Blast @ விமர்சனம்

ஏ ஜி எஸ் என்டெர்டைன்மென்ட்  சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்க, அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா நடிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கி இருக்கும் படம். 

கராத்தே மாஸ்டர் ஒருவர் (அர்ஜுன்) தன் மகளுக்கு சிறு  வயது முதலே கராத்தே சொல்லிக் கொடுத்து – அதோடு , ” பாதிக்கப்படுபவர்கள்   யாராக இருந்தாலும் , அவர்கள் நமக்கு முன் பின் தெரியாதவர்கள் என்றாலும் அவர்கள் பக்கம் நிற்கவேண்டும்” என்று நல்ல விஷயமும் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார். 

அவர்கள் வைத்திருக்கும் மெடிக்கல் ஷாப் ஒன்றை கராத்தே மாஸ்டரின் தம்பி  (விவேக் பிரசன்னா) பார்த்துக் கொள்கிறார் . குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மெடிக்கல் ஷாப்பில்   பணியாற்றுவது உண்டு . 

கராத்தே வீராங்கனை மகள் (பிரீத்தி முகுந்தன்) ‘நியாயம் கேட்கிறேன்’ என்ற பெயரில் பலரையும் பகைத்துக் கொள்வது அம்மாவுக்கு( அபிராமி) பிடிக்கவில்லை.  

கார்ப்பரேட் கம்பெனி முதலாளி  ஒருவன் (ஜான் கொக்கைன்)  ஒரு மலையில் புதைந்து கிடைக்கும், கறுப்புக் கூழாங்கல் என்ற, விலை உயர்ந்த கற்களை வெட்டி எடுக்க திட்டமிடுகிறான். அதற்காக மலையை குடைந்தால் மண் சரிவு ஏற்பட்டு மலைவாழ் கிராமங்கள் மண்ணில் புதைந்து விடும். 

எனினும் அந்த கற்களை எடுத்தல் ஏழாயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்பதால் மக்களைப் பற்றி கவலைப்படாமல் திட்டத்தை நிறைவேற்ற  அமைச்சருக்கு ஆயிரம் கோடி லஞ்சம் கொடுக்க சம்மதிக்கிறான். 

அந்தப் பணத்தை ஹவாலா மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி அதை அமைச்சரின் டிரஸ்ட்டுக்கு  வெள்ளைப் பணமாக அனுப்ப முயலும் அந்த கார்ப்பரேட்  கம்பெனி முதலாளி,  அதற்கான அடையாளச் சீட்டாக,  நூறு ரூபாய் நோட்டு ஒன்றை தனது தம்பி மூலம் கொடுத்து அனுப்புகிறான் . 

அந்த தம்பி போலீசில் துப்பாக்கி சூட்டில் சிக்கி காயத்தோடு தப்பிக்கிறான் . சிகிச்சைக்கு மருந்து வாங்க அவன் ஒரு ரவுடியை அனுப்ப, அந்த  ரவுடி,  மெடிக்கல் ஷாப்பில் கராத்தே வீராங்கனை இருக்கும்போது வம்பிழுக்க, அடிதடியாகிறது. 

கராத்தே மாஸ்டரை ஹெட் மாஸ்டர் என்று நம்பி,  ரவுடியின் கேங்  வீடு புகுந்து  கொல்ல முயல, பதிலுக்கு இவர்கள் இறங்கி அடிக்க,  ஆயிரம் கோடியை வாங்கும் துருப்பு சீட்டான அந்த  நூறு ரூபாயை வைத்திருக்கும் நபர் உட்பட சிலர்   கொல்லப்பட்டு,  கராத்தே  மாஸ்டரின் வீட்டில் புதைக்கப்படுகிறார்கள். 

நூறு ரூபாய் நோட்டை தேடி கார்ப்பரேட் முதலாளி வில்லன் களம் இறங்க, நடந்தது என்ன  ? கராத்தே மாஸ்டர் குடும்பம் தப்பியதா ? மலை கிராமம் காப்பாற்றப்பட்டதா? என்பதே படம். 

பெண் குழந்தைகளுக்கு  தற்காப்புக் கலைகள் கற்றுக் கொடுத்து தைரியமாக வளர்க்க வேண்டியதன் அவசியம், பாதிக்கப்படுபவர்கள் தெரிந்ததவரா  தெரியாதவரா என்று பார்க்காமல் உதவ வேண்டும் என்று தத்துவம்,  மலை கிராமங்களின் பாதுகாப்பு,இப்படி படம் பேசும் அடிப்படை விஷயங்கள் அற்புதமானவை . பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 

மிக அட்டகாசமாக படமாக்கல் செய்து இருக்கிறார் இயக்குனர் சுபாஷ் கே ராஜ்.  
அசத்தலான சண்டைக் காட்சிகள் . சிறப்பாக எடுத்து இருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் ஃபோனிக்ஸ் பிரபு. அதுவும் குடும்பமாக சேர்ந்து ரவுடிகளை  வெளுப்பது, பார்க்கவே நல்லா இருக்கு.

ரவி பஸ்ரூர் இசை பரபரப்பு கூட்டுகிறது. அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு படத்தின்  கமர்ஷியல் தன்மைக்கு  வலு சேர்க்கிறது. படத்தை முடிந்தவரை வேகமாக  கட்டி இழுக்கிறது பிரதீப் ராகவின் படத் தொகுப்பு. 

கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்துக்கு தோற்றம் , நடிப்பு , அடிப்பு என்று எல்லா வகையிலும் பொருந்துகிறார் அர்ஜுன். அட்டகாசமான சண்டைக் காட்சிகளில் ஜொலிக்கிறார் பிரீத்தி முகுந்தன். திலீபன், விவேக் பிரசன்னா கேரக்டர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் சிறப்பு. 

மலை கிராமத்துக்கு என்ன ஆகுமோ என்ற சூழலில் அந்த மலை கிராம மக்களின் வாழ்க்கை முறையை காட்டும் விதத்தில் ஜொலிக்கிறார் இயக்குனர், 

இப்படி பாராட்ட பல விஷயங்கள் இருந்தாலும் படம் துவங்கிய இருபது நிமிடத்துக்குள்ளேயே   மொத்தக் கதையும் புரிந்து விடுகிறது என்பதும்,  படத்தின் நீளம் அதிகம் என்பதும் ஒரு பெரும்  பின்னடைவே.

மொத்தத்தில் blast .. பெரு வெடிப்பும் இல்லை . புஸ்வாணமும் இல்லை.  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *