விஜய் சேதுபதி, ரித்திகா சிங், நாசர் ஆகியோர் நடிப்பில்
மணிகண்டன் இயக்கி இருக்கும் படம் ஆண்டவன் கட்டளை
காக்கா முட்டைக்குப் பிறகு குற்றமே தண்டனை என்ற வித்தியாசமான படத்தைக் கொடுத்த மணிகண்டன்,
“மீண்டும் இன்னொரு வித்தியாசமான படத்துடன் வருகிறேன் ” என்கிறார்
“கிராமத்தில் இருந்து சென்னை வரும் ஒருவனுக்கு இந்த நகரம் என்ன செய்தது ? என்ன கற்றுக் கொடுத்தது ?
அதனால் என்ன என்ன நடந்தது ? என்பதுதான் படம் சொல்ல வரும் அடிப்படைப் பார்வை .
கிராமத்தில் சென்னை வந்து வெளிநாடு போக விரும்பும் ஓர் இளைஞனுக்கு
பாஸ்போர்ட்டில் ஒரு விசயத்தை மாற்றிச் சொல்ல வேண்டி இருக்கிறது.
அது தப்பு என்று அவன் தயங்கினாலும்
‘அனுபவசாலிகள்’ அவனிடம் ‘இதெல்லாம் வழக்கமா பண்ற ஒண்ணுதான் ‘ என்று சொல்லி,
சம்மதிக்க வைக்கிறார்கள்.
ஆனால் அவனுக்கு அப்படி அமையவில்லை . அந்த சிறு தப்பு மேலும் மேலும் தவறுகளுக்கு வழி வகுக்கிறது .
(அதாவது , எலியை ஒழிக்க பூனை வாங்கிய சாமியார் ஒரு நிலையில்
பொண்டாட்டி கட்டி துறவறத்தையே கை விட்ட மாதிரி ?)
எண்ணிக்கையிலும் அளவிலும் பெருகும் தவறுகள் ஒரு நிலையில்,
அவனை எங்கே கொண்டு போய் நிறுத்துகின்றன என்பதே இந்தப் படம் .
அந்த இளைஞன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் .
சிவாஜி சார் நடித்த ஆண்டவன் கட்டளை படத்தின் தலைப்பு இந்தப் படத்தின் கதைக்கு மிக பொருத்தமாக இருந்ததால் ,
முறைப்படி அனுமதி பெற்று வைத்தோம்.
ரித்திகா சிங் பத்திரிக்கையாளராக நடிக்கிறார் .
படத்தில் நல்ல பத்திரிக்கையாளர்களையும் காட்டுகிறேன்.
தவறான பத்திரிக்கையாளர்களையும் காட்டுகிறேன்.
பல ஒண்டுக் குடித்தன வீடுகளின் உரிமையாளரின் கெத்து ,
அங்கு உள்ள வாடகைக்காரர்களின் நிலைமை என்ற ஒரு களம் இருக்கிறது .
படம் பெரும்பகுதி சென்னையிலேயே எடுக்கப்பட்டது . வேலூரில் கொஞ்சம் எடுக்கப்பட்டது.
படத்தில் ஐந்து பாடல்கள் . ஐந்தும் எல்லோருக்கும் பிடிக்கும் .
தவிர பின்னணி இசையின் பகுதிகளையே ஒரு பாடலுக்கான மெட்டு போல அமைத்து இருக்கிறோம்
அந்த வகையில் படத்தில் ஒன்பது பாடல்கள் என்றே சொல்லலாம் .
காக்கா முட்டையும் குற்றமே தண்டனையும் எப்படி சம்மந்தமில்லாத இரண்டு வேறு வேறு களங்களோ,
அது போல இந்த ஆண்டவன் கட்டளை முற்றிலும் வேறு மாதிரியான படம் .
எனது அடுத்த படமான கடைசி விவசாயியும் மற்றுமொரு புதிதான களத்தில்தான் அமைகிறது .” என்கிறார் மணிகண்டன்
“படத்தை வரும் பதினாறாம் தேதி திரைக்கு கொண்டு வருகிறோம். ” என்கிறார்,
படத்தை வாங்கி வெளியிடும் ஸ்ரிகிரீன் புரடக்ஷன்ஸ் எம் எஸ். ஷரவணன் .