மதுரை முத்து மூவீஸ் மற்றும் கனவுத் தொழிற்சாலை தயாரிப்பில் மாஸ்டர் மஹீன், பேபி தவியா , வி எஸ் குமார், தாரா ஜகதாம்பாள், ஹரீஷ் மீனாட்சி நடிப்பில் சாமி இயக்கி இருக்கும் படம் அக்கா குருவி .
உலகப் புகழ் பெற்ற ஈரான் இயக்குனர் மஜீத் மஜிதிக்கு அந்த உலகப் புகழைத் தந்த சில்ட்ரென் ஆஃப் ஹெவன் படத்தின் அனுமதி பெற்ற – தமிழுக்கு ஏற்ற விஷயங்கள் கலந்த மறு உருவாக்கம் .

கொடைக்கானல் பள்ளத்தாக்கில் உள்ள பூம்பாறை கிராமத்தில் நேர்மையாக வாழும் ஏழைத் தம்பதியின் (குமார்– தாரா ) பிள்ளைகளான அண்ணன் தங்கை (மஹீன் – தவியா)
ஷூ வுடன் கூடிய சீருடை கொண்ட வெவ்வேறு பள்ளிகளில் படிக்கும் அவர்களில், தங்கையின் ஷூவில் ஏற்பட்ட கிழிசலை தைக்கப் போகும் அண்ணன் அதை தொலைத்து விடுகிறான் . புது ஷூ வாங்க முடியாத நிலை . அப்பாவிடம் தொலைந்ததை சொல்லவும் முடியாத சூழல் . பள்ளியில் ஷூ அவசியம் என்ற கட்டாயம் .
இந்த விஷயம் அவர்கள் வாழ்வில் நடத்தும் நெகிழ்வும் மகிழவுமான பாச விளையாட்டே அக்கா குருவி . ஈரான் படத்தில் இல்லாத அக்கா குருவி கதையை சேர்த்து அதையே படத்துக்குப் பெயராகவும் வைத்து தன்னை நிரூபிக்கிறார் சாமி .

படத்தின் அதி முக்கிய விஷயம் ஒரு ஏழ்மைக் குடும்பச் சிறார்களின் அண்ணன் தங்கை பாசம்.
அழகிய பூம்பாறை கிராமப் பின்னணியில் கவிதை போன்ற காட்சிகளுடன் அதைச் சொல்கிறார் சாமி. படம் முழுக்கவே அந்த அண்ணன் தங்கை பாசம் வியாபித்து நிற்கிறது . எளிமையும் உண்மையுமான படமாக்கலில் மனம் கவர்கிறார் சாமி.
சிறார்கள் இருவரும் மிக சிறப்பாக நடித்துள்ளனர் . பெற்றோர் கதாபாத்திரங்களில் நடித்தோரும் அப்படியே . இளையராஜா ரசிகையாக வரும் மீனாட்சி இளமைக் கவிதை .

ஒரு இடைவேளைக்குப் பிறகு அட்டகாசமான இசை கொடுத்துள்ளார் இளையராஜா . அவரது பல படப் பாடல்கள் பல காட்சிகளில் பின்னணியில் ஒலிப்பதும் சிறப்பு .
உத்பல் நாயனாரின் ஒளிப்பதிவு படத்தை ஓவியம் போல உணர வைக்கிறது. மணிகண்டன் சிவகுமாரின் ஒளிப்பதிவு மாண்டேஜ் தொகுப்புகளில் அசத்துகிறது .
நெகிழவும் மகிழவும் குதூகலிக்கவும் கொண்டாடவும் படத்தில் விசயங்கள் உண்டு.
பெண்ணை வலையில் வீழ்த்த முயலும் நபருக்கான அதிக பட்ச காட்சிகள் , துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருப்
போரின் நடிப்புப் போதாமை என்று, ஒரு சில குறைகள் இருந்தாலும்
ஓர் உலகப் புகழ் பெற்ற படத்தை சிறப்பாக மறு ஆக்கம் செய்ததோடு குழந்தைகள் உலகத்துக்குள் இறங்கி ரசிப்பதற்கான ஒரு நல்ல படமாக வந்திருக்கிறது அக்கா குருவி
மொத்தத்தில் அக்கா குருவி ….. குழந்தைகளுக்கான கூடு