ராக்கெட் டிரைவர் @ விமர்சனம்

ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்க, விஷ்வத், சுனைனா, நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி,ஜெகன் , ராமச்சந்திரன் நடிப்பில் ஸ்ரீராம் ஆனந்த் சங்கர் எழுதி இயக்கி இருக்கும் படம். 

ரோட்டோர டிபன் கடை வைத்திருக்கும் அப்பா,  ஒழுங்கா படிக்க வைத்து ஒழுங்கான வேலையும் வாங்கித் தரவில்லை என்ற கோபத்தோடு ஆட்டோ ஓட்டிக் கொண்டு,  வழக்கமான வாழ்க்கை நிகழ்வுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் இளைஞனின் ( பிரபா) ஒரே ஆறுதல் அவனது தோழியும் டிராபிக் கான்ஸ்டபிளுமான கமல் ( சுனைனா) தான். 
 
முன்னாள் பாரத குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியும் தகைசால் தமிழருமான ஏ பி ஜே அப்துல் கலாம் அய்யாவின் அபிமானியான  அவனது வாழ்வில் ஒரு நாள் , டீன் ஏஜ் வயது அப்துல்கலாம்  ( நாகா விஷால்) கால எந்திரம் ஏறி வந்து , அவனிடம் உதவி கேட்கிறார் . 
 
டிரங்குப் பெட்டி , அன்றைய சென்னைப் பல்கலைக்கழக டீன் அறிவழகன் அனுப்பிய கடிதம் , ஆட்டோ சார்ஜ் ஆக நாலணா காசு என்று வந்திருக்கும் அப்துல் கலாமை முதலில் யார் என்றே புரிந்து கொள்ளாமல்  குழம்பி, பிறகு புரிந்து வியந்து , கமலையும்  நம்ப வைத்து , இன்றைய சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு அழைத்துப் போய் பலரின் கிண்டலுக்கு ஆளாகி , ஒரு நிலையில் வந்த படியே பஸ்ஸில் அனுப்பினால் கால எந்திரத்தில் அவரே போய் விடுவார் என்று முயன்று,  முடியாமல் தோற்று, டீன் ஏஜ் கலாமுடன் ராமேஸ்வரத்தில் இறங்கி, 
 
கால எந்திரம் வழியே விஞ்ஞானி கலாமோ , ஜனாதிபதி கலாமோ வராமல் டீன் ஏஜ் கலாம் வந்தது எதற்கு என்பதைக் கண்டு பிடித்து … வியந்து நெகிழ்ந்து சிலிர்த்து உருகும் ஒரு கதை சொல்லி முடிக்கிறது படக் குழு . 
 
அருமை . 
 

வெட்டியா நூறு கோடி செலவு வச்சாலும் வைப்பேனே  தவிர கதைக்கு ஒத்த பைசா செலவு செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு வீட்டை விட்டுக் கிளம்பும் சினிமாக்காரர்கள் மலிந்த நம்ம சினிமாவில்..

பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு கதையை எடுத்துக் கொண்டு பஞ்ச கால பாணியில் செலவு செய்து இந்தப் படத்தை எடுத்து இருக்கிறார்கள். ஸ்ரீராம் ஆனந்த் சங்கர் ,அக்ஷய் பூலா, பிரஷாந்த் மூவருக்கும் வாழ்த்துகள். 
 
படாடோபம் , பளபளப்பு .பசப்பல், பம்மாத்து , ஜிகினாத்தனம் , எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் ,  எதுவும்  இல்லாமல் நேர்மையாக எழுதி எடுத்து இருக்கிறார்கள் 
 
வித்தியாசமான கதை கிடைத்த சந்தோஷத்தில் கொஞ்சம் கூட பதறி விடாமல், அடிப்படைக் கதைக்குள் இருந்து சற்றும் விலகாமல் காட்சிகளை எழுதி எடுத்து இருக்கிறார்கள் . 
 
அப்துல் கலாம் அய்யாவின் வாழ்க்கைச் சம்பவங்களில் இருந்து தூண்டப்பட்டு உண்மையின் எல்லை மீறாமல் படத்தின் காட்சிகள் வருகின்றன. 
 
கலாம் அய்யாவின் டீன் ஏஜ் கேரக்டர் மீது அளவான சரியான சீண்டலோடு கூடிய உரிமை எடுத்துக் கொண்டு அதே நேரம் அவரின் மாண்பு கெடாமல் காட்சிகள் போகின்றன. 
 
கால எந்திரம் வருகை தொடர்பான காட்சிகளில் அறிவியல் ரீதியான எந்த படமாக்கலும்  கூட இல்லாமல் சாதரணமாக எடுத்தே நம்மை ஏற்கவும் நம்பவும் வைக்கிறார்களே .. அந்த எளிமைதான் இந்தப் படத்தின் ஆன்மா 
 
ரெஜிமல் சூர்யா தாமசின் ஒளிப்பதிவு அதற்கு முக்கியக் காரணம் . கவுசிக் கிரிஷ் இசையும்,  இனியவன் பாண்டியனின் படத்தொகுப்பும் பாராட்டுக்குரியவையே.  
 
திரைக்கதை, படமாக்கல் இவற்றிலும்   தொழில்நுட்ப ரீதியாகவும் சில  போதாமைகள் இருந்தாலும் அந்த ஏழைக்கேத்த எள்ளுருண்டையை அவ்வளவு சுவையாக சமைத்துக் கொடுத்து இருக்கிறார்கள் . 
 
எல்லோருமாய் எளிமையாக சிறப்பாக நடித்துள்ளனர் . விஸ்வத் இயல்பாக நடிக்கிறார் . 
 
டீன் ஏஜ் கலாம் கேரக்டரை உணர்ந்து பொறுப்போடு நடித்திருக்கிறார் நாகா விஷால் . சாஸ்திரி கேரக்டரில் அசத்தி இருக்கிறார் காத்தாடி ராமமூர்த்தி . எளிய குடிலில் ஒளிதரும்  வெள்ளிக் குத்து விளக்காக ஜொலிக்கிறார் சுனைனா 
 
படைப்பாளிகள் நடிகர்கள் அனைவருக்கும் எனது அன்பு முத்தங்களும் ஆரத் தழுவல்களும் . ( சுனைனாவுக்கும்தான் . பின்னே, கிடைக்கிற சான்சை மிஸ் பண்ண முடியுமா?) 
 
கோடி கோடிகளைக் கொட்டி செவ்வாய் கிரகத்தில் இருந்து எல்லாம் நடிகர்களைக் கொண்டு வந்து எடுக்கப்படும் படங்கள் தராத திருப்தியை இந்தப் படம் தருகிறது. 
 
நல்ல தொழில் நுட்பத் திறமையும் தியேட்டர் ரசிகர்களை ஈர்க்கும்படியான திரை எழுத்து அறிவும் கொண்ட ஒருவர், ஒரே ஒருவர்  உள்ளே இருந்திருந்தால்கூட  இந்தப் படம் போயிருக்க வேண்டிய உயரமே வேறு. 
 
எனினும் நல்ல ரசனை அறிவு கொண்ட ஒருவரால் இப்போதும் அந்த உயரத்தை,  படம் பார்க்கும்போது உணர முடியும். 
 
மொத்ததில் ராக்கெட் டிரைவர் .. ஆகாயம்  
 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
——————————————-
ஸ்ரீராம் ஆனந்த் சங்கர் , அனிருத் வல்லப், நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி, விஷ்வத்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *