ஐங்கரன் @ விமர்சனம்

காமன் மேன் பட நிறுவனம் சார்பில் பி.கணேஷ் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் குமார் இசை அமைத்துக் கதாநாயகனாக நடிக்க, உடன் மகிமா நம்பியார், சித்தார்த் சங்கர், ஆடுகளம் நரேன் , ஹரீஷ் பெராடி ஆகியோர் நடிக்க, ஈட்டி படத்தின் மூலம் கவனம் கவர்ந்த ரவி அரசு இயக்கி இருக்கும் படம் ஐங்கரன். 

வட நாட்டுக் கொள்ளைக் கும்பல் ஒன்று  தமிழகத்தில் லலிதா ஜுவல்லரி , பிரின்சி ஜுவல்லரி (எழுத்துப் பிழை அல்ல)  உள்ளிட்ட பல நகைக்கடைகளில் துளைத்துப் புகுந்து, ஐம்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களைக் கொள்ளை அடிக்கிறது.  அந்தக் கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கு (சித்தார்த் சங்கர்) இடது கையில் ஆறு விரல்  என்ற துப்பு துலங்குகிறது.  
 
நாமக்கல்லைச் சேர்ந்த நேர்மையும் துடிப்பு  கொண்ட மூத்த காவலர் ஒருவர் ( ஆடுகளம் நரேன்) அது குறித்துத் தீவிரமாக இயங்க , அவரது உயர் அதிகாரி (ஹரீஷ் பெராடி) அதைப் புறக்கணிக்கிறார் . அவமானப்படுத்தப்படும் அந்த நேர்மை அதிகாரி கொந்தளித்துப்போய் காவல் துறையில்  சேர இருக்கும் தன் மகனிடம்( ஜி வி பிரகாஷ் குமார்) மனம் நொந்து பேசுகிறார் . மக்களுக்கு தேவையான பயனுள்ள பல கண்டு பிடிப்புகளை (இரட்டை டேபிள் ஃபேன் முதல் கொண்டு லாரித் தண்ணீரை சீக்கிரம் பிடிக்க ஆரம் வடிவிலான குழாய்கள் பல கொண்ட வட்ட வடிவ சட்டகம் வரை)  வல்லவனான அந்த மகன், அவற்றுக்கான   அறிவு சார் சொத்துரிமைக்காக பதிவு செய்ய முயன்றும் அரசியலும் வட இந்தியக் குரோதமும் அதைத் தடுக்கிறது. 
 
இந்த நிலையில்  கோழிகளுக்கு ரசாயன மருந்தை செலுத்தி கோழிகளைப் பருக்க வைத்து , உடல் நலத்துக்குத் தீங்கான கோழிகளைத் தரும் ஒரு நபருக்கும் காவலர் மகனுக்கும் ஏற்படும் பகை…
 
இன்னொரு பக்கம் வைரத்தைக் கொள்ளையடித்த வடநாட்டுக் கும்பல் அதை  தவறுதலாக  மூடப்படாத ஆழ்துளைக் குழாய் கிணற்றுக்குள் போட்டு விட்டு , அதை எடுக்க , ஒரு குழந்தையைத் தூக்கி அந்த கிணற்றுக்குள் போடும் பஞ்சமா பாதகம் செய்ய , அடுத்து  நடக்கும்  தட தட படபட சுறு சுறு விறு விறு அதிரடி சரவெடி சம்பவங்களும் நெகிழ்வான நிகழ்வுகளும் அர்த்தமுள்ள கிளைமாக்சுமே ஐங்கரன் . 
கொள்ளைக் கதையில் ஆரம்பித்து , நாயகனின் கண்டு பிடிப்பு சம்பவங்கள் பக்கம் வந்து அது போதாதென்று கோழிக்கறி விவகாரத்தில் கொதித்து ..’என்னடா  திரைக்கதை அங்கும் இங்கும் அலைபாய்கிறதே….’  என்று பயந்தால் , மலை உச்சியில்  குண்டும் குழியுமான பாதையில் ஒழுங்கற்ற சாலையில்  குறுகிய  திருப்பங்களில் மிக லாவகமாக சாமர்த்தியமாக  கண்டெய்னர் வண்டியை ஓட்டும்   கில்லாடி டிரைவர் கணக்காக , இரண்டாம் பகுதியில் எல்லாவற்றையும் சரியாக  சேர்த்துக் கோர்த்துப் பிசைந்து  பிணைந்து வனைந்து படத்தை தேர்போல  வடம் பிடித்துக் கொண்டு வந்து  நிலை நிறுத்துகிறார்  எழுதி இயக்கி இருக்கும் ரவி அரசு .   சபாஷ் 
 
நாயகன் பயனுள்ள கருவிகள் கண்டு பிடிப்புத் திறமைக்கும் இயக்குனர் படம் முழுக்க வைத்திருக்கும் காட்சிகள் கருவிகள் அட போட  வைக்கின்றன . உடைந்த சிகரெட்டை பொருத்திக் கொடுக்கும் காட்சியும் உடைந்த  கண்ணாடிக் கடிகாரத்தில்  மீதியை சமன் செய்யும் காட்சியும் ரம்மியம் .  (மறுபாதியை வைத்து கதாநாயகி தானும்   ஒன்று செய்வது போல ஒரு சின்னக் காட்சி வைத்திருந்தால்,  ஒப்புக்கு வரும் கதாநாயகி பாத்திரத்துக்கு ஒரு முழுமை கிடைத்திருக்கும் )
 
அதே போல படம் முழுக்க அடுத்து அடுத்து வரும் சில சடார் சடீர் திருப்பங்கள் அசத்தல் . இயக்குனரின் படைப்பு உழைப்பு பாராட்டுக்குரியது 
ஜி வி பிரகாஷ் குமார் .. ஆகா குமார் ! அநியாயத்துக்கு எதிரான சீற்றம் , தன் படைப்புகளுக்கு உரிய மரியாதை கிடைக்காத போது விரக்தி,  நாயகியிடம் குறும்பு என்று மிக சிறப்பாக நடித்துள்ளார் . சண்டைக் காட்சிகளில் ஒரு படி மேலே போயிருக்கிறார் . டைட்டில் துவங்கி கடைசி வரை ஒரு ரிதமாகவும் காட்சிகளுக்கு ஏற்பவும் ஒலிக்கும் பின்னணி இசை அருமை . பாடல்கள்தான் பெரிதாகக் கை கொடுக்கவில்லை 
 
வில்லனாக நடித்திருக்கும் சித்தார்த் சங்கர்  மிரட்டலாக நடித்துள்ளார் . சம்பவத்தை உண்மை நிகழ்வாக உணர வைப்பதில் இவரது நடிப்புக்கு முக்கியப் பங்கு . வாழ்த்துகள். பாராட்டுகள். 
 
ஸ்டன்ட் மாஸ்டர் ராஜசேகருக்கு  ஒரு ராயல் சல்யூட் . அட்டகசமான சண்டைக் காட்சி அமைப்புகள். சண்டைக்கான ஒலிகள் மிக சிறப்பு.  ஆரம்பத்தில் ஒரு காட்சியில் வில்லன் ஆட்களில் ஒருவர் தரையில் நின்ற படி உயர்ந்து காற்றில் சுழன்று டைவ் அடிப்பதைக் காட்டி விட்டு அதற்கேற்ப கிளைமாக்சில் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கும் வகையிலும் இயக்குனர் ரவி அரசு மிளிர்கிறார் . சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம். . குறிப்பாக பறவைப் பார்வை மற்றும் இரவு  நேரக் காட்சிகளில்  விஸ்வரூபம் எடுக்கிறது ஒளிப்பதிவு . ஆழ் குழாய்க் கிணறு காட்சிகளிலும் பயனுள்ள கண்டுபிடிப்புக் காட்சிகளிலும்  துரைராஜின் கலை இயக்கம் அருமை 
 
ரவி அரசுவும் ஆனந்த் குமரேசனும்  எழுதி இருக்கும் வசனங்கள் அருமை . நாயகன் வில்லன் இரு தரப்புமே பேசும் வசனங்களில் பொருள் அதிகம் . அறம் படத்தின் அடிநாதமாக வந்த வசனத்தையே திருத்தி எழுதி இருக்கிறார்கள். 
 
ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தூக்கும் கருவியின் தரம்  பற்றிய வசனம்  நெஞ்சை நெகிழ்வில் உழுது போடுகிறது . இங்கிலாந்து , நியூட்டன்,   ஆப்பிள் , இந்தியா  போதி மரம் , புத்தன் பற்றிய ஒரு விசயத்தைக் கடைசியில் கூறி தெறிக்க விடுகிறார்  ரவி அரசு . 
 
ஆனால் இப்படி கருத்தியல் கொண்ட ஓர் இயக்குனரின் படத்தில் துஞ்சிய என்ற  சொல் ( தூக்கம் , மரணம் என்று பொருள் படும்  . உதாரணம் கட்டில் துஞ்சினான் – தூக்கம் ./ பிற்காலச் சோழ அரசர்களில் ஒருவரான விஜாயலயச் சோழனுக்கு அமைந்த ‘ யானை மேல்  துஞ்சிய தேவர்’ என்ற பட்டப் பெயர்  – போர்க்களத்தில் இருந்து  அடிபட்டு வரும்போது யானையில் அமர்ந்தபடியே மரணம் அடைந்தவர்  என்று பொருள் ) படத்தில்  துணிந்த என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதும் , 
 
படத்தில் ஒரு இடத்தில் தடை செய்யப்பட்ட பகுதி என்ற அறிவிப்பு தடை செய்யபட்ட பகுதி என்று எழுதப்பட்டு  இருப்பதும் நெருடல் .
 
ஆயினும் அழகியல் ( கொள்ளைக்கரார்களின் கருவி சுவரை உள்புறமாக துளைக்கும் காட்சி) கமர்ஷியல், கருத்தியல்,  என்று எல்லா வகையிலும் கடைசியில் சபாஷ் போட வைக்கிறது படம் 
 
படத்தில் கடைசியில் காட்டப்படும் கண்டு பிடிப்புகளும் அவற்றுக்கு உரிய அனுமதி கிடைக்காத கொடுமையும் கலங்க வைக்கிறது. . அது  இந்தப் படத்தக்கு மேலும் மரியாதை சேர்க்கிறது . 
 
மொத்தத்தில் ஐங்கரன் .. ஏகன் அநேகன் . 
 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
——————————————–
ரவி அரசு,  ஜி வி பிரகாஷ் குமார், சரவணன் அபிமன்யு, ராஜ சேகர், துரைராஜ் 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *