3 S பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து எழுதி சிவா இயக்க, வெற்றி, மதுரா, அனு சித்தாரா விவேக் பிரசன்னா, அருவி மதன், நடிப்பில் வந்திருக்கும் படம் .
இந்த படத்தைப் பொறுத்தவரை ஆலன் என்பது ஈசனைக் குறிக்கும் சொல் .
சிறு வயதில் நடந்த மறக்க முடியாத மோசமான சில சம்பவங்களால் மனம் நைந்து இளம் வயதிலேயே சாமியாராகி காசியில் இருக்கும், கொடைக்கானல் இளைஞன் ஒருவனுக்கு ( வெற்றி) கதை எழுதும் திறமையும் நிறைய,
அதை அறிந்த ஒரு மூத்த சாமியார் ( ஹரீஷ் பெராடி) அவனைத் துறவு வாழ்வில் இருந்து விலக்கி, எழுதச் சொல்கிறார் . மீண்டும் சென்னை வந்து தங்கி எழுதும்போது , தமிழ்க் கலாச்சாரம் மீது ஆர்வம் கொண்டு தமிழகம் வந்து சுற்றிப் பார்க்கும் ஜனனி தாமஸ் என்ற ஜெர்மன் பெண்ணின் ( மதுரா) அறிமுகம் கிடைக்கிறது. அது நட்பாகி காதலாக இளைஞனும் இயல்பு வாழ்க்கைக்கு வர முடிவு செய்த நிலையில்,
எதிர்பாராத ஒரு நிகழ்வு அவனை மீண்டும் காசிக்குத் துரத்துகிறது .
எனினும் தொடர்ந்து எழுதுகிறான். ஜனனி தாமஸ் என்ற பெயரில் அவன் எழுதும் கதைகள் மிகப் பிரபலம் ஆகின்றன . எழுத்தாளன் யார் என்பது யாருக்கும் தெரியாமலேயே.
ஒரு நிலையில் தன் அடையாளத்தை உணர்த்த அவன் மீண்டும் சென்னை வரும்போது, சிறு வயதுக் காதல் ஒன்று மீண்டும் கிடைக்கிறது . நடந்தது என்ன என்பதே படம்.
பெரிதாக திருப்பங்களோ , எதிர்பாராத சம்பவங்களோ இல்லாத திரைக்கதை மற்றும் படம் .
யூகிக்க முடிந்த காட்சிகள்தான்.
ஆனால் சினிமா என்பது கதை மட்டுமல்ல என்பதை உணர்த்தும் வகையில் சொல்ல வந்த காட்சிகளை, அது பழசோ புதுசோ, நோஞ்சானோ, பலசாலியோ… நிறுத்தி நிதானமாக அழுத்தமாகச் சொல்கிறார் இயக்குனர். அது இனிப்பாக இருக்கிறது .
அவருடைய அந்த நிதானத் தெளிவு ஒரு நிலையில் நம்மை அறியாமல் படத்துக்குள் ஈர்க்கிறது . அதனாலேயே சாதாரண அந்த கிளைமாக்ஸ் கூட தாக்கத்தை ஏற்படுத்துகிறது .
தமிழின் மேன்மையை சொல்லும் காட்சிகள் படத்தை மனசுக்கு நெருக்கமாக்குகின்றன.
மனோஜ் கிருஷ்ணா இசை, கார்த்திக் நேத்தாவின் பாடல்கள், விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு , காசி விசுவநாதன் படத் தொகுப்பு ஆகியவையும் தரமும் கனமுமாய் இருக்கின்றன .
காசியை விதம் விதமாக படம் பிடித்து அசத்தி இருக்கிறார்கள் . அதே சிரத்தை கொடைக்கானலிலும் இருக்கிறது .
சண்டைக் காட்சி என்ற பெயரில் சில அரைவேக்காடு காட்சிகளும் உண்டு.
மதுராவும் அனு சிதாராவும் படத்தை அழகாக்குகிறார்கள். (ஒல்லியான அழகு , குண்டான அழகு இரண்டும் பார்வைக்கு கிடைக்கிறது)
தமிழ் சினிமாவிலேயே ரைட்டருக்கு மரியாதை இல்லாத சூழலில் ஒரு ரைட்டரின் கதையை படமாக எடுத்து இருப்பது தைரியம்தான் .
கதையில் சில நல்ல கூறுகள் இருந்தாலும் , சரியான திரைக்கதை இல்லை என்பதுதான் படத்தின் குறை
தமிழ் சினிமாவின் சாம்ராஜ்ய வரலாறு நல்ல feeler (உணர்வாளர்கள்)களாக இருந்த படைப்பாளிகளால் கட்டமைக்கப்பட்டது .
பீம்சிங், கே எஸ் கோபாலகிருஷ்ணன், பாரதிராஜா, பாதி மணிரத்னம், கொஞ்சம் கதிர் போன்ற feelerகளின் படைப்புகளும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உருவாக்கிய படைப்புகளுமே தமிழ் சினிமாவுக்கு பரிணாமப் பரிமாணங்களைத் தந்தன .
ஆனால் அண்மையில் தமிழ் சினிமாவில் feelerகளே இல்லை என்பது வேதனை ( நாடு முழுக்க அதே நிலைமைதான்)
நாம் பாராட்டி வியந்து கொண்டாடுகிற படங்கள் கூட E=mc2 , sin Q/ cos Q = tan Q என்று சமன்பாடுகளாக இருக்கிறதே என்ற வருத்தம் எனக்கு உண்டு.
மழைக்கால இரவில் வெந்நீரில் குளித்து விட்டு போர்வைக்குள் நுழையும் காதலி போல அசத்தி அடிக்கும் காட்சிகள் இப்போது அரிதாகி விட்டன .
அந்த சூழலில் இந்தப் படத்தின் இயக்குனர் ஒரு நல்ல feeler ஆக இருக்கிறார் .
அது சுகமாக இருக்கிறது
