்டுகிறார். அப்பா மிரட்டுகிறார் . ஆனால் ரவுடியின் அடாவடி ஆத்தா மகனின் காதலுக்கு ஆதரவு.
ரவுடியின் தொல்லைகள் அதிகரிக்க, பேசாமல் ரவுடியை கொலை செய்யலாமா என்று பெண்ணின் குடும்பம் யோசிக்க, ரவுடி கொலை செய்யப்படுகிறான். விசாரிக்க வருகிறார் சினிமா இன்ஸ்பெக்டர் (மிஷ்கின்)
கணவன், மனைவி, அக்கா பராசக்தி, , தங்கை மதுமிதா நால்வரும் தங்களுக்கு யாரோ ஒருவர்தான் ரவுடியை கொலை செய்து விட்டதாக ஒருவரை ஒருவர் சந்தேகப்பட, ஊரில் இருந்து வரும் கணவனின் தம்பி, மனைவியின் தம்பி ஆகியோர் மீதும் சந்தேகம் வர,
ரவுடியை கொன்றது யார் ? ஏன்? என்பதே இந்தப் படம்.
தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி சொல்லி ஆரம்பிக்கிறது படம்.
ஆரம்பக் காட்சிகளில் வரும் கணவன்- மனைவி, அக்கா- தங்கை- சண்டை குடும்ப யதார்த்தம் .நடுத்தரக் குடும்பங்களில் வரும் உன் வீட்டு ஆளுக என் வீட்டு ஆளுக என்று கணவன்- மனைவிக்குள் இருக்கும் பார்வை வித்தியாசம் புன்னகைக்க வைக்கிறது.
ஆங்காங்கே வசனங்களில் நகைச்சுவை பட்டாசு வெடிக்கிறது.
அக்காள்- தங்கை என்று ஃ பிரேமை நிறைக்கும் இரண்டு பெண்கள் அவர்களின் ரசிக்க வைக்கும் நடிப்பு , ஜெயராம் , ஊர்வசியின் ஆளுமை மிக்க நடிப்பு , மிஸ்கினின் வித்தியாசமான நடிப்பு ஆகியவை கவனிக்க வைக்கிறது. தாதா அம்மாவாக காயத்ரி சிறப்பு.
போகிற போக்கில் S .I .R பற்றிய வசனம், திடீரென ஊர்வசி
”நான்தானே இட்டுன்னு போயி இட்டுன்னு வரணும்” என்று சொல்வது .. போன்ற மறைமுக அரசியல் குறும்புகளும் இருக்கிறது.
ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு ஜொலிக்கிறது. Foxn இசையில் துள்ளல் இருக்கிறது.
சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் வந்தாலும் டைட்டில் பாடல் இனிமை. பிரதீப் ராகவின் படத் தொகுப்பும் நேர்த்தி. த ராமலிங்கத்தின் கலை இயக்கம் சிறப்பு.
சின்னச் சின்ன கேரக்டர்களுக்கு கூட புற்றீசல் போல, முகம் தெரிந்த நடிக, நடிகையர் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
நடுத்தரக் குடும்ப இளம்பெண்களுக்கு ஆள் பலம், அரசியல் பலம் உள்ள ரவுடிகளின் தொல்லை என்பது நிகழ்வில் நடக்கும் விஷயம். அப்படிப்பட்ட ரவுடியின் கொலை, போலீசின் சந்தேகம் என்றால் அந்தக் குடும்பம் எப்படி பதறிப் போகும்? அதுதானே யதார்த்தம்?
அதற்காக படத்தை சீரியஸாகத்தான் சொல்ல வேண்டுமா? காமெடியாக சொல்லக் கூடாதா?
சொல்லலாம்.ஆ னால் கேரக்டர்கள் சீரியஸாக இருக்கனும். ஆடியன்ஸுக்கு அது காமெடியாக வரலாம் .
