அமரன் 2024 @ விமர்சனம்

கமல்ஹாசனின் ராஜ்கமல் பில்ம்ஸ் இன்டர்நேஷனல்  மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா  மற்றும் மகேந்திரன்  தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராகுல் போஸ், கீதா கைலாசம், புவன் அரோரா, லல்லு, ஸ்ரீகுமார், ஷ்யாம் மோகன் நடிப்பில், ஸ்டீபன் ரிச்சரோடு சேர்ந்து திரைக்கதை எழுதி,  ராஜ்குமார் பெரியசாமி  இயக்கி இருக்கும் படம். 
 

(இதற்கு முன்பே கார்த்திக், பானுப்ரியா, ராதாரவி, இந்தி நடிகர் ஷம்மி கபூர் நடிப்பில் கே. ராஜேஷ்வர் எழுதி தயாரித்து இயக்க 1992 ஆம் ஆண்டு இதே பெயரில் ஒரு படம் வந்திருக்கிறது. அதற்கும் முன்பாக 1958 ஆம் ஆண்டு எஸ் பாலச்சந்தர் இயக்கத்தில் கே ஆர் ராமசாமி, பாலையா நடிக்க ‘அவன் அமரன்’ என்ற படம் வந்திருக்கிறது.) )

சென்னை  தாம்பரத்தில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்து காஞ்சிபுரத்தில் பள்ளிப் படிப்பையும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் டிப்ளமோ இன் ஜர்னலிசமும் படித்து , சென்னை பழவந்தாங்கல் ஆபீசர்ஸ் டிரைனிங் அகாடமியில் ராணுவப்,பயிற்சி பெற்று, 22ஆவது பட்டாலியன்  ராஜ்புத் ரெஜிமெண்ட்டில்  லெஃப்டினன்ட் ஆகி, வெகு விரைவில் கேப்டனாக முன்கூட்டியே பதவி உயர்வு பெற்று, 
 
தனது கல்லூரிக் கால தோழியும் காதலியுமான மலையாளப் பெண் இந்து ரெபேக்கா வர்கீசை மணந்து , ஒரு மகளுக்குத் தந்தையாகி லெபனானில் யுனைடட் நேஷன்ஸ் மிஷனில் பணியாற்றி,  , மேஜராகப் பதவி உயர்வு பெற்று, 44 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் பிரிவில்  காஷ்மீரில் பணியமர்த்தப்பட்டு, ஒரு முக்கியத் தீவிரவாதியை சுட்டுக் கொன்று, 
 
காஷ்மீர் மக்களிடையே கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தி,இன்னொரு தீவிரவாதியை பிடிக்கும்போது சுடப்பட்டு,  வீர மரணம் அடைந்த …. முக்கியமாக இவற்றை எல்லாம் முப்பத்தி ஒரு வயதுக்குள் செய்த , 
 
மேஜர் முகுந்த் வரதராஜன்- தி கிரேட்,   அவர்களின் வாழ்க்கையைப் பற்றி, பத்திரிக்கையாளர் ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய  India’s Most Fearless: True Stories of Modern Military Heroes என்ற நூலின் அடிப்படையில்,  எடுக்கப்பட்டிருக்கும் அற்புதமான படம். 
 
முகுந்தின் மனைவி  இந்து ரெபேக்கா வர்கீசின் பார்வையில் விரியும் படம் . 
 
அவர்களின் காதல்…  அதற்கு முதலில் சற்றே மறுத்த முகுந்தின் அம்மா ஒத்துக் கொண்டது… முகுந்த் இராணுவத்தில் சேர்வதை விரும்பாத அவரது அம்மாவும் இந்துவும் பின்னர் ஏற்றுக் கொண்டது…இந்துவின் அப்பாவான மலையாளி, ” மிலிட்டரிக்காரனுக்கு பெண் தரமாட்டேன்” என்று மறுத்தது… இந்துவின் அண்ணன் முகுந்தை ”பாண்டி நாயே…” என்று திட்டியது…  முகுந்த் பதவி உயர்வு பெற்ற பின்னரும்  அவர்கள் மறுக்க,  முகுந்தின் அப்பா அம்மாவோடு வந்து இந்து தங்கியது…. பின்னர் திருமணம், குழந்தை…   
 
லீவு கிடைக்கும்போது மட்டும் வாழக் கிடைக்கும் அவர்களது காதல் மற்றும் கல்யாண வாழ்க்கை…ஏக்கம், தியாகம்….முகுந்தின் மரணத்தை இந்துவும் முகுந்தின் பெற்றோரும் எதிர்கொண்ட விதம்  என்று, 
 
 கனமும் நெகிழ்வும் சிலிர்ப்புமாகப் போகிறது படம். 
 
அருமையான இயக்கம் மற்றும் படமாக்கலால் ராணுவக் காட்சிகள், பயிற்சி மற்றும் போர்க் களங்கள் இவற்றை கண் முன்னால் நிறுத்தி இருக்கும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி , இன்னொரு பக்கம் காதல் குடும்பக் காட்சிகளிலும் மிகச் சிறப்பாகப் படத்தை உருவாக்கி இருக்கிறார் . கடுமையான பணியிலும் நேர்த்தி ஜொலிக்கிறது. குறிப்பாக மேஜர் சரவணன் பற்றிய ரெஃபரன்ஸ் அதற்கு உதாரணம் . 
 
ஒரு உண்மை வரலாற்றை படமாக எடுக்கும்போது தரவுகளுக்காக உழைப்பது மிக அவசியம். அதே போல உண்மைக்குப் புறம்பாகப் போய்விடாமல் அதில் கற்பனை சுவாரஸ்யங்களைக் கலப்பது முக்கியம் . அதை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குனர். 
 
ஹெய்ல் ராஜ்குமார் பெரியசாமி !
 
கணவனுடன் போனில் பேசிக் கொண்டு இருக்கும்போது மறுமுனையில் துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்க ஆரம்பிக்க, ”என்ன ஆச்சு..” என்று போனில் மனைவி பதறிக் கதறி அலறித் துடிக்க, பெரும் சண்டைக்குப் பிறகு  ”எனக்கு ஒன்னும் இல்ல..”  என்று கணவன் போனில் சொல்ல,  மனைவி வெடித்து அழுது உருகி பின்னர் நிம்மதி அடைந்து இயல்பாகும் காட்சி…  ராணுவப் பின்னணியை உணராதவர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒன்று . 
 
கணவன் மீதான ஏக்கத்தில் தூக்கமே வராமல் சிரமப்பட , ஒரு நிலையில் இருவரும் போனில் வீடியோ காலை ஆன் செய்து வைத்து விட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டபடியே தூங்கும் பழக்கத்துக்குப் போவது காவியமான காட்சி என்றால் , அந்தப் பழக்கம் காரணமாக நன்றாகத் தூங்கப் பழகும் மனைவி, கணவன் இறந்த செய்தி சொல்ல பலமுறை போன் அடித்தும் எடுக்க முடியாமல் தூங்கும் காட்சியும் அப்புறம் நடக்கும் நிகழ்வுகளும் மனதை சுக்கு நூறாக்குகிறது . 
 
இப்படி படம் முழுக்க பல நெகிழ்வும் கனமுமான தருணங்கள் கொட்டிக் கிடக்கிறது . 
 
சபாஷ் சிவகார்த்திகேயன் !
 
தோற்றம், உழைப்பு, உடல் மொழிகள், குரல் நடிப்பு என்று எல்லாவற்றிலும் பல படிகள் உயர்ந்து இருக்கிறார் . காமெடி கதாநாயகனில் இருந்து ஆக்ஷன் பக்கம் வந்ததற்கு முதன் முதலில் சிவகார்த்திகேயன் நியாயம் செய்து இருக்கும் படம் இது . 
 
மாபெரும் பங்களிப்பு . 
 
சந்தேகம் இல்லாமல் நடிப்பில் சிவகார்த்திகேயன் மேஜர்தான் என்றால்,   சாய்பல்லவி  ஃபீல்டுமார்ஷல் . 
 
அடேயப்பா .. என்ன ஒரு அற்புதமான நடிப்பு ! சாதரணமாக இன்றைய ஒரு நடிகை எதிர்கொள்ளச் சிரமமான  பல கனமான காட்சிகள் இந்தப் படத்தில் உண்டு. ஆனால் அவற்றை அட்டகாசமாக செய்து பிரம்மிக்க வைக்கிறார் சாய் பல்லவி. 
 
மென் புன்னகை , வெடித்து அழும் காட்சிகள்  என்று இரண்டு துருவக் காட்சிகளுக்கும் அவர் கொடுத்து இருக்கும் நடிப்பு பிரம்மாதம் . சர்ப்ரைசாக  வந்து மொட்டை மாடியில் நிற்கும் கணவனை ஓடி வந்து கட்டிப் பிடிக்கும் ஒரு காட்சி உட்பட பல காட்சிகளில் அவர் கொடுத்து இருக்கும் நடிப்பில் ஒரு துளி கூட சாய் பல்லவியைப் பார்க்க முடியவில்லை. நூறு பர்சன்ட் இந்து ரெபக்கா வர்கீசாக கூடு விட்டுக் கூடு பாய்ந்திருக்கிறார் .
 
இந்தப் படம் ஒரு நெகிழ்ச்சி  கானம் என்றால் அதன் பல்லவியே , சாய் பல்லவிதான் 
 
நடிப்பு தேவதை .  
 
ஜீவி பிரகாஷின் இசை காட்சிக்கு ஏற்ப புல்லாங்குழலாகவும் பாடுகிறது. ஜெய பேரிகையாகவும் முழங்குகிறது . இந்தப் படத்துக்கு ஜி வி பிரகாஷின் இசை பெரும்பலம். 
 
சம்பவம் நடக்கும் இடங்களுக்கும் நம்மை கூட்டிப் போகிறது ; துப்பாக்கிக் குண்டுகளுக்கு இடையே மட்டுமின்றி கண்ணீர் நிறைந்த கணவன் மனைவி அணைப்புகளுக்கு அருகிலும் நம்மை கூட்டிப் போய் நிறுத்துகிறது சி ஹெச் சாய் செய்திருக்கும் ஒளிப்பதிவு. 
 
ஆக்ஷன் காட்சிகளுக்கான தெறிப்பு , பாசக் காட்சிகளுக்கான குழைவு இரண்டும் தெரிகிறது கலைவாணனின் படத்தொகுப்பில். 
 
ஆக்ஷன் காட்சிகளும் சிறப்பு 
 
சறுக்கிய ஒரே இடம் திரைக்கதைதான் . பல இடங்களில் இடை இடையே நாம் பார்ப்பது சினிமா என்ற உணர்வை தந்து விடுகிறது திரைக்கதை.  நீளத்தைக் குறைத்து இன்னும் கொஞ்சம் வேகப்படுத்தியும் இருக்கலாம் . 
 
தீவிரவாதி நிராயுதபாணியாகக் கிடைக்கும் நிலையில் அவனை கைது செய்யாமல் ஏன் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது . 
 
எனினும், மொத்தத்தில் அமரன் … ஆட்கொள்கிறான் . 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
——————————————-
ராஜ்குமார் பெரியசாமி, சாய் பல்லவி , சிவ கார்த்திகேயன், ஜிவி பிரகாஷ் குமார் , 
 
வருத்தமான பின் குறிப்பு 
—————————————-
கடைசியாக 2014 பொங்கலுக்கு சென்னை வந்த முகுந்த் வரதராஜன் , மனைவி பிள்ளைகளோடு சென்னையில் இருந்தபோது, ஜில்லா மற்றும் வீரம் படங்களைத்தான்  பார்த்து விட்டுப் போய், அடுத்த மூன்றே மாதத்தில் வீர மரணம் அடைந்திருக்கிறார் . அப்பேர்ப்பட்ட மனுஷனுக்கு கடைசியாகப் பார்ப்பதற்கு ஒரு நல்ல படத்தைக் கூட கொடுக்கவில்லையே …. இந்தப் பாவத்தை   எப்படிக் கழுவுவது? 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *