பவன் சாதினேனி , வசந்த் ஜர்ரூ இருவரும் எழுதிய கதைக்கு குன்னம் கங்காராஜு மற்றும் வசந்த் ஜர்ரூ இருவரும் எழுதிய திரைக்கதையில், பவன் சாதினேனி இயக்கிய ஆகாசமலோ ஒக தாரா என்ற தெலுங்குப் படத்தின் தமிழ் மொழி மாற்று வடிவம் இது.
விண்வெளியில் ஆராய்ச்சிகளை முடித்து விட்டு 2003-ஆம் ஆண்டு பிப்ரவரி 1- அன்று, பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்த ‘கொலம்பியா’ விண்வெளி ஓடம் பூமியின் வளி மண்டலத்திற்குள் மீண்டும் நுழையும் போது, வெப்பம் அதிகமாகி சிதைந்து போனது; இந்த விபத்தில் அதில் பயணித்த ரிக் டி. ஹஸ்பண்ட் (கமாண்டர் ) , வில்லியம் சி. மெக்கூல் (விமானி) , மைக்கேல் பி. ஆண்டர்சன் ( கலத்தின் எடை மதிப்பீட்டு கமாண்டோ ) , கல்பனா சாவ்லா (விண்வெளிப் பணி நிபுணர்) , டேவிட் எம். பிரவுன் (விண்வெளிப் பணி நிபுணர்) • லாரல் பி. கிளார்க் (விண்வெளிப் பணி நிபுணர்) , இலான் ரமோன் ( எடை மதிப்பீட்டு நிபுணர், இஸ்ரேலின் முதல் விண்வெளி வீரர்) ஆகிய ஏழு விண்வெளி வீரர்களும் உயிரிழந்தனர்.
இவர்களில் கல்பனா சாவ்லா இந்தியாவில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்று நாசாவில் பணி புரிந்தவர். அந்த கல்பனா சாவ்லாவை இன்ஸபிரேசனாக கொண்டு , எழுதப்பட்ட கதை திரைக்கதையே இந்தப் படம்
பெண் பிள்ளைகளுக்கு படிப்பு எதற்கு என்ற எண்ணம் கொண்ட அப்பனுக்கு- அடிப்படை வசதி கூட இல்லாத பள்ளிக்கூடம் உள்ள ஊரில் பிறந்து , ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் கல்பனாவுக்கு, ஒரு நாள் பள்ளியில் விசிட்டிங் ஆசிரியர் பாஸ்கர் (நாசர்) திரையிட்டுக் காட்டிய, ஆகாயம் பற்றிய திரைப்படப் பாடம், மனதை ஈர்க்கிறது . அவளுக்கும் விண்வெளி வீராங்கனை ஆக ஆசை வருகிறது. அவளிடம் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் புகைப்படம் ஒன்றை பாஸ்கர் கொடுக்க , ஆர்வம் லட்சியமாகிறது.
பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதக் கூடாது என்று, குடித்து விட்டு தன்னையும் அம்மாவையும் அடிக்கும் அப்பாவை சமாளித்து, தேர்வு எழுதி முடிக்கும் கல்பனா (சாத்விகா வீரவல்லி), பத்தாவது வகுப்பில் மாவட்டத்தில் நல்ல மதிப்பெண் வாங்குகிறாள்.
ஆனாலும் அதைப் புறக்கணித்து விட்டு, கடன் வாங்கி நாலு லட்சம் வரதட்சணை கொடுத்து மகளைத் திருமணம் செய்து கொடுக்கிறார் அப்பா.
அப்பா போல அங்கே ஒரு நாத்தனார் (சுவாசிகா) . ஆனால் கணவன் கிருஷ்ணா ( துல்கர் சல்மான்) நல்லவன். மனைவியின் மதிப்பெண் விஷயம் தெரிந்து அவளை மேலே படிக்க வைக்க விரும்புகிறான் .
இரண்டு குடும்பமும் எதிர்க்க, பட்டணத்துக்கு அழைத்து வந்து வீடு எடுத்து, அவன் ஒரு கார் கம்பெனியில் மெக்கானிக் வேலை பார்த்துக் கொண்டு , அவளைப் படிக்க வைக்கிறான்.
திருவனந்தபுரம் இஸ்ரோவில் அவளைப் படிக்க வைக்க பணம் போதாத நிலையில் அவளை ஹாஸ்டலில் தங்கிப் படிக்க வைத்து விட்டு, குஜராத் நிலக்கரி சுரங்கத்தில் லீவே இல்லாமல் லாரி ஓட்டும் கடுமையான பணிக்கு நான்கு வருட காண்ட்ராக்டில் போகிறான்.
கல்பனாவும் சிறப்பாக கற்றுக் கொண்டு, ராக்கெட் எரிபொருள்களுக்கான வழக்கமான முறைகளில் புராஜக்ட் செய்யாமல், மிக சரியான — ஆனால் இது வரை வெற்றியடையாத ஒரு முறையில் புராஜக்ட் செய்கிறாள்.
அவளது புராஜக்ட் உட்பட பத்து புராஜெக்டுகள் வானில் பரிசோதித்துப் பார்க்கப்படும் நாளும் வருகிறது.
குஜராத்தில் சுரங்கத்தில் வேலை பார்க்கும் கிருஷ்ணாவை அந்த ஊரைச் சேர்ந்த பிஜிலி என்ற பெண் (ரூஹானி சர்மா) காதலோடு நெருங்க , அவளிடம் தன்னைப்பற்றி சொல்லும் பிளாஷ்பேக்காக இதுவரையிலான கதை சொல்லப்பட ,
புராஜக்ட் பரிசோதனை நாளுக்கு கிருஷ்ணாவும் கிளம்பி வர, கல்பனாவின் புராஜக்ட் படுதோல்வி அடைந்து விடுகிறது. வேலை பறிபோகிறது.
விண்ணில் பறக்கும் ஆர்வத்தை விட்டுவிட்டு, அதுவரை பணியாற்றிய அனுபவத்தை வைத்து மாச சம்பளத்தில் ஒரு நல்ல வேலை வாங்கி கொண்டு கணவனுக்கு சமைத்துப் போட்டு -, உள்ளுக்குள் ஏக்கமாகவும் வெளியே சந்தோஷமாகவும் கல்பனா வாழ, கிருஷ்ணாவுக்கு அது புரிகிறது.
சொந்தமாக ராக்கெட் ப்ராஜக்ட் நடத்தும் ரோகிணி கரியப்பா ( சுருதி ஹாசன்) , கல்பனாவின் புராஜக்ட் சரியானது என்று அறிந்து அவளைத் தேட, கிருஷ்ணா பெரும் போராட்டங்களுக்கு பிறகு ரோகிணியிடம் சாவித்ரியைப் பணி புரிய வைக்கிறான். அங்கு சில உயர்சாதி சீனியர் ஆட்கள் ரோகிணியையும் கல்பனாவையும் வளர விடாமல் முட்டுக்கட்டை போட , அதையும் மீறி அவர்கள் புராஜக்ட் வெற்றி அடைகிறது.
அதன் விளைவாக விண்ணுக்கு போகும் நான்கு விண்வெளி வீரர்களில் ஒருவராக கல்பனாவுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. குடும்பங்கள் கொண்டாட, எல்லாரும் மகிழ, விண்ணுக்குப் போன ஒரு ராக்கெட் வானில் எரிந்து அதில் போனவர்கள் செத்துப் போனதை அறிந்த கிருஷ்ணா , ‘தன் மனைவிக்கும் இப்படி ஆகி விட்டால் ..? ‘என்று பயப்படுகிறான்.
விண்ணில் பறக்கும் அவளது லட்சியக் கனவை நிறைவேற்ற இதுவரை முழு முதல் காரணமாக இருந்த கிருஷ்ணாவே , இப்போது அவள் போக வேண்டாம் என்று சொல்ல .நடந்தது என்ன என்பதே இந்த ஆகாயத்தில் ஒரு தாரகை .
உண்மையில் இந்தப் படத்துக்கு இந்தப் பெயரே பொருத்தமில்லாத ஒன்று
ஆகாயத்தில் நட்சத்திரம் இருப்பது அதிசயமா என்ன? ஒரு நட்சத்திரம்தானா? எவ்வளவோ நட்சத்திரம் இருக்கிறதே. அதில் ஒன்று என்பதில் என்ன சிறப்பு?
சாத்தியக் குறைவு கொண்ட ஒரு சூழலில் அல்லது இடத்தில் இப்படி ஒரு பெயர் வந்தால் அது சிறப்பு. உதாரணமாக பகலில் ஒரு நிலவு, இரவில் ஒரு வானவில் , நெருப்பாற்றில் நீல மலர் … இப்படி .
அதை விட்டு விட்டு பகலில் ஒரு சூரியன்,இரவில் ஒரு நிலா, நெருப்பில் ஒரு கனல் , கடலின் ஒரு குடம் நீர் என்று பெயர் வைப்பது எப்படி ஓர் அரைவேக்காட்டுத்தனமான பேரோ அப்படித்தான் ஆகாயத்தில் ஒரு நட்சத்திரம் , ஆகாசம்லோ ஒக தாரா என்பதும் .
1986 ஆம் ஆண்டு தெலுங்கில் வந்த சிம்மாசனம் படத்தில் வந்த ”ஆகாசம்லோ ஒக்க தாரா” என்ற புகழ் பெற்ற பாடலின் முதல் வரி இது என்கிறார்கள். ”ஆகாசம்லோ ஒக்க தாரா நாக்கோசம் ஒச்சிந்தி ஈ வேளா (ஆகாயத்தில் ஒரு தாரகை எனக்காக இந்த வேளை வந்தது ) என்று பூமியில் இருந்து பாடும்போது அந்த வரிக்கு அர்த்தம் கிடைக்கிறது. அடுத்த வரி ”இலாலோ ஒக்க சந்தமாமா (இந்த பூமியில் ஒரு நிலவு)” என்றும் சரியாக வருகிறது
ஆனால் விண்வெளியில் சாதனை படைக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் கதைக்கு, ஆகாயத்தில் ஒரு தாரகை என்ற பெயர் எப்படிப் பொருந்தும் ? ஆகாயத்தில் ஒரு நட்சத்திரமா இருக்கிறது? எந்த அர்த்தத்தில் இந்த பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை.
அதை தவிர்த்த்து விட்டுப் பார்த்தால்…
ஒரு சிறுமிக்கு ஆகாயத்துக்கு போக வேண்டும் என்ற ஆசை வரும் காட்சியே நம்மை படத்துக்குள் இழுத்து விடுகிறது.
மகளை பள்ளிக்கூடம் அனுப்பியதால் ஆணாதிக்க வெறி கொண்ட கணவன் அடித்து விரட்டி விட,மகள் வரும்வரை பயந்து கொண்டு ஒரு கோழி கொடாப்புக்குள் அம்மா ஒளிந்து இருக்கும் காட்சி கண்களை குளமாக்குகிறது.
மகளின் கணவன் முன்னாலேயே மகளையும் மனைவியையும் அடிக்கும் ஒருவன் எப்படிப்பட்ட நபராக இருப்பான் என்ற கேரக்டர் வடிவமைப்பு அபாரம்.
இந்த நேரடியாக சொன்னாலே கூட சிறப்பாகவே வரும். கிருஷ்ணாவை காதலிக்கும் பெண், அதன் வழியே பிளாஷ் பேக் சொல்லி , அந்த காதலையும் மனம் நெகிழும்படி சொல்லி இருக்கும் எழுத்தாளர் இயக்குனர் அணிக்கு பாராட்டுகள்.
மனைவியின் படிப்பை குலைக்க நினைக்கும் அக்காவை கிருஷ்ணா மாற்றும் காட்சியும் அருமை.
புழுதிப் புயலில் சிக்கி போராடி கிருஷ்ணா வந்து நிற்க, தோற்றுப் போய் கல்பனா வெளியே வரும் காட்சி கனம்.
அருகருகே இருந்தும் ரோகிணி கல்பனாவைத் தேடும் காட்சிகள், ரோஹிணிக்கும் கிருஷ்ணாவுக்குமான மது போதை உரையாடல்கள் நைஸ். ரோகிணி கேரக்டரை மிக சிறப்பாக சிறப்பாக எழுதி இருக்கிறார்கள்
விண்வெளிக்காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்கள் அபாரமான தொழில் நுட்பத் தரம்.
கல்பனா கணவனிடம் பேசுவாள் என்று எதிர்பார்த்தால் அவள் தேர்ந்தெடுக்கும் ஆள் யார் என்பது இந்த திரைக்கதையின் சிறப்புக்கு உதாரணம் .
கிளைமாக்ஸ் கவிதை.
சுஜித் சாரங்கின் கேமரா மண், விண் என்று எல்லா இடத்திலும் அசத்துகிறது.
தனது பின்னணி இசையால் படத்தை மேலும் ஓர் உயரத்துக்கு தூக்குகிறார் ஜிவி பிரகாஷ் குமார்
கே எல் பிரவீனின் படத்தொகுப்பு கதையை சிறப்பாக புரிந்து கொள்ள உதவுகிறது.
கல்பனாவாக மிக அற்புதமாக நடித்து இருக்கிறார் அமெரிக்க வாழ் தமிழரான சாத்விகா வீரவல்லி. புதுமையான கேரக்டருக்கு அவர் ஓர் புதுமுக நடிகை என்பது அற்புதமாக பொருந்துகிறது. தோற்றப் பொருத்தம் ,உணர்வுகளை வெளிக்காட்டும் விதம் என்று படத்தை தூக்கித் தங்கியுள்ளார் சாத்விகா,
கிருஷ்ணா கேரக்டரில் ஜஸ்ட் லைக் தட் நடித்து விட்டுப் போகிறார் துல்கர் சல்மான்.
ரோகினி கரியப்பா கேரக்டரில் பின்னிப் பெடல் எடுத்து இருக்கிறார் சுருதிஹாசன். படத்தின் நம்பகத் தன்மைக்காக கொட்டப்பட்டிற்கும் தொழில்நுட்பத் திறமை மற்றும் உழைப்புக்கு இணையான நம்பகத் தன்மையை தனது நடிப்பின் மூலம் கொண்டு வந்து அசத்துகிறார் சுருதி.
சுவாசிகா சிறப்பு.
கல்பனாவின் அம்மாவாக நடித்திருக்கும் மானசி சுதிர்… யாருங்க அவரு? இந்த கேரக்டருக்கே செஞ்சு வச்ச மாதிரி இருக்கிறார். கணவன் மீதான பயம், ஆனால் மகள் படிக்க வேண்டும் என்ற பாசம் , அதற்காக எதையும் தாங்கும் துணிச்சல், ‘உன்னை ஸ்கூலுக்கு அனுப்பிட்டதால அப்பா என் மேல கோபமா இருக்காரு. அப்பாகிட்ட நான் இங்க ஒளிஞ்சு இருக்கேன்னு சொல்லாத அடிப்பாரு” என்று மகளிடம் கெஞ்சும் பாசம் கலந்த அவலம் என்று…. மனசுக்குள் டைரக்ட்டாக இறங்குகிறார் மானசி எழுத்தும் நடிப்பும் ஒரு சேர விஸ்வருபம் எடுக்கும் காட்சி . வாழ்த்துகள் டீம்.
”நீ மதராசியா?” என்று பிஜிலி கேட்கும்போது ;”’ இல்லை இல்லை நான் மேற்கு கோதாவரிக்காரன்” என்று கெத்து காட்டுகிறான் கிருஷ்ணா . ஆனால் அங்கே அவன் வைக்கும் கடையின் போர்டுகள் எல்லாம் தமிழில் இருக்கு. மேற்கு கோதாவரி மாவட்டத்தில் அப்படியா இருக்கு?
டப்பிங் படம்தானே? அவள் கேட்கும்போது ”ஆமா .. காவேரிக்கரை பக்கம்..” என்று தமிழ் கிருஷ்ணா சொல்லக் கூடாதா?
காஞ்சிபுரத்தில் பிறந்து சீன தற்காப்புக்கு கலையின் பிதாமகனான போதி தர்மன் தமிழன் என்ற வரலாற்று உண்மையை ஏழாம் அறிவு படத்தில் சொன்ன நிலையில். அந்தப் படத்தை தெலுங்கில் டப் செய்யும்போது ”போதிதர்மா ஒக்க தெலுகு வியக்தி. அயனா சம்மா சும்மா ரெட்டிக்கி தாத்தக்காரு .” என்று மாற்றி எழுதிக் கொடுத்து சோத்துக்கு சோரம் போன நம்ம ஆட்களுக்கு இதைப் பார்த்தாவது சுரணை வரட்டும்
வேறு வழி இல்லை என்றாலும், திட எரிபொருள், திரவ எரிபொருள், கனமான திரவ எரிபொருள் , பிளாஸ்மா , CPD என்று செமினார் போலப் பயணிக்கும் – படத்தின் ஒரு பகுதி ரசிகர்ளுக்கு போரடிக்கலாம்.
இந்திய விளையாட்டு மற்றும் சயின்டிஃ பிக் படைகளின் டெம்ப்லேட் எனும் முட்டு சந்தில் இந்தப் படமும் சிக்கி இருப்பது பலவீனமே.
இருந்தாலும் புதுமையான கதை,அழுத்தமான காட்சிகள்,ஒரு புதுமுகத்தின் சிறப்பான நடிப்பு, சில கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் உண்மைக்கு நெருக்கமான இருப்பதால் கடைசியில் வரும் பதட்டம்…… இவை இந்த படத்தை ரிஸ்க் என்னும் வளி மண்டலத்துக்கு மேலே தூக்கி விண்ணில் ஏவுகின்றன..
பெண்களையும் படிக்கச் வைக்கலாம். அப்படிப் படிக்க வைக்கும் பெண் மகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. சகோதரியாக மட்டும் இல்லை . மனைவியாகக் கூட இருக்கலாம் என்ற கருத்தியலால் மனசுக்குள் மகுடம் சூடும் படம் இது.
மொத்தத்தில் ஆகாயத்தில் ஒரு தாரகை.. ரசனை மேகத்தில் ஜொலித்து மிதக்கும் வெண்ணிலா