காட்டாளன் @ விமர்சனம்

கியூப்ஸ் என்டர்டைன்மெண்ட் சார்பில் ஷரீப் முகமது தயாரிக்க, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கௌரவத் தோற்றத்தில் நடிக்க, முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஆண்டனி வர்கீஸ், சுனில். ஜெகதீஷ், கபீர் துஹான் சிங், துஷாரா விஜயன் நடிப்பில் பால் வர்கீஸ் எழுதி இயக்கி தமிழிழும் வந்திருக்கும் மலையாளப் படம்.

1995 ஆம் ஆண்டு துவங்கும் கதை .

தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள ஆனைக்கொல்லி என்ற கிராமத்தில் யானைக் கூட்டம் மக்களை அடித்துக் கொல்வது தொடர , மாரி   என்ற யானை தந்தம் கடத்தும் நபரிடம் மக்கள்   உதவி கேட்கிறார்கள். யானைகளைக் கொன்று தந்தம் எடுத்துக்கொள்ளும்  மாரி,  மக்களை அடிமைப்படுத்துகிறான். கொடுமைப்படுத்துகிறான் .பெண்களை சிறுமிகளை தூக்கிச் சென்று கற்பழிக்கிறான் .

கார்ட்டல் எனப்படும்  கடத்தல் செய்யும் வணிக கூட்டமைப்பே அவன் கையில். 
அவனுக்கு எதிராக இருக்கும் இன்னொரு கடத்தல்காரன் எட்டி (கபீர் துஹான் சிங்) .  கார்ட்டலை கைப்பற்ற முயலும் இவனுக்கும் மாரிக்கும் எப்போதும் போட்டி. 

தந்தங்களை இவர்கள் வெட்டி தேனி மாவட்டம் வழியே ராமேஸ்வரம் கொண்டு வந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்துவார்களாம் . யானைத் தந்தம் கடத்தல்காரராகள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்களாம் 

மாரியின் கடத்தல் வேலையை தடுக்க முயலும் தேனி மாவட்ட தமிழ் எஸ் பி யின் பெயர் டேனியல் நாடாராம். 

மாரிக்கு உதவும் ஆண்டனி வர்கீஸ் என்ற மலையாளி  கடத்தல்காரன் (மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ்.தனது பெயரிலேயே நடித்துள்ளார்)  போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டிய பிணங்களின் உடலுக்குள் புத்திசாலித்தனமாக   தந்தங்களை  வைத்து அனுப்பி டேனியல் நாடாரை  முட்டாள் ஆக்குகிறான். 

ஆனால் ஆண்டனி வர்கீஸ் நல்லவராம். 

பலகாலம் மாரிக்கு உதவிய ஒரு நபரின் மகளின் மருத்துவ செலவுக்கே மாரி பணம் தர மறுக்க, அந்த நபருக்காக மாரியை எதிர்த்து, தனிப்பட்ட வகையில்  ஆண்டனி வர்கீஸ்  யாழ்ப்பாணத்துக்கு தந்தம் கடத்த , மாரியும் எட்டியும் ஒன்று சேர்ந்து ஆன்டனி வர்கீஸை எதிர்க்க ,  நடந்தது என்ன என்பதே படம். 

கண்களை விலக்க முடியாத அந்த காடு மலை லொகேஷன்கள் ரம்மியம் மற்றும் சிலிர்ப்பு. போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டிய உடலுக்குள் யானைத் தந்தம் கடத்தும் அந்த மலையாள புத்திசாலித்தனம் கவனிக்க வைக்கிறது. 

கேச்சா காம்பக்தே மற்றும் ஆக்ஷன் சந்தோஷின் சண்டைக் காட்சிகள்  பிரமாதம்.  ரனதேவ், சந்துரு செல்வராஜ், சுதீப் இலமோன் ஆகியோரின் ஒளிப்பதிவு மிக சிறப்பு. பின்னணி இசை என்ற பெயரில்  இந்தப் படத்தில் வாசித்துக் கொண்டே இருக்கிறார் ரவி பஸ்ரூர். 

படத்தில் வில்லன் ஒருவன் போதைப் பாம்பை நாக்கில் கடிக்க விட்டு போதையில் மிதப்பான் .மொத்த யூனிட்டுமே அப்படி ஒரு ‘மிதப்பில்’  இந்தப் படம் எடுத்து இருக்க வேண்டும். 

ஆனாலும்  அவர்கள் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். தமிழர்களை எல்லா வகையிலும் கேவலமாக சித்தரிப்பது.

படம் மலையாளப்படம்.ஆனால் கேரளப் பகுதியில் இப்படி யானைகளை கொல்வதோடு மக்களையும் அடிமைப்படுத்துவன் பெயர் மாரி . அதாவது அவன் தமிழனாம்.. கேரளாவில் நிஜத்தில்  இதெல்லாம் சாத்தியமா என்ன? 

ஆன்ட்டனி வர்கீஸ் என்ற மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் என்ற மலையாள பெயரிலேயே நடித்து இருக்கும் அந்த ‘நல்ல கெட்டவன் ; கேரக்டரிடம் ஏமாறும் முட்டாள் தனமான தேனி மாவட்ட எஸ் பி பெயர் டேனியல் நாடார் என்று சொன்னோம் அல்லவா? 1990 களில் தமிழ்நாட்டில் எந்த எஸ் பி பெயரில் சாதி இருந்தது. 

எனில் எதற்கு இந்த பெயர்?

மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பல நூறு சதுர கிலோ மீட்டர் தமிழ் நிலத்தை இழந்து கன்னியாகுமரியை மட்டும் தமிழ்நாட்டுக்கு மீட்டுக் கை கொடுக்க போராடியவர்கள் நேசமணி மற்றும்    டேனியல் 

1950 களில் பலநூறு சதுர கிலோ மீட்டர் நிலத்தை இழந்து கன்னியாகுமரியை மட்டும் தமிழகத்துக்கு கொண்டு வந்த அந்த தியாக போராட்டத்தில் ஈடுபட்ட டேனியல் அவர்களை கேவலப்படுத்த இந்த 2026 இல் ஒரு தமிழ்நாட்டு எஸ் பிக்கு டேனியல் நாடார் என்று பெயர் வைத்து வன்மம் கக்குகிறது இந்தப் படம்.

இது தவிர மலையாள சினிமாவின் பிதாமகன் ஜெ சி டேனியல் . அவர் ஒரு தமிழர் என்பதற்காக அவரையே இருட்டடிப்பு செய்யும் மலையாளிகள்தான் இந்த கேரக்டருக்கு டேனியல் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். 

பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு கேரக்டருக்கு நேசமணி என்று பெயர் வைத்து கேவலப்படுத்தினார்கள் .இப்போது டேனியல்.

தவிர மாரி தந்தத்தை யாழ்ப்பாணத்துக்கு கடத்துகிறான். அங்கே காட்டில் சிறுவர்களுக்கு எல்லாம் பயிற்சி கொடுக்கும் ஓர் அமைப்பு அந்த   தந்தங்களை வாங்குகிறதாம் . அங்கு இளம் பெண்கள் எல்லாம் பயிற்சி எடுத்து,  அந்தக் கடத்தல் வேலையில் உதவுகிறார்களாம்.அப்படி ஒரு பெண் கேரக்டரில்தான் துஷாரா விஜயன் வருகிறார். 

அதாவது விடுதலைப் புலிகள் யானைத் தந்தம் கடத்தினார்கள்  என்று சொல்ல வருகிறார்கள். ஆனால் அந்த அமைப்பு கதைப்படி ஆண்டனி வர்கீஸுக்கு உதவுவதால், அந்த அமைப்பின் தலைவன் மெண்டிஸ் என்ற சிங்களவன் என்று சொல்கிறார்கள். எப்படி இருக்கு ?

தமிழர்கள் மேல் தொடர் வன்மம் காட்டுவதற்காக  இப்படி எல்லாம்  வெட்டியாக யோசிப்பதற்கு பதில் ஒழுங்காக யோசித்து இருந்தால் நல்ல படமாக எடுத்து இருக்கலாமே .. ஹீரோ ஆன்டனி வர்கீஸே    மற்றும் இயக்குனர் பால் வர்கீஸே 

இந்தப் படத்தில் வெட்டியான ஒரு கவுரவத் தோற்றத்தில் நடித்ததன் மூலம் லோகேஷ் கனகராஜ் என்ன சாதித்தார் என்றுதான் தெரியவே இல்லை. 

காட்டாளன்.. புல் தடுக்கி பயில்வான் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *