
தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன்ஸ் தயாரிக்க, அவுரா பிலிம்ஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிட,
விக்ரம் (இருவேடம்) நயன்தாரா , நித்யா மேனன் , நாசர், தம்பி ராமையா நடிப்பில் ஆனந்த ஷங்கர் இயக்கி இருக்கும் படம் இரு முகன் .
இவன் வெறும் முகனா ? திருமுகனா ? பார்க்கலாம் .
சர்வதேச போதைப் பொருள் மற்றும் போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் கடத்தல் மாஃபியாவின் தலைவனான லவ் என்பவனை,
இந்திய ரா உளவுப் பிரிவு அதிகாரியான அகிலனும் (நாயகன் விக்ரம்) கணிப் பொறிப் புலியான அவன் மனைவி மீராவும் (நயன்தாரா ) சேர்ந்து
வெடி வைத்துத் தகர்த்துக் கொல்கிறார்கள். .
ஆனால் இதன் எதிர்வினையாக , அந்த போதைப் பொருள் கும்பலின் மூலம் மீரா துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டு மலை உச்சியில் இருந்து பள்ளத்தில் விழுந்து போகிறாள் .
மனம் வெறுத்த அகிலன் உளவுப் பிரிவில் இருந்து விலகிக் காணாமல் போகிறான் ,
இது நடந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு வேறொரு விபரீதம் துவங்குகிறது
உலகப் போரின் போது படை வீரர்களுக்கு மிருக வெறி வருவதற்காக ஹிட்லர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஸ்பீட் என்ற ஊக்க மருந்தை மீண்டும் தயாரிக்கிறது ஒரு கும்பல் .
ஆஸ்துமா நோயாளிகளுக்கான இன்ஹேலர் மூலம் இந்த மருந்தை வாய்க்குள் செலுத்திக் கொண்டால் , அதன் மூலம் மூளைக்குள் அட்ரினலின் அதிகம் சுரந்து , பய உணர்ச்சி எல்லை கடந்து ,
எதிரில் இருப்போர் எல்லாம் தன்னை கொல்ல வருபவர்களாகவே தெரிய , தன்னை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் உடல் முறுக்கேறி தினவெடுத்து ராட்சஷ பலம் வரும் .
அடுத்த அஞ்சு நிமிடத்துக்குள் நூறு பேரைக் கூட அடித்தே கொல்லும் பலம் வரும் ( என்று படத்தில் சொல்கிறார்கள் )
அப்படி ஒரு சாம்பிளுக்காக
மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஸ்பீட் மருந்து எடுத்துக் கொண்டு நுழையும் ஒரு முதியவர் ஐந்து நிமிடத்தில் தூதரகத்தையே துவம்சம் செய்கிறார் .
அதன் மூலம் உலகுக்கு டெமோ காட்ட , பல்வேறு தீவிரவாத கும்பல்கள் அந்த மருந்துக்கு ஆர்டர் கொடுக்கின்றன
மலேசியா தூதரகம் துவம்சம் செய்யப் பட்டதன் வீடியோ பதிவைப் பார்க்கும் ரா அமைப்பின் அதிகாரியான ஆருஷி (நித்யா மேனன் ) இதன் பின்னணியில் ‘லவ்’ இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார்
அகிலன் வந்தால்தான் இதை சரியாக செய்ய முடியும் என்று ரா பிரிவின் தலைமை அதிகாரி (நாசர்) முடிவு செய்கிறார் . அகிலனை தேடிப் பிடித்து உருவேற்றுகிறார் .
தன்னால் ‘கொல்லப் பட்ட’ அகிலன் உயிரோடு இருக்கிறான் என்பதை ஜீரணிக்க முடியாத அகிலன் , தன் மனைவியைக் கொன்ற அவனை முற்றாக ஒழிக்கும் வெறியோடு மீண்டும் பணியில் சேர்கிறான் .
ஆருஷியோடு சேர்ந்து மலேசியா சென்று பல நபர்களின் வழியே ஊடுருவி, திருநம்பியான ‘லவ்’வை ( வில்லன் ‘ விக்ரம் ) சந்திக்கிறான்.
அங்கே ‘இறந்து போன’ தனது மனைவி மீரா ,’லவ்’வின் முக்கிய உதவியாளராக, அடிக்கடி ‘ஸ்பீட்’ எடுத்துக் கொண்டு தனது கணிப்பொறித் திறமையின் மூலம் லவ் வுக்கு பெரும் பலமாக இருக்கிறாள் .
தவிர அகிலனையே அடித்து வீழ்த்துகிறாள் .
எல்லா தீயரவாதிகளுக்கும் அனுப்ப வேண்டிய மருந்துகளை தயார் செய்யும் லவ் அவற்றை அனுப்புவதற்கான கடைசி கட்ட ஏற்பாடுகளை செய்கிறான்.
அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த இரு முகன் .
படத்தின் ஈர்ப்பு மையமே, லவ் ஆக நடிக்கும் வில்லன் விக்ரமின் முக பாவனைகள் , உடல் மொழிகள், தோற்றம் , கெட்டப் , பிஹேவியர் இவைதான் .
இன்னொரு பக்கம் அகிலன் கதாபாத்திரத்தின் மூலம் மனைவியை இழந்த விரக்தி, வேலைக்கு வந்த பிறகு காட்டும் தீவிரம் , கவனமான அலட்சியத்தை வெளிப்படுத்தும் விதம் ….
எல்லாமே அபாரம . இருமுகன் என்று சொல்லிக் கொண்டாலும் அதற்குள்ளும் பல முகங்கள் காட்டுகிறார் .
தான் எப்போதுமே ஒரு காதலுக்குரிய கலைஞன் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் விக்ரம் . சபாஷ் கென்னி !
அடுத்து நயன்தாராவின் குறையாத … அல்லது குறையவில்லை என்று நம்பப் படுகிற கவர்ச்சி . ஆனாலும் ஏ டி எம் வழியாக குறையும் பேங்க் பேலன்ஸ் மாதிரி , அது காலி ஆவதும் தெரிகிறது
நுண்ணிய எக்ஸ்பிரஷன்கள் மூலம் அடிக்கடி வாவ் சொல்ல வைக்கிறார் நித்யா .
படமாக்கலில் அசத்துகிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர்.
பாடல்களில் பலன் இல்லை என்றாலும் பின்னணி இசையில் சமாளிக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ் . ராஜ சேகர்…. ராஜ ஒளிப்பதிவு .
பின்னிப் பெடல் எடுக்கிறார் சண்டை இயக்குனர் அன்பறிவ்.
கமல்ஹாசன் நடித்த விக்ரம் உள்ளிட்ட பல படங்களை நினைவு படுத்தும் வழக்கமான திரைக்கதைப் போக்கை தவிர்த்து இருக்கலாம் . நயன்தாரா உயிர் தப்பிய காரணத்தை புதுசாக யோசித்து இருக்கலாம் .
ஒரு பெண்ணை செத்து விட்டார் என்று சொல்லி விட்டு பிளாஷ்பேக்கில் உடனடியாக டூயட் ஆரம்பிப்பது எல்லாம் மிக குழந்தைத்தனமான திரைக்கதை மற்றும் டைரக்ஷன் உத்தி .
நயனுக்கு இருக்கும் கிரேஸ் காரணமாக அந்த பாட்டு தப்பிக்கிறது .
இப்படி எல்லாம் இல்லாமல் கதை திரைக்கதையில் நிறைய முயன்று இருந்தால் இருமுகன் இன்னும் கூட அரும் முகனாக வந்து இருக்கும் .