ஆனால் இது என்னமோ மன நல மருத்துவமனையில் இருந்து அரேஞ்ஜ் செய்யப்பட் ட குடும்பம் போல சூழலுக்கு சம்மந்தமே இல்லாமல் தத்துப் பித்தென்று உளறிக் கொண்டு இருக்கிறது.
அப்படி இருந்தும் எப்போதாவதுதான் காமெடி ஒர்க் அவுட் ஆகிறது. ஒரு சின்ன காமெடி வசனத்துக்காக மூன்று நிமிடம் சகிக்க வேண்டி இருக்கிறது. சில காட்சிகள் ரொம்பவும் பொறுமையை சோதிக்கின்றன.
ஒரு திரைக்கதையில் நிறைய கிளைக்கதைகள் வரலாம். ஆனால் அதற்கும் ஒரு அளவு வேண்டாமா? கிளைக்கதைகள் , கிளைக் கதைகளில் இருந்து காம்புக் கதைகள், காம்புக் கதைகளில் இருந்து இலைக் கதைகள், இலைக் கதைகளில் இருந்து நரம்புக் கதைகள், நரம்புக் கதைகளில் இருந்து நுனிக் கதைகள் என்று கண் மண் தெரியாமல் போகிறது படம்
திருப்பங்கள் நல்லதுதான். ஆனால் அதில் லாஜிக் வேண்டாமா?
தங்கையை ரவுடி லவ் பண்ணுவது ரவுடியின் அம்மாவுக்கும் தெரிகிறது. ஆனால் ஒரு நிலையில் ரவுடி லவ் பண்ணுவது வேற ஆளை என்று ரவுடியின் நண்பர்கள் சொல்லும்போது அப்படியா என்று, அம்மா வாயைப் பிளக்கிறார்.
ஜெயராம் ஐ ஏ எஸ் டிரைனிங் கொடுப்பவர் என்கிறார்கள் . அப்படி இருக்க அவர் ஏன் மற்ற காட்சிகளில் அப்படி பம்ம வேண்டும்? அது மகள் சொல்லும் பொய் என்றால் போலீசிடம் பொய் சொல்ல முடியுமா?
போலீஸ் அதிகாரியின் மகனுக்கு , மதுமிதா தோழி. அவன் மரணத்துக்கு எல்லாம் மதுமிதா போயிருக்கிறார் .ஆனால் போலீஸ் அதிகாரியை மதுவுக்கு தெரியாதாம்.
ரவுடி கதாபாத்திரம் மேக்கப் போட்டுக் கொண்டு பேயாக வந்து மதுமிதாவை மிரட்டுகிறது. அதில் நமக்கு பெரிதாக பயம் வரவில்லை. ஆனால் சில இடங்களில் ஊர்வசி அதை விட மிரட்டுகிறார்.
ஃபேமிலி ஆடியன்ஸுக்கான படத்தில் போகிற போக்கில் இரட்டை அர்த்த வசனம் , வீட்டில் பெண்கள் குடிப்பதை நார்மலைஸ் செய்யும் காட்சிகள் இவை எல்லாம் முகம் சுளிப்பு. ஜெயராம், ஊர்வசி, அனந்திகா சனில்குமார் என்று மலையாளிகளையே வைத்து எடுத்து இருப்பதால் மலையாளப் படமாகவே எடுத்து விட்டார்களோ என்னவோ.
அதுவும் அனந்திகா படத்திலேயே மலையாளம் தான் பேசுகிறார். ஒரு மொழிப படத்தில் ஒரு சில கேரக்டர்கள் கொஞ்சம் கூட பயப்படாமல் இன்னொரு மொழியிலேயே பேசும் கொடுமை எல்லாம் தமிழ் சினிமாவில்தான் நடக்கும்
கடைசியில் மாணவர்கள் , இளைஞர்கள் சம்மந்தப்பட்ட ஒரு மிக முக்கியமான விஷயத்தை வலியுறுத்தி முடித்து படத்தை காப்பாற்றுகிறார் பாண்டிராஜ்.
மொத்தத்தில் பரிமளா அன்ட் கோ … ஓகோவும் இல்லை… அய்யகோ வும் இல்லை.
